சிம்சோன் பற்றிய கண்ணோட்டம்:

தேவதூதரால் முன்னறிவிக்கப்பட்டுப் பிறந்தவன். பிறப்பிலிருந்தே தேவனுக்கென்று நசரேயவிரதம் கொண்டிருந்தவன். விடுகதை சொல்வதில் சிறந்தவன். இவருடைய தகப்பன் பெயர் மனோவா. சிறு வயதிலிருந்தே கர்த்தருடைய ஆவியானவரின் பலன் அவனுக்குள் செயல்பட்டது பெண்ணின் ஏமாற்றுக் கண்ணீருக்கு இரங்கியவன். பெண்ணாசை கொண்டவன். பெண்களை அடிக்கடி மாற்றும் எண்ணமுடையவன். அந்த மயக்கத்தால் தெலீலாள் தன்னை எதிரிகளிடம் ஒப்படைக்க முயற்சிக்கிறாள் என்று தெரிந்தும், ஆசையின் மயக்கத்தில் அலட்சியம் செய்தான். விநோதமான முறையில் 300 நரிகளைப் பிடித்து அவைகளின் வால்களில் தீப்பந்தங்களைக் கட்டி பெலிஸ்தியரின் வேளாண்மையை அழித்தான்.

கழுதையின் தாடை எலும்பினால் 1000 பேரைக் கொன்றான். ஜெபித்துத் தனது தாகத்துக்குத் தண்ணீர் பெற்றுக் கொண்டான். தனது எதிரிகள் செய்த கொடுமையின் மத்தியில் கர்த்தரை நினைத்தான். ஆண்டவரை நோக்கி ஜெபித்துப் பெலனடைந்து 3000 பெலிஸ்தியரைக் கொண்றான். தேவன் அவனுக்களித்த இஸ்ரவேலை, பெலிஸ்தியரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிக்கத் தொடங்கும் பணியை நிறைவேற்றினான். விசுவாச வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றான். சிம்சோனின் வாழ்க்கை ஊழியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஒரு எச்சரிப்பாகும். பணமோ, புகழோ, இச்சையோ வேறு எதுவும் கர்த்தரை விட்டு பிரிகாதிருப்பதாக. அனுதினமும் கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

சிம்சோனின் பிறப்பு: (நியாயாதிபதிகள் 13 ம் அதி) 

சிம்சோனின் பிறப்பு, ஈசாக்கு, யோசேப்பு, பெஞ்சமின், யோவான்ஸ்நானகன், போன்றவர்களின் பிறப்பைப் போல அற்புதமானது. பிறந்து சாதனை செய்யும் மனிதர் உண்டு. ஒரு சாதனைக்காகப் பிறக்கும் அபூர்வமனிதரும் உண்டு. அத்தகையவர்களில் ஒருவன் தான் சிம்சோன். சிம்சோனின் பிறப்பு ஆச்சரியமாக இருந்த போதும், இவனது வாழ்க்கையானது ஆச்சரியப்படும் விதத்தில் வீழ்ச்சியடைந்தது. இவனது பிறப்பைப் பற்றிக் கூறி ஆசியளிக்கக், கர்த்தருடைய தூதனானவர் ஏசாயா 9 : 6 ல் கூறியதைப் போல அதிசயம் என்றார். அப்படிப்பட்ட அதிசய தேவனால் அதிசயமாக ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தையாகப் பிறந்த சிம்சோன், அந்த தேவனின் உத்தம பாத்திரராய் விளங்கியிருக்க வேண்டும். அவ்வாறு அவன் விளங்கவில்லை. சிம்சோன் பிறக்குமுன் தேவன் அவனை முன்குறித்திருந்தார். 

சிம்சோனின் பெற்றோரும் கர்த்தருடைய தூதனானவரும்: (நியாயாதிபதிகள் 13 : 1 – 24) 

சோரா என்ற ஊரில் தாண் வம்சத்திலுள்ள மனோவா தம்பதியர் பிள்ளையில்லாமல் இருந்தனர். அந்தச் சமயத்தில் கர்த்தருடைய தூதனானவர் மனோவாவின் மனைவிக்குத் தரிசனமாகி “மலடியான நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய் என்றார்.” தூதனானவர் குழந்தை பிறக்கும் வரை ஸ்திரீயானவள் திராட்சைரசமும், மதுபானமும் குடிக்கக்கூடாது என்றும், தீட்டானது ஒன்றும் புசிக்கக்கூடாது என்றும், அவன் தலையின் மேல் சவரகன்கத்தி படலாகாது என்றும், அந்தப் பிள்ளை பிறந்தது முதல் நசரேயனாயிருப்பான் என்றும், அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றும் கூறினார். நசரேயன் என்றால் போதை தரக்கூடிய எதையும், திராட்சை ரசத்தையும் குடிக்கக்கூடாது. தலைமுடியை வெட்டிக்கொள்ளக் கூடாது. நசரேயன் நீண்ட முடியினால் கனவீ னத்தைச் சுமக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். எனவே சவரகன்கத்தி அவன் தலையில் படக்கூடாது. மரித்த சடலத்தின் பக்கத்தில் கூடப் போகக் கூடாது. கர்த்தரிடம் தான் சந்தோஷம் அனுபவிக்கிறவர்களாக இருக்க வேண்டும். கர்த்தரே அவனுக்கு முதன்மையானதாக இருக்க வேண்டும். 

இவைகளை அந்த ஸ்திரீ தன் கணவனிடம் கூறினாள். மனோவாவுக்கு அது கர்த்தருடைய தூதன் என்று தெரியாததால், வெள்ளாட்டுக்குட்டியை சமைத்துக் கொண்டு வருகிற வரை தரித்திருக்கக் கேட்டுக் கொண்டான். ஆனால் அவனது மனைவி அவனிடம் தேவனுடைய மனுஷன் என்னிடத்தில் வந்தார் என்று தான் கூறினாள். கர்த்தருடைய தூதன் அதற்குப் பதிலாக, “ நான் உன் உணவைப் புசியேன்.” நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால் அதை நீ கர்த்தருக்குச் செலுத்து என்றார். மனோவா உம்முடைய நாமம் என்ன என்று கேட்டதற்கு, அவர் அதிசயம் என்றார். மனோவா பலி செலுத்திய போது, அக்கினி ஜூவாலையானது பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்பிய போது, கர்த்தருடைய தூதனானவர் ஜ்வாலையில் ஏறிப் போனதை இருவரும் பார்த்துத் தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கி, வந்தவர் கர்த்தருடைய தூதனானவர் என்று அறிந்தனர். மனோவாவும் அவனது மனைவியும் கர்த்தரிடம் உண்மையாக இருந்தனர் என்று அறிகிறோம். அவள் ஒரு குமாரனைப் பெற்று அவனுக்கு சிம்சோன் என்று பெயரிட்டாள்.

தேவன் தன் ஜனங்களை ஒப்புக் கொடுத்தது: (நியாயாதிபதிகள் 13 : 1)

  1. இஸ்ரவேல் ஜனங்கள் 7 வது முறையாகக் கர்த்தரை விட்டுத் தூரம் போனார்கள்.
  2. எனவே கர்த்தர் அவர்களை 40 வருடங்கள் வரை பெலிஸ்தியரின் கையில் ஒப்புக்கொடுத்தார். (நியாயாதிபதிகள் 13 : 1)
  3. தாவீதின் காலத்தில்தான் பெலிஸ்தியர்கள் கீழ்படுத்தப்பட்டனர். ( 2 சாமுவேல் 8 : 1)

சிம்சோனின் விருப்பமும் தாய் தந்தையரின் ஆலோசனையும்: (நியாயாதிபதிகள் 14 : 1 – 4)

சிம்சோன் திம்னாத்திலுள்ள பெலிஸ்தியரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன், அவளைத் திருமணம் செய்ய வேண்டும் என்று தாய் தகப்பனிடம் கூறினான். சிம்சோன் அந்தப் பெண்ணிடம் தான் அவளை நேசிப்பதாகவும், தான் அவளைத் திருமணம் செய்ய விரும்புவதாகவும் சொல்லவே இல்லை. அவளுடைய தகப்பனிடமும் போய்ப் பேசவே இல்லை. தேர்ச்சி பெறாத மனிதனாகவே சிம்சோன் இருந்ததைப் பார்க்கிறோம். சிம்சோனின் செயல் கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான செயலாக இருந்ததாலும், தங்கள் எதிரிகளிடம் தாங்கள் திருமண உறவு செய்து கொள்ள விரும்பாததாலும் பெற்றோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். சிம்சோன் அவள் தான் என் கண்ணுக்குப் பிரியமானவள் என்று பதில் கூறிவிட்டான். இந்த திருமணத்தின் மூலம் பெலிஸ்தியரைத் திருப்ப முயற்சிக்க நினைத்தான். இந்தச் செயல் பெலிஸ்தியரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்க, ஒரு முகாந்தரம் உண்டாவதற்காகக் கர்த்தரின் செயல் என்று பெற்றோர் அறியாதிருந்தனர். அக்காலத்தில் பெளிஸ்தியர் இஸ்ரவேலை ஆண்டனர்.

சிம்சோனும் சிங்கமும்: (நியாயாதிபதிகள் 14 : 5, 6 – 9)

சிம்சோன் தன் பெற்றோருடன் திம்னாத்துக்குப் போக, முதல் தடவையாகப் புறப்பட்டு, அங்குள்ள திராட்சைத் தோட்டங்களின் பக்கத்தில் வந்த போது கெர்ச்சிக்கிற பாலசிங்கம் அவனுக்கு எதிராக வந்தது. கர்த்தருடைய ஆவியானவர் அவன் மீது பலமாக இறங்கினார். இதேபோல் பலமுறை ஆவியானவர் சிம்சோன் மீது இறங்கினார். அவனுக்கு மிகுதியான உடல் வலிமையையும், ஆற்றலையும் கொடுத்தார். தேவைப்படும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் வந்தார். வல்லமையையும், ஆற்றலையும் தவிர வேறு எதுவும் அவனுக்கு அளித்ததாக வேதத்தில் சொல்லப்படவில்லை. பரிசுத்த ஆவியானவர் அவனிடம் பலமாய் இறங்கியதால் தன் கைகளாலேயே ஆட்டுக்குட்டியைக் கிழித்துப் போடுவது போல் சிங்கத்தைக் கிழித்துப் போட்டான். இதைத் தன் தாய், தகப்பனுக்கு அறிவிக்கவில்லை. ஒரு சிறு கீறல் கூட அவனுக்கு அதனால் ஏற்படவில்லை. பரிசுத்த ஆவியானவரின் பலத்தால் சிங்கத்தைக் கொன்ற முதல் மனிதன் சிம்சோன். 

சிம்சோன். ஆவியானவரின் உதவியினால் தான் இதைச் செய்திருக்க முடியும். சிம்சோன் திராட்சைப் பழங்களை விட்டுத் தூரமாக இருக்க வேண்டியவன், முதலில் அதை மீறி திராட்சைத் தோட்டத்துக்குள் சென்றான். அவன் விவாகம் பண்ணத் தன் பெற்றோருடன் இரண்டாவது தடவை பழைய பாதையில் சென்ற போது, சிங்கத்தின் உடலைப் பார்க்கச் சென்றான். சிங்கத்தின் உடலுக்குள் தேனீக் கூட்டமும், தேனும் இருந்தது. அவன் தன் கைகளால் அதை எடுத்துச் சாப்பிட்டான். தான் சாப்பிட்டது மட்டுமல்லாமல், தன் பெற்றோர்களுக்கும் அதைக் கொடுத்தான். தான் அதை எங்கிருந்து எடுத்தேனென்று தன் பெற்றோர்களுக்குச் சொல்லவில்லை. சிம்சோன் எந்த மரித்த சடலத்தின் பக்கத்திலும் செல்லக்கூடாது. அதைத் தொடவும் கூடாதென்று தூதன் கூறியிருந்தான். அதையும் அவன் மீறினான்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

சிம்சோன் கொடுத்த விருந்து, கூறிய விடுகதை, அதனால் நடந்தவை: (நியாயாதிபதிகள் 14 : 10 – 20)

அங்குள்ள வழக்கத்தின்படி சிம்சோன் பெண் வீட்டில் ஒரு விருந்து செய்தான். அதற்கு வந்தவர்கள் அனைவரும் பெலிஸ்தியர்கள். விருந்துக்கு வந்தவர்களிடம் சிம்சோன் ஒரு விடுகதையைக் கூறி, அதை விடுவிக்க ஏழு நாள் அவகாசம் கொடுத்தான். அந்த விடுகதையை விடுவித்தால், தான் அவர்களுக்கு 30 துப்பட்டிகளையும், 30 மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன் என்றும், விடுவிக்காவிட்டால் அவர்கள் சிம்சோனுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினான். அதற்கு அவர்கள் விடுகதை என்ன என்று கேட்டனர். சிம்சோன் “பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடமிருந்து மதுரமும் வந்தது என்றான். அந்த விடுகதையை மூன்று நாட்கள் வரை அவர்களால் விடுவிக்க முடியவில்லை. கொல்லப்பட்ட சிங்கத்தைக் குறித்தும், அதிலிருந்து எடுக்கப்பட்ட தேனைக் குறித்தும் அறியாமல், யாரும் இந்த விடுகதையை விடுவிக்க முடியாது. விருந்துக்கு வந்திருப்ப வர்கள் அதைக் கண்டுபிடிக்க, அவனது மனைவியின் உதவியை நாடினர். அவள் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றவுடன், அவளையும் அவள் தகப்பனையும் எரித்து விடுவோம் என்று பெலிஸ்தியர் பயமுறுத்தினர். 

அந்தப் பயமுறுத்தலைப் பார்த்து, ஏழு நாட்களும் அந்தப் பெண் அழுது கொண்டே இருந்தாள். அவள் அழுது கொண்டே சிம்சோனிடம் தனக்காவது தெரிவிக்கக் கேட்டவுடன், அவன் அவளிடம் விடுகதையின் விடையைச் சொல்லி விடுகிறான். அவள் அதைத் தன் ஜனங்களுக்குக் கூறிவிட்டாள். அவர்கள் விடையை சிம்சோனிடம் கூறினவுடனே, அவர்கள் யார் மூலம் விடையை அறிந்தனர் என்று புரிந்து கொண்டான். அதனால் சிம்சோன் அவர்களிடம் “என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால் என் விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை” என்றான். இதன் பொருள் என் மனைவி உங்களிடம் கூறவில்லையெனில் இந்த விடுகதையின் விடையை உங்களால் கண்டு பிடிக்க முடியாது என்பது தான். பரிசுத்தஆவியானவர் அவன் மேல் அப்போது இறங்கியதால், அங்கலோன் ஊரிலிலுள்ள 30 பேரைக் கொன்று அவர்களுடைய வஸ்திரங்களைக் கொடுத்து, கோபத்தில் தன் மனைவியைக் கூப்பிடாமல் தான் மட்டும் வீட்டுக்குப் போய்விட்டான்.பெண்ணின் தகப்பன் அவளை மற்றொருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். 

சிம்சோன் பெலிஸ்தியர்களின் வேளாண்மையை அழித்த விதம்: (நியாயாதிபதிகள் 15 : 1 -20)

சிம்சோன் அவனுடைய கோபம் தணிந்த பின் வெகுமதியோடு தன் மனைவியைப் பார்க்கப் போனான். அங்கு அவள் வேறொருவனுக்கு மனைவியாகி விட்டாள் என்றறிந்து கோபமடைந்தான். இதனால் சிம்சோன் பெலிஸ்தியர்களுக்குப் பொல்லாப்பு செய்ய, 300 நரிகளைப் பிடித்து, தீப்பந்தங்களை எடுத்து வாலோடு வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி, வெள்ளாண்மையில் ஓட விட்டு, பெலிஸ்தியரின் வெள்ளாண்மையையும், திராட்சைத்தோட்டங்களை யும், ஒலிவத்தோப்புகளையும் சுட்டெரித்துப் போட்டான். பெலிஸ்தியர்கள் இதைப் பார்த்து, சிம்சோன் தன் மாமனாரிடம் உள்ள கோபத்தில் தான் செய்திருக்கிறான் என்று அறிந்தனர். கர்த்தருடைய ஆவியானவரின் துணை இல்லாமல் இத்தனை நரிகளை வைத்து இந்தச் செயலைச் செய்திருக்க முடியாது. இப்போது சிம்சோன் பெலிஸ்தியர்களைத் தான் பழிதீர்த்துக் கொண்டதாகத் திருப்தி அடைந்தான். இது இஸ்ரவேலரை விடுவிக்கச் செய்த காரியம் அல்ல. இது அவனது தனிப்பட்ட காரியம். தேவன் அவனை எந்த நோக்கத்திற்காகத் தெரிந்து கொண்டாரோ அதை அவன் செய்யவில்லை. தேவனுடைய சித்தத்தின் மையத்தில் இருக்கும் போது தான் அவருடைய சித்தத்தை அறிந்து செயல்பட முடியும் அப்போது தேவனுடைய நாமம் மகிமைப்படும்.

சிம்சோன் பெலிஸ்தியரை சின்னாபின்னமாக சங்காரம் பண்ணியபின் ஏத்தாம் ஊர் கன்மலை சந்தில் குடியிருந்தான். பெலிஸ்தியர் யூதாவுக்கு எதிராகப் பாளையம் இறங்கினர். யூதாவில் உள்ள 3000 பேர் சிம்சோனிடம் பெலிஸ்தியர் தானே நம்மை ஆளுகிறார்கள், ஏன் இவ்வாறு செய்தாய் என்று கேட்டதற்கு, அவர்கள் எனக்குச் செய்தபடி நான் அவர்களுக்குச் செய்தேன் என்றான். யூத ஜனங்கள் சிம்சோனைக் கொல்லாமல், இரண்டு புதுக் கயிறுகளால் கட்டி லேகி வரைக்கும் வந்தனர். பெலிஸ்தியர் அவனுக்கு விரோதமாக ஆரவாரம் பண்ணினார்கள். கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் பலமாய் இறங்கியதால், அவனைக் கட்டியிருந்த கட்டுகள் அறுந்து போயிற்று. அவன் ஒரு கழுதையின் பச்சைத்தாடை எலும்பினால் 1000 பேரைக் கொன்று போட்டான். இதுவும் ஆவியானவரின் பலனில்லாமல் செய்ய முடியாது. ஆனால் அவன் தான் செய்ததாகப் பெருமை பாராட்டுகிறான். அவனுடைய தற்பெருமைக்கு உடனே தண்டனை கிடைத்தது. 

அவ்விடத்திற்கு ராமாத்லேகி என்று பெயரிட்டான். சிம்சோன் மிகுந்த தாகத்தால் சோர்வடைந்து, தோற்கும் நிலமை வந்தபோது, கர்த்தர் தன்னுடைய கையினால் இரட்சிப்பைக் கட்டளையிட்டார் என்று உணர்ந்து, கர்த்தரை நோக்கி ஜெபம் பண்ணினான். தேவன் லேகியிலிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப் பண்ணி, தண்ணீரை வரவழைத்துக் குடிக்கக் கொடுத்தார். அவன் உயிர் திரும்ப வந்தது. அந்த இடத்திற்கு எந்தக்கோரி என்று பெயரிட்டான். அது இந்நாள் வரை லேகியில் உள்ளது. சிம்சோன் பெலிஸ்தியரின் நாட்களில் இஸ்ரவேலை 20 வருஷம் நியாயம் விசாரித்தான். சிம்சோன் தன் மனைவியை இழந்தான். தன் மனைவியின் குடும்பத்தை இழந்தான். மரணத்துக்கேதுவான தாகம் அடைந்தான். இவைகள் அனைத்தையும் அனுபவித்தற்கும், அவனுடைய தோல்விக்கும் காரணம் அவனுடைய இச்சை. சிங்கத்தைக் கிழித்து எறிந்ததைப் போல அவனுக்குள்ளிருந்த பாலியல் இச்சை என்கிற சிங்கத்தை அவனால் வெல்ல முடியவில்லை.

சிம்சோனும், காசா ஊராரும்: (நியாயாதிபதிகள் 16 : 1 – 3)

சிம்சோன் காசாவிலிலுள்ள வேசியிடம் போனான். ஆடையை மாற்றுவது போல பெண்களை மாற்றினான். சிம்சோன் அங்கு வந்திருக்கிறான் என்பதை அறிந்த காசா ஊரார், சிம்சோனை உள்ளே வைத்து பட்டணத்து வாசல் கதவுகளை அடைத்தனர். சிம்சோன் நடுராத்திரியில் எழுந்து கதவு அடைத்திருப்பதைப் பார்த்து பட்டணத்து வாசல் கதவுகளையும், நிலைகளையும் பிடித்து தாழ்ப்பாளோடே பெயர்த்து, தன் தோளின் மேல் வைத்து, எபிரோனுக்கு எதிராக இருக்கிற மலை உச்சிக்கு 40 மைல் சுமந்து கொண்டு போனான்.

சிம்சோனும் தெலீலாளும்: (நியாயாதிபதிகள் 4 – 21)

சிம்சோன் சோராக் ஆற்றங்கரையிலிலுள்ள தெலீலாள் என்னும் பெண்ணோடு சிநேகமாயிருந்தான். அவளிடம் பெலிஸ்தியரின் அதிபதிகள் போய் அவனுடைய பலம் எதனால் உண்டாயிருக்கிறது என்று கேட்கச் சொன்னார்கள். அவ்வாறு சொன்னால் நாங்கள் ஒவ்வொருவரும் 1100 வெள்ளிக்காசு தருவோம் என்றனர். சிம்சோன் இவளையும் திருமணம் செய்யாமல் சிலகாலம் அவளோடு வாழ்ந்தான். 20 வெள்ளிக்காசுக்கு யோசேப்பு விற்கப்பட்டது போல, 30 வெள்ளிக்காசுக்கு யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்தது போல 5500 வெள்ளிக்காசுக்குத் தெலீலாள் மயங்கினாள். சிம்சோனிடம் ரகசியத்தைத் தெரிந்து கொள்ள முயற்சித்த போது, மூன்று முறையும் சிம்சோன் கூறிய தகவலின்படி, அவள் அதை பெலிஸ்தியருக்குக் கூறி அவர்கள் தோல்வியடைந்தனர். முதல் துரோகத்தின் போதே சிம்சோன் அவளைத் தண்டித்து, அவளை விட்டு விலகி இருக்க வேண்டும். 

மூன்று முறை சரியான எச்சரிப்பைப் பெற்ற பின்பும், நாலாவது முறை அவள் கேட்ட போது தன் உயிருக்கு ஆபத்து வந்தாலும், மூன்று முறை துரோகம் செய்தவளை நம்பி உண்மையைக் கூறியிருக்கக் கூடாது. ஆனால் அவன் உண்மையைக் கூறினான். அந்த அளவிற்கு அவனிடமிருந்த இச்சை அவனது அறிவை மறைத்தது. 1 கொரிந்தியர் 6 : 18, 2 தீமோத்தேயு 2 : 22 லும் பவுல் எச்சரித்திருப்பதைப் பார்க்கிறோம். சீறி வந்த சிங்கத்தை வீழ்த்தியவன் பெண்ணின் மடியில் தூங்கிக் கொண்டிருக்கிறான். தெலீலாளின் முயற்சிகள் புற்று நோயாக அரித்து அவனை வீழ்த்தியது. பணத்துக்காக உடலை மட்டுமல்ல, பண்பையும் விற்கும் விலைமகளாக அவள் விளங்கினாள். கோட்டையின் கதவைப் பிடுங்கி வெளியேறிய அவனால் அவளது சதி வலையை கிழித்து வெளியேற இயலவில்லை. சாகத்தக்கதாக சிம்சோன் விசனப்பட்டார். அந்த விஷக்கரங்களில் தம்மை ஒப்புக்கொடுக்கத் துணிந்தார். உண்மையைக் கூறினவுடன் பெலிஸ்தியர்கள் அங்கு வந்தனர். இதுவரை அவர்களது செயல்கள் தோல்வியில் முடிந்தது. 

இப்போது சிம்சோனின் வாயிலிருந்து உண்மையைத் தெரிந்து கொண்டதால் அவனுடைய தலை மயிர் சிரைக்கப்பட்டன. அவனுடைய கண்களைப் பிடுங்கினர். இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டு சிறைச்சாலையில் மாவரைக்க வைத்தனர். சிம்சோனின் பலம் அவனை விட்டுப் போயிற்று. பணத்துக்காக அந்தப் பலசாலியை சிறையாக்கினாள். கண்களால் கெட்டவனின் கண்கள் பிடுங்கப்பட்டன. கர்த்தருடைய பலத்தால் ஆவேசமாக எதிரிகளை பந்தாடிய கைகளை வெண்கல விலங்குகளால் கட்டிப் போட்டனர் கர்த்தரின் கரத்தில் கிரீடமாக விளங்க வேண்டியவன் மாவு அரைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய முடிவு இக்கபோத் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் தேவ மகிமை அவனை விட்டுப் போயிற்று. சிம்சோன் ஒரு தோல்வியின் சின்னம். பரிசுத்தஆவியானவர் அவனைவிட்டு நீங்கும் வரை தன்னுடைய கண்களின் இச்சையின்படி வாழ்ந்தான். எந்த ஒரு படையையும் அவன் உருவாக்கவில்லை. எந்த ஒரு வெற்றியும் அவன் பெறவில்லை.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

சிம்சோனும் தாகோன் கோவிலும்: (நியாயாதிபதிகள் 16 : 23 – 31)

சிம்சோனைத் தேவன் நம் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று பெலிஸ்தியர்கள் தங்கள் தேவனாகிய தாகோனுக்குப் பலி செலுத்தக் கூடினர். பொய்யான தேவனைப் புகழ்ந்தனர். அவர்களின் தெய்வத்தால் சிம்சோன் பிடிபடவில்லை. ஒரு பெண்ணின் துரோகத்தால் பிடிபட்டான். வேடிக்கை காட்டுவதற்கு சிம்சோனை அழைத்து வரக் கூறினர். மாவீரனாகிய சிம்சோன் இப்போது கோமாளியாக நிறுத்தப்பட்டான். எந்தக் கயிரையும் தகர்த்தெறிந்த மாவீரன், ஒரு பெண்ணின் பாசக் கயிற்றால் கட்டுண்டிருந்தான். எந்த ஆயுதமும் துளைக்க முடியாத மார்பை ஒரு பெண்ணின் அலட்டல் ரணப்படுத்தியது. சிம்சோன் தனக்குக் கைலாகு கொடுத்த பிள்ளையாண்டனிடம் வீட்டைத் தாங்குகிற தூண்களில் தான் சாயும்படி, அவைகளை நான் தடவிப் பார்க்கட்டும் என்றான். அவனும் சிம்சோனைத் தூணின் பக்கம் கொண்டு வந்து விட்டான். அந்த இடத்தில் பெலிஸ்தியரின் சகல பிரபுக்களும், வீட்டின் மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய 3000 பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வல்லமை மிக்க நியாயாதிபதி இருளடைந்த கண்களுடன் உன்னத தேவனை நோக்கிப் பார்த்தான். 

மனம் திரும்புகிறவர்களைக் கர்த்தர் ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், பாவத்தினால் இழந்து போன கிருபை வரங்களை உண்மையாக மனந்திரும்புகிறவர்களுக்குத் திரும்பவும் கொடுக்கிறவர் என்பதை இதில் பார்க்கிறோம், இந்த ஒரு விசை மாத்திரம் என்னை நினைத்தருளும், என்னைப் பலப்படுத்தும், என்று சொல்லி, இரக்கத்துடன் வேண்டினான். அதன் விளைவு உடைந்த பாத்திரம் பரிசுத்தஆவியால் நிறைந்தது. தளர்ந்த கால்கள் திடன் கொண்டன. என் ஜீவன் பெலிஸ்தியரோடு மடியக்கடவது என்று கூறி, மிகுந்த பலத்துடன் கூரையைத் தாங்கி நின்ற தூண்களை அசைத்தான். நொறுங்கி விழுந்தது கட்டடம். செத்தனர் 3000 பெலிஸ்தியர். அவர்களோடு அந்த சூரிய வீரரான சிம்சோனும் அஸ்தமானார். இந்த அழிவினால் பெலிஸ்தியர்கள் பல ஆண்டுகள் இஸ்ரவேலுக்கு எதிராக வர முடியாதபடி பலவீனம் அடைந்தார்கள். கர்த்தர் சிம்சோனின் மூலம் தன் நோக்கத்தை அதாவது “இஸ்ரவேலரை பெலிஸ்தியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கத் தொடங்குவான்” என்பதை நிறைவேற்றினார். சிம்சோன் தன்னுடைய கடைசி ஜெபத்தில் கர்த்தர் ஆண்டவர் தேவன் என்ற மூன்று பெயர்களையும் சொல்லி ஜெபித்ததைப் பார்க்கிறோம். சிம்சோன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப் பார்க்கிலும் அவன் சாகும் போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாக இருந்தார்கள். சிம்சோனின் சகோதரரும், அவனுடைய தகப்பன் வீட்டாரும் போய் அவனுடைய உடலை எடுத்து அவனுடைய தகப்பனாரின் கல்லறையில் அடக்கம் பண்ணினார்கள்.

சிம்சோன் பண்ணிய முக்கியமான இரண்டு ஜெபங்கள்: (நியாயாதிபதிகள் 15 : 18, 19, 16 : 28 — 30)

  1. சிம்சோன் கழுதையின் தாடை எலும்பினால் ஆயிரம் பேரைக் கொன்றவுடன், மிகுந்த தாகமடைந்தான். அப்போது கர்த்தரை நோக்கி “தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க , இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழ வேண்டுமோ” என்று ஜெபித்தான். கர்த்தர் லேகியில் உள்ள பள்ளத்தைப் பிளக்கப் பண்ணி தண்ணீரை வரவழைத்தார். அவன் குடித்த போது, அவன் உயிர் திரும்ப வந்தது.
  2. சிம்சோனை தாகோன் கோவிலில் வேடிக்கை காட்ட அழைத்துக் கொண்டு வந்த போது, “கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழி வாங்கும்படிக்கு, இந்த ஒரு விசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும்” என்று ஜெபித்தான். தேவன் அவனுடைய ஜெபத்தைக் கேட்டு பலத்தைக் கொடுத்து, அந்தக் கோவில் கட்டடத்தைக் தரை மட்டமாக்கி அங்கிருந்த பெலிஸ்தியர்களைச் சாகடித்தார்.

இயேசுவும் சிம்சோனும்:

  1. இருவருடைய பிறப்பும் தேவதூதனால் முன்னறிவிக்கப்பட்டது.
  2. இருவரும் கர்ப்பத்தில் இருக்கும் போதே கர்த்தருக்கென்று பிரித்தெடுக்கப் பட்டவர்களாக இருந்தனர்.
  3. இருவரும் நசரேயர்கள்.
  4. இருவரும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் செயல்பட்டவர்கள்.
  5. இருவரும் ஜனங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள்.
  6. இருவரும் தங்களுடைய எதிரிகளை அழித்தனர்.
  7. இயேசு குற்றமற்றவராய் வாழ்ந்தார். சிம்சோன் அப்படி அல்ல.
  8. சிம்சோன் கடைசியாக பெலிஸ்தியரைப் பழிவாங்க வேண்டுமென்று வேண்டினான். இயேசுவோ தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று தன்னை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்த ஜனங்களை பார்த்துக் கூறினார்.

சிம்சோனின் வீழ்ச்சி:

  1. நல்ல ஆன்மீக குடும்பத்தில் சிம்சோன் பிறந்தாலும், தேவ தூதன் அவரைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தாலும், உலகத்தில் தோன்றிய மனிதர்களில் மிகவும் பலசாலியாகக் காணப்பட்டாலும், ஆன்மீக தரிசனம் அடையவில்லை.
  2. தன் வாழ்நாட்களை வீண் பேச்சிலும், செயலிலும் செலவழித்தான். அதனால் கோமாளியாக்கப்பட்டான்.
  3. தேவனின் படைவீரனாகக் கொடுக்கப்பட்ட வலிமையைப் பெரும்பாலும் தமது பாதுகாப்பின் தொடர்பிலேயே பயன்படுத்தினான்.
  4. விருத்தசேதனம் இல்லாதவர்களுடன் உறவு வைத்துச் சேதமடைந்தான்.
  5. இஸ்ரவேலை நியாயத்தீர்ப்பு செய்ய வேண்டியவன், சிறைச்சாலையில் மாவரைத்தான்
  6. பிறந்தது முதல் நசரேயனாக வாழ வேண்டியவன் வழி விலகி நாசமானான்.
  7. ஆவியானவருக்குக் கட்டுப்பட வேண்டியவன், சுய இச்சையில் இழுப்புண்டு வீழ்ந்தான்.
  8. இலட்சியமற்றவராக மாறி, பெண்பித்து என்னும் புதைச்சேற்றில் அகப்பட்டு, தம்மையே காக்க முடியாமல் கலங்கினான்.
  9. புத்தியற்ற நிலமையில் திறமையைச் செலவிட்டதால் பயனற்று மடிந்தான்.
  10. இவனைப் போல ஆசாரியனாக வாழ்ந்த யோவான்ஸ்நானகன், உடல் வலிமையில் சிறந்த சிம்சோனை விட ஒழுக்க வலிமையில் சிறந்தவனாக வாழ்ந்தான். அவரைப் பற்றி இயேசு ஸ்திரீகளில் பிறந்தவர்களில் பெரியவர்” என்று கூறினார்.

ஆவிக்குரிய ஜீவியத்தின் ஆரம்பத்தை சிம்சோனின் வாழ்க்கையுடன் ஒப்பிடுதல்:

ஆவிக்குரிய ஜீவியத்தின் ஆரம்பத்தில், சிம்சோன் சிங்கத்தை எதிர் கொண்டது போல, போராட்டங்களும் துன்பங்களும் வரும். இந்தப் போராட்டங்கள் பல விதமாக இருக்கும். வியாதியாகவோ, இளவயதில் மரணமாகவோ, கடன் பிரச்சனையாகவோ இருக்கலாம். தேவசித்தம் நம்மில் செயல்பட, நம்மை ஆயத்தப்படுத்தத் தேவன் அனேக துன்பங்களை நம்முடைய வாழ்க்கையில் அனுமதிக்கிறார். ஆவிக்குரிய பயணம் ஒரு ராணுவத்தில் சேருவது போல ஒரு மனிதன் ஒரு பயணத்தை மேற்கொள்வது போல, காடுகள் மலைகள் பள்ளத்தாக்குகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். பயங்கரமான சூழ்நிலைகளைக் கடந்து செல்ல வேண்டிய ஒரு பெரும் பயணத்தைத் தொடர்வது போல இருக்கும். சிம்சோன் மீது ஆவியானவர் இறங்கியதால் அதை ஆட்டுக்குட்டியைக் கிழித்துப் போடுவதைப் போல கிழித்துப் போட்டார். 

நமக்கும் போராட்டம் வரும்போது தேவனுடைய ஆவியானவர் நம்மோடு இருப்பதால் இந்தப் போராட்டங்களை அவருடைய பலத்தினால் நாம் சந்திக்க முடியும், என்ற விசுவாசம் நமக்கு வரவேண்டும். அவைகளைக் கண்டு திகைப்போ, மலைப்போ அடைய வேண்டியதில்லை. “பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்றவர் நம்மோடு இருப்பார்” சிம்சோன் பெண்ணைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சியான நேரத்தில் துன்பம் வந்தது. இதே போல் நாம் மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் துன்பம் வரலாம். தேவன் இதை முன்னறிவிக்கிறார். தன்னந்தனியாகச் சிங்கத்தை எதிர்த்ததைப் போல, (அவனுடைய கையில் எந்த ஆயுதமும், உதவிக்கு ஆட்களும் இல்லை) நமக்கும் வருகிற சோதனை, யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாததாக இருக்கலாம். அப்போது நாம் கர்த்தரைச் சார்ந்திருக்கும் போது தேவன் அவர்களை எதிர்க்க ஆவியானவர் மூலம் பலன் தருவார். சிம்சோன் எந்த சிங்கம் தாக்க வந்ததோ, அதே சிங்கத்தின் உடலில் இருந்து தேனை எடுத்துச் சாப்பிட்டது மட்டுமல்லாமல், தன் பெற்றோர்களுக்கும் கொடுத்தான். அதேபோல் நாமும் இரட்சிக்கப்பட்ட உடன், அதை முதலில் குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

முடிவுரை:

ஒரு மனுஷனுக்குள்ளிருந்த நல்லதை மட்டும் எடுக்க வேண்டும். அதுதான் சிம்சோனின் 2 ஜெபங்கள். தேனீ பூக்கள் பக்கம் வந்தாலும் தேனை மட்டும் தான் எடுக்கும். அதேபோல் சிம்சோனின் ஜெபங்கள் ஒரே ஒரு வசனம் தான். அவனுடைய இருதயம் அந்த அளவுக்கு நேராக இருந்தது. தேவனோடு நாமும் அதேபோல் என்னை இரட்சித்தீர், அபிஷேகத்தீர், விசுவாசியாக மாற்றினீர், துன்பங்களைத் தாங்க, போராட்டங்களைச் சந்திக்கக் கிருபை தந்தீர். இந்த ஒரு விசை என்னை நினைத்தருளும் என்று ஜெபம் பண்ண வேண்டும்.

Sis. Rekha

View Comments

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago