தேவகோபத்திற்கான காரணம்:
எண்ணாகாமம் 25 : 1 – 3 “இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள். அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்; ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள். இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.”
கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு வாக்குப் பண்ணியபடி கானான் தேசத்தைக் கொடுத்து விட்டார். இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்தைச் சுதந்தரிக்கத் தொடங்கி விட்டார்கள். தேவனுடைய கூடாரமாகிய ஆசாரிப்புக் கூடாரத்தை சீலோம் என்ற இடத்தில் ஸ்தாபித்து பலிகளும் அங்கு கொடுக்க ஆரம்பித்தார்கள். எலெயாசார் அங்கு ஆசாரியனாயிருந்தான். பினெகாஸ் எலெயாசாரின் மகன். பிரதான ஆசாரியரான ஆரோனின் பேரன். (யாத்திரகாமம் 6 : 25 1 நாளாகமம் 6 : 4, எஸ்ரா 7 : 5 ). இவன் யோசுவாவின் காலத்திலேயே அங்கிருந்ததைப் பார்க்க முடியும் (யோசுவா 22 : 13). அதனால் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் செய்த அற்புதங்கள் அனைத்தையும் பார்த்தவன். பினெகாஸ் என்றால் தைரியமான தோற்றமுடையவன் என்று பொருள். எலெயாசாரின் மரணத்துக்குப் பின் பினெகாஸ் பிரதான ஆசாரியனாயிருந்து இஸ்ரவேலின் காரியங்களை நடத்தினான். இவன் ஒரு வித்தியாசமான மனிதன். தேவனிடம் மிகுந்த பக்தி வைராக்கியம் கொண்டவன். வேறுபாட்டின் ஜீவியத்தைக் காத்துக் கொண்டவன். தேவனின் உக்கிர கோபத்தை நிறுத்தினான். வாதையை நிறுத்தினான். ஜனங்களுக்காகப் போருக்குப் போனான். அப்பொழுது அங்கு உடன்படிக்கைப் பெட்டியின் விசாரணைக்காரனாயிருந்தான். தீமையை வெறுத்தவன். அவன் தேவனுடைய பிள்ளைகளுக்காக நிவாரணபலிகளைச் செலுத்தியவன். மிகவும் தைரியமானவன். தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த விரும்பினான். பரிசுத்த ஆலயத்தின் தட்டுமுட்டுகளைப் பாதுகாத்தான். ஜனங்களுடைய பிரச்சனைகளை விசாரித்தான். பிரச்சனை நேரத்தில் ஜனங்களை ஸ்தோத்தரிக்க வைத்தான். எப்பொழுதுமே கர்த்தருடைய சன்னிதானத்தில் நின்று தேவனுடைய ஆலோசனையைக் கேட்டான்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
பாலாக் என்பவன் இஸ்ரவேலரை சபிக்கும்படி பிலேயாமுக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பினான். ஆனால் அவனால் இஸ்ரவேலரை சபிக்க முடியவில்லை. காரணம் கர்த்தர் அவனிடம் தான் சொல்வதைத்தான் சொல்ல வேண்டுமென்றார். அதனால் பிலேயாம் இஸ்ரவேல் மக்களைத் தேவனிடமிருந்து பிரிக்கச் செய்யும் தன் முயற்சியில் தோல்வியடைந்தான். மோவாபியர்களைத் தூண்டி அவர்கள் இஸ்ரவேல் மக்களின் காம இச்சையைத் தூண்டி, ஒழுக்க நெறிதவறிய மாமிச இச்சைக்குரிய காரியங்களைச் செய்யச் செய்தான். அவர்களுடைய கடவுளை வழிபடச் செய்து, அவர்களைத் தேவனை விட்டுப் பிரிக்க முயற்சிக்குமாறு கூறினான் (எண்ணாகாமம் 31 : 15, 16 2 பேதுரு 2 : 15 யூதா 1, வெளிப்படுத்தல் 2 : 14). இதற்குத் தண்டனையாகப் பிலேயாம் கொல்லப்பட்டான் (எண்ணாகாமம் 31 : 8). அதனால் மோவாபிய தேவர்களுக்குப் பலி செலுத்தி விருந்து வைக்கும் போது இஸ்ரவேல் ஜனங்களை அழைக்கின்றனர். இவர்களும் போய் அவர்கள் தெய்வத்தை வழிபடும் சூழ்நிலை வருகிறது. அவர்களோடு சேர்ந்து வேசித்தனம் பண்ண ஆரம்பிக்கின்றனர். வேசித்தனம் சாத்தான் வருவதற்கு வாசல். இதனால் ஒருவரோடுவர் ஐக்கியம் கொண்டு கலப்பு மணங்கள் நடைபெற்றன. மாயையான விக்கிரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, மெய்யான கர்த்தர் தூரப்படுத்தப்பட்டார். அதனால் தேசத்தில் தேவகோபம் உண்டாகி ஜனங்கள் வாதிக்கப்பட்டனர்.
கர்த்தர் மோசேயிடம் கூறியதும், அங்கு நடந்ததும்:
எண்ணாகாமம் 25 : 4 – 6 “கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய உக்கிரமான கோபம் இஸ்ரவேலை விட்டு நீங்கும்படி நீ ஜனங்களின் தலைவர் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரியனுக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதானத்தில் தூக்கிப்போடும்படி செய் என்றார். அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்ட உங்கள் மனிதரைக் கொன்றுபோடுங்கள் என்றான். அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கையில், அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் ஒரு மீதியானிய ஸ்திரீயைத் தன் சகோதரரிடத்தில் அழைத்துக்கொண்டு வந்தான்.”
பாவம் பாளையத்தில் நிறைந்தபோது தேவகோபம் பற்றியெரிந்தது. கர்த்தர் கோபத்தில் மோசேயிடம் இஸ்ரவேல் ஜனங்களை விட்டு கோபம் நீங்க ஜனங்களின் தலைவர்களைக் கூட்டச் செய்தார். தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்கள் செய்தவர்களை நடுப்பகலில் கர்த்தருடைய சன்னிதானத்தில் தூக்குப்போடக் கட்டளையிட்டார். கர்த்தரின் கட்டளையின்படி இஸ்ரவேலுள்ள நியாயாதிபதிகள் அனைவரையும் அழைத்து பாகால்பேயோரை வழிபட்ட ஜனங்கள் அனைவரையும் கொன்றுபோடக் கட்டளையிட்டார். அதனால் மோசேயும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் ஆசாரிப்புக் கூடாரத்திற்கு முன்பாக அழுது கொண்டிருந்தனர். அதில் பினெகாசும் இருந்தான். அப்பொழுது ஆயிரக்கணக்கில் ஜனங்கள் செத்து வீழ்ந்து கொண்டிருந்தபோதும்
சித்தீமில் சிம்ரி என்ற மாம்ச வெறியன் மோவாபிய ஸ்திரீயை அழைத்துக் கொண்டு வந்தான். வாதை வந்தபின்னும் துணிகரமாக பாவத்தை துணிந்து செய்தான். இதேபோல் எஸ்ராவின் நாட்களில் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடபட்டது. ஆனாலும் ஜனங்கள் கானானியர், ஏத்தியர், பெர்சியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர் என்னும் தேசத்தின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை. இதைக் கேட்ட எஸ்ரா தன் வஸ்திரத்தையும், தன் சால்வையையும் கிழித்து தன் தலையிலும், தாடையிலும் உள்ள மயிரைப் பிடுங்கி அழுதான் (எஸ்ரா 9 : 1 – 3, 10 : 1). அதன்பின் ஜனங்கள் தங்கள் வழிகளை விட்டுத் திரும்பினார்கள்.
பினெகாசின் தீரச் செயல்:
எண்ணாகாமம் 25 : 7 – 9 “அதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன்கையிலே பிடித்து, இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் வேசித்தனம்பண்ணும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்போக அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரில் உண்டான வாதை நின்றுபோயிற்று. அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம்பேர்.” எண்ணாகாமம் 25 : 14, 15 “மீதியானிய ஸ்திரீயோடே குத்துண்டு செத்த இஸ்ரவேல் மனிதருடைய பேர் சிம்ரி; அவன் சல்லூவின் குமாரனும், சிமியோனியரின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவுமாயிருந்தான். குத்துண்ட மீதியானிய ஸ்திரீயின் பேர் கஸ்பி, அவள் சூரின் குமாரத்தி, அவன் மீதியானியருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான்.”
சிம்ரி என்பவன் சிமியோன் வம்சத்தில் உள்ள பிரபு. இவனுடைய தகப்பன் பெயர் சல்லூ. அவன் அழைத்துச் சென்ற மோவாபிய ஸ்திரீயின் பெயர் கஸ்பி. அவளுடைய தகப்பனின் பெயர் சூரி. அவன் மீதியானிய வம்சத்தின் தலைவனாயிருந்தான். சிம்ரி மோவாபிய ஸ்திரீயை அழைத்துக் கொண்டு போவதைப் பார்த்த ஆசாரியனான பினெகாஸ் சபையின் நடுவிலிருந்து எழுந்தான். வாதைக்கான காரண காரியத்தை அறிந்து அதை அகற்ற எழுந்தான். பினெகாஸ் தேவன் மீதுள்ள பக்தி வைராக்கியத்தினால் கோபம் கொண்டு செயலில் இறங்கினான் தேவனின் மீது அவனுக்கிருந்த பக்தி வைராக்கியம் அவனுக்குப் பாவத்தின் மீதிருந்த வெறுப்பையும், நீதியின் மீது அவனுக்கிருந்த அன்பையும் வெளிப்படுத்தியது. இப்பண்புகள் இயல்பாகத் தேவனிடம் காணப்படுபவை. அவர்கள் வேசித்தனம் பண்ணும் அறைக்குப்போய் அவர்கள் இருவருடைய வயிற்றிலும் குத்தி இருவரையும் கொன்று போட்டான். கர்த்தரின் சித்தத்தைச் செய்யத் தைரியம் தேவை. பயமும் திகிலுமுள்ளவர்களால் தேவனுடைய சித்தத்தைச் செய்ய முடியாது. துணிகரமாகப் பாவம் செய்தவர்கள் யாராயிருந்தாலும் தண்டனை உண்டு. இயேசுவின் பிள்ளைகள் எந்தச் சமயத்திலும், எந்த சூழ்நிலையிலும் தைரியத்தை இழக்கவோ, கலங்கவோ கூடாது.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
மோசே கர்த்தரோடு மலையில் ஜெபித்துக் கொண்டிருந்த போது கீழே ஜனங்கள் ஒரு விக்கிரகத்தை உண்டுபண்ணி அதை வணங்கினர். கர்த்தர் மிகவும் கோபம்கொண்டு அவர்களை அழித்துப்போடச் சொன்னார். மோசேயோ திறப்பின் வாசலில் நின்று அவர்களுக்காக ஜெபித்து அவரது கோபத்தை நிறுத்தி விட்டு, கீழே வந்து அவர்கள் செய்த விக்கிரகத்தை அக்கினியால் சுட்டெரித்துப் போட்டார். ஜனங்களைப் பார்த்து கர்த்தர் பக்கம் இருக்கிறவர்கள் மாத்திரம் வாருங்கள் என்கிறார். லேவி கோத்திரத்தார் மட்டும் வந்தனர். மோசே அவர்களைப் பார்த்து அவர்களைக் கொன்று போடச் செய்தார். அன்று ஏறக்குறைய 3000 பேர் செத்தனர் (யாத்திராகமம் 32 : 1 – 35) மோசேயிடமிருந்த இந்த வைராக்கியம்தான் பினெகாஸிடம் வந்தது. நியாயாதிபதிகள் 7 : 3ல் 32000 பேர் யுத்தத்துக்கு வந்தார்கள். அப்பொழுது கர்த்தர் பயமும், திகிலும் போகக்கடவது என்றவுடன் 22000 பேர் திரும்பிப் போய் விட்டனர். தைரியமில்லாதவர்கள் தேவனுடைய பிள்ளைகளோடு நிற்க முடியாது. பினெகாஸ் அவர்கள் இருவரையும் கொன்றவுடன் வாதை நின்றது. அதேபோல் எலிசாவைச் சுற்றிலும் ராணுவம் நிற்பதைப் பார்த்த அவரோடிருந்த கேயாசி பயந்தான். ஆனால் எலிசா “அவர்களோடிருப்பவர்களைக் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” என்று கூறி என்னோடு கூட இருந்தும் இவனுடைய கண்கள் திறக்காமல் குருடாயிருக்கிறதே, இவனுடைய கண்களைத் திறந்தருளும் என்று கர்த்தரை நோக்கி ஜெபம் பண்ணினான். உடனே அவனுடைய கண்கள் திறக்கப்பட்டது. எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும், இரத்தங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதைக் கேயாசி பார்த்தான். எந்த சூழ்நிலையிலும் தேவனுடைய பிள்ளைகள் பயப்டக் கூடாது. மோசே அழுதபோதும், சபை அழுத போதும் வாதை நிறுத்தப்படவில்லை. பினெகாஸ் துணிந்து செய்த போது வாதை நிறுத்தப்பட்டது. அன்று இறந்தோர் 24000பேர். இதிலிருந்து நாம் கற்றுக்கொண்டது அழுகையோடுகூட நீதியின் கிரியைகளும் தான் வாதை நிறுத்தக் காரணமாயிற்று.
கர்த்தர் பினெகாசுக்குக் கொடுத்த வெகுமதி:
எண்ணாகாமம் 25 : 10 – 13 “கர்த்தர் மோசேயை நோக்கி: நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர்மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான். ஆகையால், இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன். அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.” கர்த்தர் மோசேயிடம் தான் கோபத்தில் இஸ்ரவேல் ஜனங்களை நிர்முலமாக்காதபடிக்கு ஆசாரியனான ஆரோனின் குமாரன் எலெயாசாரின் மகன் பினெகாஸ் தன்மேல் உள்ள பக்திவைராக்கியத்தினால் இஸ்ரவேலர்கள் மேல் மூண்ட கோபத்தை திருப்பினான் என்கிறார். அவன் ஜனங்களுக்காக பாவ பிராயச்சித்தம் செய்ததால் 1. கர்த்தர் அவனோடு சமாதான உடன்படிக்கை செய்தார். 2. பினெகாஸ் பக்திவைராக்கியத்தோடு செய்யப்பட்ட செயல் தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது (சங்கீதம் 106 : 28 – 31). ஆண்டவருடைய நீதியைச் செய்ய வைராக்கியம் கொள்ள வேண்டும். 3. மேலும் நித்திய ஆசாரியப் பட்டத்துக்குரிய உடன்படிக்கை அந்த சந்ததிக்கு உண்டாயிருக்கும் என்றார்.
எலியா சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்தி வைராக்கியமாயிருந்தான் (1இராஜாக்கள் 19 : 10). யெகூ கர்த்தரிடம் உள்ள பக்திவைராக்கியத்தினால் சமாரியாவில் ஆகாபுக்கு மீதியான யாவரையும் அழித்துத் தீர்த்தான் (2 இராஜாக்கள் 10 : 16, 17). சங்கீதம் 69 : 9 ல் தாவீது கர்த்தருடைய வீட்டைக் குறித்த பக்தி வைராக்கியம் தன்னைப் பட்சித்தது என்கிறார். இயேசு பிதாவின் வீட்டைக் குறித்த பக்தி வைராக்கியத்தினால் அங்கு வியாபாரம் பண்ணுகிறவர்களை கயிற்றினால் சவுக்கை உண்டு பண்ணித் துரத்தினார் (யோவான் 2 : 15).
பினெகாசின் வேறு செயல்கள்:
கானானை இஸ்ரவேலர் சுதந்தரித்த பின்னர் ஒன்பதரை கோத்திரத்தார் கானானுக்குள் பிரவேசித்தனர். மீதியுள்ள இரண்டரை கோத்திரத்தார் யோர்தானுக்கு அந்தப்புறமுள்ள வயல்வெளியைப் பார்த்தவுடன் கானான் வேண்டாமென்றனர். அவர்கள் யோர்தானுக்கு அப்புறம் இருந்தனர். அவர்கள் தனியாக ஒரு பலிபீடம் கட்டி வேறு கடவுளை வணங்கினர். நியாயப்பிரமாணத்தை மீறினார்கள். இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் அவர்களுக்கு விரோதமாக சீலோவில் கூடினர். அது யோசுவாவின் காலம். அப்பொழுது பினெகாசும் ,பிரபுக்களும் ரூபன் புத்திரரோடும், காத் புத்திரரோடும் பேசி சமாதானம் பண்ணினான் (யோசுவா 22 : 32, 33). பினெகாஸ் இதில் யுத்தமில்லாமல் சமாதானப் படுத்தியதைப் பார்க்கிறோம்.
பென்யமீன் கோத்திரத்தார் கிபியாவிலிருந்து இஸ்ரவேலருக்கு எதிராக வந்து 11000 பேரைத் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள். இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனங்களும் புறப்பட்டு கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும், சமாதானபலிகளையும் செலுத்திக் கர்த்தரிடம் விசாரித்தனர். கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி அந்நாட்களில் அங்கேயிருந்தது. அப்பொழுது பினெகாஸ் கர்த்தரிடம் தங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடு யுத்தம் பண்ணப் புறப்படலாமா வேண்டாமா என்று விசாரித்தான். அதற்குக் கர்த்தர் போங்கள் என்று உத்தரவு கொடுத்தார். கர்த்தருடைய சொல்படி போனதினால் கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாக பென்யமீனை முறியடித்தார். பென்யமீனிலே பட்டயம் உருவுகிற ஆட்களாகிய 25100 பேரை சங்கரித்தார்கள் (நியாயாதிபதிகள் 20 : 25 – 28,35). பினெகாஸ் எதையும் கர்த்தரிடம் விசாரித்துச் செய்ததைப் பார்க்கிறோம். மோசே மீதியானியரோடு யுத்தம் பண்ண தன்னுடைய யுத்த மனிதர்களை அனுப்பும் போது பினெகாசிடம் பரிசுத்த தட்டுமுட்டுகளையும், தொனிக்கும் பூரிகைகளையும் கொடுத்தனுப்பியதைப் பார்க்கிறோம். அவர்களைக் கர்த்தர் வெற்றிபெற வைத்தார். அவர்கள் ஜெயித்து யுத்த மனிதர்களை எண்ணும் போது ஒரு ஆள் கூடக் குறையாதபடி வெற்றி பெற்றனர்.
எப்பிராயீம் மலையில் பினெகாசுக்கு சுதந்தரம் கிடைத்தது (யோசுவா 24 : 33). அங்கு அவனை அடக்கம் பண்ணினார்கள். இன்றைக்கு நீங்களும் நானும் ஆசாரியர்களாக, அழைக்கப்பட்டவர்களாக இருக்கிறோம். நாம் தேவனுடைய பிள்ளைகளாக அவருடைய நாமம் தரிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம். இயேசு சிலுவையின் சிந்தின இரத்தத்தால் மூலம் இரட்சிப்பைப் பெற்றவர்களாக இருக்கிறோம். நாமும் பினெகாஸைப் போல கர்த்தரிடம் பக்தி வைராக்கியமாக இருந்து, அவரது சித்தத்தின்படி செயல்பட நம்மை ஒப்புக் கொடுப்போம். இவரது கல்லறை “நபுலஸ்” என்னும் இடத்திற்குப் பக்கத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…