இயேசுவும் பேதுருவும் வரிப்பணம் பற்றி:
மத்தேயு 17 : 24, 25 “இயேசுவும் பேதுருவும் கப்பர்நகூமில் வந்த போது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான். அவன் வீட்டிற்குள் வந்த போது, அவன் பேசுவதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அன்னியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.”
இந்த அற்புதம் மத்தேயு சுவிசேஷத்தில் மட்டுமே உள்ளது. மற்ற சுவிசேஷங்களில் இல்லை. ஏனெனில் மத்தேயு மட்டுமே ஆயக்காரராக இருந்தார் (மத்தேயு 9 : 9). ஆதலால் அவர் மட்டுமே இதைக் குறிப்பிடுகிறார். இயேசுவும் பேதுருவும் கப்பர்நகூம் வந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது. அதுவரை அவர்கள் வரிப்பணம் செலுத்தாததால், வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவிடம் வந்து உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டனர். அதற்குப் பேதுரு செலுத்துகிறாரென்று பதில் கூறினான். பேதுரு கூறியதிலிருந்து இயேசுவும் எல்லா வரிகளையும் செலுத்தினாரென்று அறிகிறோம். நாமும் வரி செலுத்தத் தவறக்கூடாது பேதுரு வீட்டிற்குள் வந்து இயேசுவிடம் இந்தக் காரியத்தைப் பற்றி பேதுரு கூறுவதற்கு முன்பே இயேசு அவர்கள் பேசியதை அறிந்தவராக சீமோனைப் பார்த்து ராஜாக்கள் வரியை யாரிடம் வாங்குகிறார்கள், அவர்களுடைய பிள்ளைகளிடத்திலா அல்லது அந்நியர்களிடமா என்று கேட்டார். நாம் சொல்லுவதற்கு முன்னமே நம் மனதிலுள்ளதை மற்றவர்கள் நம்மிடம் பேசியதை தேவன் அறிவார் என்பதை இதிலிருந்து அறிகிறோம்.
சங்கீதம் 139 : 4 “என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.” என்று சங்கீதக்காரன் கூறியதையும்,
எபிரேயர் 4 : 13 ல் “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.” என்று கூறியிருப்பதையும் பார்க்கிறோம்.
இயேசு கூறிய வார்த்தை:
மத்தேயு 17 : 26, 27 “அதற்குப் பேதுரு: அன்னியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதை செலுத்த வேண்டியதில்லையே, .ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில் போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்து பார்; ஒரு வெள்ளிப் பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.”
இயேசுவின் கேள்விக்குப் பதிலாகப் பேதுரு, அன்னியரிடத்தில் தான் வரி வசூலிக்கிறார்கள் என்று கூறினான். அதற்கு இயேசு அப்படியானால் பிள்ளைகளாகிய நாம் அதைச் செலுத்த வேண்டியதில்லையே என்றார். மேலும் நாம் அவர்களுக்கு இடறலாயிருக்க வேண்டாம் என்று கூறிவிட்டு, அவர்கள் கையில் பணமில்லாததால் என்ன செய்ய வேண்டுமென்று தெளிவாகப் பேதுருவிடம் கூறுகிறார். பேதுருவைக் கடலுக்குப் போ என்றும், அங்கு தூண்டில் போடு என்றும், அதில் முதலாவது ஒரு மீன் அகப்படும் என்றும், அந்த மீனின் வாயில் ஒரு வெள்ளிப் பணம் இருக்குமென்றும், அந்தப் பணத்தைக் கொண்டு போய் உனக்காகவும் எனக்காகவும் வரி வசூலிப்பவரிடம் கொடு என்றும் மிகத் தெளிவாகக் கூறியதைப் பார்க்கிறோம் இந்த அற்புதம் மீனின் வாயில் வெள்ளிப் பணத்தை சிருஷ்டித்த அற்புதம். இது ஒரு புதுமையான அற்புதம். பேதுருவுக்கு வெள்ளிப் பணத்தோடு ஒரு பெரிய மீனும் கிடைத்தது. கடலில் கோடிக்கணக்கான மீன்களிருந்தும் அந்த மீனை பேதுருவின் துண்டிலுக்கு நேராக நடத்தி அதைத் தூண்டிலில் அகப்பட வைத்தது எத்தனை ஆச்சரியமானது. இதைத்தான் சங்கீதக்காரன் 33 : 9 ல் “அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்” என்கிறார்.
பேதுருவுக்குத் தெரிந்த வேலையைத்தான் இயேசு செய்யும்படி சொல்வதைப் பார்க்கிறோம். பேதுருவுக்குத் தெரியாத வேலையைச் சொல்லவில்லை. இயேசு தான் ஒருவருக்கும் இடலறலாயிருக்கக் கூடாதென்று நினைத்ததையும் இதில் பார்க்கிறோம். தேவன் ஆதாமைப் படைத்த போது ஆதியாகமம் 1 :26 ல் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமி அனைத்தையும் ஆளக்கடவர்கள் என்ற அதிகாரத்தை ஆதாமுக்குக் கொடுத்ததால், சிருஷ்டிகளின் மேலே இந்த அதிகாரத்தை ஆதாம் பெற்றிருந்தான். ஆனால் அவன் பாவம் செய்த போது அதை இழந்தான். அந்த இழந்து போன அதிகாரத்தை இயேசு இதில் மீட்டுக் கொடுத்ததைப் பார்க்கிறோம். பேதுரு அந்த வெள்ளிப் பணத்தைக் கொண்டு போய் இருவருக்கும் வரியைச் செலுத்தினான். இதேபோல் பரிசேயர்கள் தங்களுடைய சீஷரையும், ஏரோதியரையும் இராயனுக்கு வரி கொடுப்பது நியாயமா, இல்லையா? என்று கேட்க இயேசுவிடம் அனுப்பினார். இயேசு அவர்களுடைய துர்குணத்தை அறிந்து காசையும் அதிலுள்ள சுரூபத்தையும், மேலெழுத்தையும் காண்பித்து இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றதை மத்தேயு 22 : 15 – 21 ல் பார்க்கிறோம்.
பேதுருவுக்கு இயேசு தனிப்பட்ட விதத்தில் சில அற்புதங்களைச் செய்ததை வேதத்தில் பார்க்கிறோம். மாற்கு 1 : 29 – 34 ல் பேதுருவின் மாமிக்கு சுகம் கொடுத்தார். லூக்கா 5 : 1 – 7 ல் வெறுமையாக இருந்த பேதுருவின் படகை மீன்களால் இயேசு நிரப்பினார். மத்தேயு 14 : 28 – 29 ல் பேதுருவை கடலில் நடக்கும்படி இயேசு செய்தார். மத்தேயு 26 : 51 ல் பேதுருவினால் வெட்டப்பட்ட மல்குசின் காதை ஓட்ட வைத்தார். பேதுருவுக்கு இத்தனை அற்புதங்கள் நடந்ததால் 1 பேதுரு 5 : 7 ல் “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். இயேசு தனக்கும் பேதுருவுக்கும் தேவையான வரிப்பணத்தைச் செலுத்த வைத்தார். இதில் பேதுருவோடு தன்னையும் இணைத்துக் கொண்டதைப் பார்க்கிறோம். நாமும் வரிப்பணங்களைக் கட்டத் தவறக்கூடாது (யாத்திராகமம் 30 : 13). இதைப் பவுல்,
ரோமர் 13 : 7 “ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.”
என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். இயேசுவிடம் பேதுரு கூறுவதற்கு முன்பே அவர்களுடைய சம்பாஷணையை அறிந்ததைப் போல, ஒரு விசுவாசியின் மன அழுத்தத்தில் ஏற்படும் கலக்கங்களையும், சலனங்களையும் தேவன் அறிந்து அதைத் தீர்த்து வைப்பார். நம்முடைய தேவைகளையும் இயேசு நிறைவாக்குவார். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…