குருத்தோலை ஊர்வலத்தை நான்கு சுவிசேஷங்களிலும் காணலாம். வருஷத்தில் இரண்டு ஞாயிறு முக்கியமானது. ஒன்று குருத்தோலை ஞாயிறு. இன்னொன்று உயிர்த்தெழுந்த ஞாயிறு. லூக்கா 19 : 20 – 44ல் உள்ளதைப் பார்ப்போம். இயேசு ஊழியத்தின் கடைசி நாட்களில் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். இந்த ஊர்வலம் ஒலிவ மலையிலிருந்து பெத்சாயிதா பட்டணத்தின் வழியாக எருசலேமின் தேவாலயத்திற்கு இயேசு செல்கிறதாகும். இந்தப் பயணம் எதற்கென்று சீடர்களால் அறிய முடியவில்லை. இதனுடைய முக்கியத்துவமும் அவர்களுக்குத் தெரியவில்லையென்று 

யோவான் 12 : 16 “இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக் குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.”ல் கூறப்பட்டதிலிருந்து அறியலாம்.

பெத்சாயிதாவுக்கும் எருசலேமுக்கும் உள்ள தூரம் ஐந்து கிலோமீட்டர். அதுவரை இயேசு தமது ஊழியத்தில் நடந்தே சென்றார். இப்பொழுது முதன்முறையாக கழுதைக் குட்டியின் மேல் பவனி வருகிறார். இது பிதா திட்டமிட்ட காரியம். இதை கர்த்தர் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே சகரியா தீர்க்கதரிசியின் மூலமாக, 

சகரியா 9 :9 “சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.” 

என்று கூறினார். இயேசு பெத்தானியாவை சமீபித்த போது தம்முடைய சீஷர்களில் இரண்டு பேருக்கு ஒரு வேலை கொடுக்கிறார். எந்த சீஷர்களுக்கு அந்த வேலை கொடுத்தார் என்று பெயர் குறிப்பிடப்படவில்லை. இயேசு அவர்களிடம் என்ன கூறினாரென்றால், 

லூக்கா 19 : 29 – 31 “அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபித்தபோது, தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி:”

“உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.”

“அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.”

ஊரின் எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போய், இதுவரை ஒருவரும் ஏறாத கழுதைக்குட்டி கட்டி இருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். கழுதைக் குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று யாராவது கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்களென்று சொல்லியனுப்பினார். கழுதைகள் அந்தக்காலத்தில் ஐசுவரியவான்களிடம் அதிகமாக இருக்கும். ராஜாக்கள் அதில் ஏறிச் செல்வார்கள். யுத்தத்தில் ஜெயித்து வெற்றி பெற்றவர்கள் குதிரையில் ஏறி ஊர்வலம் வருவர். சமாதானத்தோடு வருகிறவர்கள் கழுதையின் மேலேறி வருவார்கள். இயேசு வெற்றியுடன் வெள்ளைக் குதிரையின் மேலேறி வருவாரென்று வெளிப்படுத்தல் 19 : 11 ல் பார்க்கிறோம். 

கழுதையானது மிகவும் அசிங்கமான ஒரு மிருகம். நாற்றமடிக்கும் மிருகம். அதனுடைய சத்தம் மிகவும் கொடூரமானது. இதேபோல்தான் நம்மிடமும் தேவனுக்குப் பிடித்தமில்லாத குணங்களும் செயல்களுமிருக்கிறது. அடுத்தாற்போல் அந்தக் கழுதையின் குட்டியை ஆண்டவருக்கு வேண்டுமென்று இயேசு கூறியது போல், இயேசு நம்மையும் அவருடைய சொந்த ஜனமாக, அவருக்கென்று தெரிந்தெடுத்திருக்கிறார். கழுதை எவ்வாறு இயேசுவுக்கு தேவையாயிருந்ததோ, அதே போல் நாமும் இயேசுவுக்குத் தேவையாயிருக்கிறோம். இயேசு கழுதையை அவிழ்த்து வரச் சொல்லாமல், இதுவரை எந்த மனுஷனும் ஏறியிராத கழுதைக்குட்டியாகிய மறியை அவிழ்த்து வரச் சொன்னதைப் பார்க்கிறோம்.

லூக்கா 19 : 35, 36 “அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல்போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.”

“அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.”

சீஷர்கள் கழுதையை இயேசுவிடம் கொண்டு வந்தனர். தங்களுடைய வஸ்திரங்களை அந்தக் கழுதையின் மேல் போட்டு, அதன் மேல் இயேசுவை ஏற்றினார்கள் கழுதை இயேசுவை சுமந்ததைப் போல, நாமும் இயேசுவின் கட்டளைகளை, இயேசுவின் சுவிசேஷத்தை சுமந்து சென்று பிறருக்கு அறிவிக்க வேண்டும். இயேசு போகிற வழிகளெல்லாம் தங்கள் வஸ்திரங்களை விரித்தனர். இது எதைக் குறிக்கிறது என்றால், 2 இராஜாக்கள் 9 : 13ல் யெகூ ராஜாவாகிற போது, ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை விரித்து எக்காளம் ஊதி வரவேற்றனர். அதேபோல் சமாதானத்தின் ராஜாவாகிய இயேசுவை தங்கள் வஸ்திரங்களை வழிகளெல்லாம் விரித்து அழைத்துச் சென்றனர். இயேசுவின் எளிமையான, தாழ்மையான இந்தப் பிரவேசம், அவருடைய ராஜ்ஜியம் இவ்வுலகத்துக்குரியதல்ல என்பதையும், அவர் உலக சாம்ராஜ்யத்தை அதிகாரத்தோடும், வன்முறையோடும் ஆட்சி செய்ய வரவில்லையென்பதையும் நமக்குக் காண்பிக்கிறது. 

லூக்கா 19 : 37, 38 “அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளானகூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு,”

“கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.”

சீஷர்கள் 70 பேருடன் ஆரம்பித்த இந்த ஊர்வலம், எண்ணற்ற ஜனங்களுடன் தொடர்ந்து சென்றது. அந்த ஊர்வலத்தில் நான்கு விதமான கூட்டத்தார்கள் சென்றனர். ஒரு கூட்டத்தார் இயேசு லாசருவை உயிரோடெழுப்பியதையும், குருடர்களைப் பார்வையடையச் செய்ததையும் பார்த்த ஜனங்கள் – புதுமை செய்வதைப் பார்க்க வந்த கூட்டம். இரண்டாவது ரோமர்களின் கீழ் ஆட்சி வந்தததால் அவர்கள் விருத்தசேதனம் பண்ண வேண்டாம் என்றும், பன்றி இறைச்சியை சாப்பிட வேண்டும் என்றும் வேண்டாதவைகளைக் கட்டாயப்படுத்தினர். எனவே இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வேண்டும் என்று விரும்பின ஒரு கூட்டம். மூன்றாவதாக மதத்தலைவர்கள் இயேசுவை ஜனங்கள் உயர்த்தினதால் தங்களுக்கு கிடைக்கும் மதிப்பு இயேசுவுக்குப் போகிறதே என்று பொறாமையால் பின்தொடர்ந்த கூட்டம். நான்காவதாக இயேசுவை நேசித்தவர்கள் அவரை நெருங்கிச் சென்ற கூட்டம். அவர்கள் மிகுந்த சந்தோஷத்தோடு தேவனைப் புகழ்ந்து ஓசன்னா பாடினார்கள். ஓசன்னா என்றால் இயேசுவே இரட்சியும் என்று பொருள். சந்தோஷம் வந்தால் தான் ஆரவாரம் வரும். அவர்கள் இயேசு செய்த சகல அற்புதங்களையும் கண்டதால் சந்தோஷத்தோடு ஆர்ப்பரித்தனர்.

லூக்கா 19 : 39, 40, 41 “அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள்.”

“அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”

“அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,”

கூட்டத்தில் வந்து கொண்டிருந்த பொறாமை பிடித்த பரிச்சேயர்களில் சிலர் இயேசுவைப் புகழ்ந்து, ஓசன்னா பாடி இயேசுவை இரட்சியும் என்று கூக்குரலிட்டதைப் பார்த்து, போதகரே உம்முடைய சீஷர்களை அதட்டும் என்று கூறினார்கள். அதற்கு இயேசு இவர்கள் கூப்பிடாவிட்டால் கல்லுகள் கூட கூப்பிடும் என்று அவர்களுக்குப் பதிலளித்தார். அதன்பின் எருசலேம் நகரத்தை நெருங்கியபோது எருசலேமைப் பார்த்து, அதற்காக இயேசு கண்ணீர் விட்டார். இதற்கு முன் வேதத்தில் இயேசு லாசரு இறந்த போது கண்ணீர் விட்டதைப் பார்த்தோம். இயேசு இங்கே கண்ணீர் விட்டதற்குக் காரணம், அந்த நாளிலிருந்து சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின் நடக்கப் போவதை அவர் அறிந்திருந்ததால் அதை நினைத்துக் கண்ணீர் விட்டார். 

லூக்கா 19 : 42, 43, 44 “உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.”

“உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,”

“உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் வரும் என்றார்.”

கொஞ்ச நாட்களிலேயே இயேசு சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் பண்ணப்பட்டார். உயிர்தெழுந்தார். பரமேறிச் சென்றார். அதன்பின் 30 – 35 ஆண்டுகளுக்குப்பின் கிபி 70 ஆம் ஆண்டில் இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது. ரோம படையினரால் எருசலேம் முற்றுகையிடப்பட்டு, அங்கிருந்தவர்களில் லட்சக்கணக்கான பேர் பட்டினியால் செத்தார்கள். செத்தவர்களின் சடலங்கள் மதிலுக்கு வெளியே எறியப்பட்டன. ரோம தளபதியான தீத்துவின் சேனை எருசலேம் ஊருக்குள் நுழைந்தவுடன் அனேகரைக் கொன்று குவித்தனர். சுமார் ஒரு லட்சம் பேர் சிலுவையில் அறையப்பட்டார். சுமார் ஒரு லட்சம் பேர் அடிமைகளாக விற்கப்பட்டனர். வாங்குவதற்கு ஆளில்லாமல் சுமார் 40 ஆயிரம் பேர் மட்டுமே துரத்தப்பட்டனர். ஒரு சிலர் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். மொத்தம் 11 லட்சத்திற்கும் மேலான யூதர்கள் மடிந்தனர். யூதன் ஒருவனும் எருசலேமில் கால் வைக்கக் கூடாது என்று தீத்துவால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இதேபோல் நம்முடைய வாழ்க்கையிலும் நடக்கும். ஆனால் நாம் கிருபையின் காலத்தில் இருக்கிறபடியால், அன்று எருசலேமை அழிவுக்கு ஒப்புக் கொடுத்ததைப் போல நம்மை அழிவுக்கு ஒப்புக்கொடுக்க தேவன் விரும்புவதில்லை. பல வழிகளில் மீண்டும் நம்மை சேர்த்துக் கொள்ளவே விரும்புகிறார். இதை 

லூக்கா 13 : 34 “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.” என்று கூறியதிலிருந்து அறிகிறோம்.

இயேசுவைப் போல் எருசலேமை பார்த்து மிகவும் அழுதது எரேமியா தீர்க்கதரிசி. இயேசு பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எரேமியா அவனுடைய நாட்களில் எவ்வாறு இருந்ததென்பதை பற்றி கூறிய ஐந்து வசனங்களில் நாம் பார்க்கலாம். 

எரேமியா 4 : 14 “எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு; எந்தமட்டும் அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும். “

எரேமியா 6 : 6 “சேனைகளுடைய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கொத்தளம் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை.”

எரேமியா 6 : 8 “எருசலேமே, என் ஆத்துமா உன்னைவிட்டுப் பிரியாதபடிக்கும், நான் உன்னைப்பாழும் குடியற்ற தேசமும் ஆக்காதபடிக்கும் புத்திகேள்.”

எரேமியா 13 : 27 “உன் விபசாரங்களையும், உன் கனைக்குதல்களையும், வெளியிலே மேடுகளின்மேல் நீ பண்ணின வேசித்தனத்தின் முறைகேடுகளாகிய உன் அருவருப்புகளையும் நான் கண்டேன்; எருசலேமே, உனக்கு ஐயோ! நீ சுத்திகரிக்கப்படமாட்டாயா? இது இன்னும் எத்தனை காலத்துக்குப்பின் நடக்கும்? என்கிறார்.”

எரேமியா 15 : 6 “நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய், ஆகையால் என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப் பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”

எரேமியா தீர்க்கதரிசியிடம் கர்த்தர் கூறிய தீர்க்கதரிசனம் என்னவென்றால், எருசலேம் அக்கிரம நினைவுகளாலும், பொல்லாப்பினாலும், நிறைந்திருப்பதாகவும், இரட்சிக்கப்படும்படிக்கு அவைகள் இருதயத்தை விட்டு நீங்க கழுவப்பட வேண்டும் என்றும், எருசலேமின் உட்புறம் கொடுமைகளால் நிறைந்திருப்பதாகவும், தேவனுடைய புத்தியைக் கேட்டு தேவனைவிட்டு அவர்களுடைய ஆத்துமா பிரியாதபடி இருக்க கர்த்தர் வெளிப்படுத்துகிறார். விபச்சாரங்களையும், வேசித்தனங்களையும், அருவருப்புகளையும் தேவன் கண்டதாகவும் அதனால் சுத்திகரிக்கப்பட்ட வேண்டுமென்றும் கூறுகிறார். தேவன் இவைகளைப் பார்த்து இளைத்துப் போனதால், அதற்கு விரோதமாக தன்னுடைய கைகளை நீட்டி அதை அழித்துப் போடுவேன் என்றும் கர்த்தர் சொல்லுகிறார்.

குருத்தோலை பயணத்திற்கும் கல்வாரி பயணத்திற்கும் உள்ள வேறுபாடு:

  1. குருத்தோலைப் பயணத்தில் ஜனங்கள் மகிழ்ச்சியோடும், ஆரவாரத்தோடும், இயேசுவைப் புகழ்ந்தனர். கல்வாரி பயணத்தில் ஏளனத்தோடும், பரிகாசத்தோடும், நிந்தனையோடும் அவமானப்படுத்தினர்.
  1. குருத்தோலைப் பயணத்தில் கர்த்தாவே இரட்சியும் இரட்சியும் என்று ஆரவாரமிட்டனர். கல்வாரி பயணத்தில் இயேசுவை சிலுவையிலறையும் சிலுவையிலறையும் என்று கூக்குரலிட்டனர்.
  1. குருத்தோலைப் பயணத்தில் வஸ்திரங்களை இயேசுவுக்குக் கீழே விரித்தனர். கல்வாரி பயணத்தில் இயேசுவின் ஆடைகளை உரிந்து நிர்வாணமாக்கினர்.
  1. குருத்தோலைப் பயணத்தில் கழுதை இயேசுவை சுமந்ததது. கல்வாரி பயணத்தில் இயேசு சிலுவையைச் சுமந்து சென்றார்.

குருத்தோலை கொண்டாடுவது நல்லது. வெளிப்படுத்தல் 7 : 9ல் கூறியதைப்போல பரலோகத்தில் நாம் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு சிங்காசனத்திற்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் மிகுந்த சத்தத்துடன் தேவனை நோக்கி துதிகளையும், ஸ்ததோத்திரங்களையும் செலுத்த வாஞ்சிப்போம்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago