தானியேல் தீர்க்கதரிசி

நேபுகாத்நேச்சாரின் இரண்டாவது சொப்பனம்

நேபுகாத்நேச்சார்:

தானியேல் 4 : 1 – 3 “ ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமி எங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதுகிறது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.”

“உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது.” 

“அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்.” 

தானியேலின் நாலாம் அதிகாரம் மட்டும் தானியேல் மூலமாக எழுதப்படாமல் நேபுகாத்நேச்சாரால் எழுதப்பட்டது. வேதத்தில் தேவனை வணங்காத ஒரு அரசன் இதை எழுதியிருக்கிறான். மூன்றாம் அதிகாரத்திற்கும் நான்காம் அதிகாரத்திற்கும் 10 ஆண்டுகள் இடைவெளி இருந்தது. தானியேல் சிறைக்கைதியாக வந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனாலும் தன்னுடைய தேவனை அவன் மறக்கவில்லை. ராஜா தமது வாழ்வில் அனுபவித்த நிகழ்ச்சியை எல்லோருக்கும் விளம்பரப்படுத்துகிறான். கோபக்காரராகிய நேபுகாத்நேச்சார் சமாதானம் கூறுகிறவராக மாறினான். தன்னுடைய 120 தேசங்களுக்கும் ஒரு பிரகடனத்தை எழுதி சாட்சியாக வெளியிட்டான். சமாதானமேயில்லாத ராஜா 2 சொப்பனங்களைக் கண்டு கலங்கினவன். ஆண்டவரால் பாடம் கற்பிக்கப்பட்டபின் தேச மக்களுக்குச் சமாதானம் உண்டாவதாக என்று எழுதுகிறான். தேவனுடைய மாபெரும் செயல்களை யாவருக்கும் அறிவித்தான். பூமியெங்கும் தேவனுடைய புகழைப் பறைசாற்றுகிறான். அவருடைய ஆட்சி என்றுமுள்ளது என்று தலைவணங்குகிறான். உண்மையை ஏற்றுக்கொண்டு தமது வாழ்த்துக்களையும், தாம் அறிந்து கொண்ட உண்மையையும் யாவருக்கும் அறிவிக்க வேண்டுமென்ற ஆவலையும் முயற்சியையும் நேபுகாத்நேச்சாரிடம் பார்க்க முடிகிறது.

ராஜா பார்த்தது:

தானியேல் 4 : 5, 6, 7 “ நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று.” 

“ஆகையால் சொப்பனத்தின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்காகப் பாபிலோன் ஞானிகளையெல்லாம் என்னிடத்தில் கொண்டு வரும்படி கட்டளையிட்டேன்.” 

“அப்பொழுது சாஸ்திரிகளும், ஜோசியரும், கல்தேயரும், குறிசொல்லுகிறவர்களும் என்னிடத்திலே வந்தார்கள்; சொப்பனத்தை நான் அவர்களுக்குச் சொன்னேன்; ஆனாலும் அதன் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கமாட்டாமற்போனார்கள்.”

இப்பொழுது ராஜா ஒரு சொப்பனத்தைக் காண்கிறான். அந்தச் சொப்பனத்தைப் பார்த்தவுடன் அவனுக்கு அது திகிலை உண்டாக்கியது. அவன் பார்த்த தரிசனத்தினாலும், அவனுக்குண்டான நினைவுகளினாலும் மிகவும் கலங்கி நிற்கிறான். காலையில் எழுந்து தான்கண்ட சொப்பனத்தின் அர்த்தத்தைத் தெரிவிப்பதற்காகப் பாபிலோன் ஞானிகளையெல்லாம் கூட்டி வரும்படி கட்டளையிட்டான். ஞானிகளின் ஏமாற்றும் தன்மையையும் அவர்களால் மறைபொருட்களைச் சரியாகத் தெரிவிக்க இயலாதென்பதையும் அறிந்திருந்த ராஜா (2 : 1 — 12), மீண்டும் அவர்களையே வரவழைத்தான். மீண்டும் மீண்டும் ஒரே தவறைச் செய்வது சரியானதல்ல. பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்று நீதிமொழிகள் 28 : 13 ல் பார்க்கிறோம். அப்பொழுது சாஸ்திரிகளும், ஜோசியரும் கல்தேயரும், குறிசொல்லுகிறவர்களையும் அவனிடத்தில் கூட்டி வந்தார்கள். சொப்பனத்தை ராஜா அவர்களுக்குக் கூறினான். ஆனால் அதன் அர்த்தத்தை அவர்களால் தெரிவிக்க முடியவில்லை. இந்த வசனங்களில் நான், ஏன், என்னுடைய என்ற சொற்கள் அதிகமாக வருவதைக் காணலாம். மீண்டும் ஞானிகள் எல்லாம் அழைக்கப்பட்டாலும், சொப்பனத்தின் அர்த்தத்தைக் கூற முடியாததற்குக் காரணம் சொப்பனத்தைக் கொடுக்கிறவரும், அதன் அர்த்தத்தை தெரிவிக்கிறவரும் தேவனே.

ராஜாவும் தானியேலும்:

தானியேல் 4 : 8, 9 “ கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்ஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு, பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் சொப்பனத்தை விவரித்துச் சொன்னதாவது:” 

“சாஸ்திரிகளின் அதிபதியாகிய பெல்ஷாத்சாரே, பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதென்றும், எந்த மறைபொருளையும் அறிவது உனக்கு அரிதல்லவென்றும் நான் அறிவேன்; நான் கண்ட என் சொப்பனத்தின் தரிசனங்களையும் அதின் அர்த்தத்தையும் சொல்லு.”

இந்த ராஜாவுக்கு முதலில் தான் கண்ட சிலையின் சொப்பனத்தையும் அர்த்தத்தையும் சொன்னது தானியேல் தான். இருந்தாலும் தானியேலை முதலில் அழைக்கவில்லை. தன்னுடைய ராஜ்யத்திலுள்ள ஞானிகளையும், ஜோசியரையும், கல்தேயரையும், சாஸ்திரிகளையும், குறி சொல்லுகிறவர்களையும் முதலில் அழைத்தான். அவர்களால் முடியவில்லையென்ற போது தான் தானியேலை ராஜா அழைக்கிறான். தானியேலை ராஜா பார்த்து “சாஸ்திரிகளின் அதிபதியாகிய பெல்ஷாத்சாரே” என்று அழைக்கிறான். “பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறது என்றும், எந்த மறைபொருளையும் அறிவிப்பது உன்னால் முடியும் என்றும் நான் அறிவேன்” என்று தன்னுடைய வாயால் அறிக்கையிடுகிறான். மதத்தலைவர்களும், ஞானிகளும் தோற்று நிற்குமிடத்தில் தேவமனிதனான தானியேலைத் தேவன் நிமிர்ந்து நிற்கச்செய்கிறார். உலக அறிவின் தோல்வி நேரங்களில் தான் தேவஅறிவின் மகிமை வெளிப்படத் தகுந்த வாய்ப்பு ஏற்படும். அதன் பின் தானியேலைப் பார்த்து தான் கண்ட சொப்பனத்தைத் தான் கூறுவதாகவும் அதன் அர்த்தத்தை தெரிவிக்கச் சொல்லிக் கேட்கிறான். முதலில் நேபுகாத்நேச்சார் ராஜா தான் கண்ட சொப்பனத்தை சொல்லவில்லை. ஆனால் இப்பொழுது தான் பார்த்த சொப்பனத்தைத் தானே கூறுகிறான். 

சொப்பனத்தின் விளக்கம்:

தானியேல் 4 : 19 “அப்பொழுது பெல்ஷாத்சார் என்னும் பெயருள்ள தானியேல் ஒரு நாழிகை மட்டும் திகைத்து சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்ஷாத்சாரே, சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ண வேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்ஷாத்சார் பிரதியுத்திரமாக: என் ஆண்டவனே, அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும், அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கக்கடவது.”

தானியேல் சொப்பனத்தைக் கேட்டு ராஜாவையும், ராஜாவின் எதிர்காலத்தையும், நாட்டையும் பற்றியுமுள்ள நியாயத்தீர்ப்பை நினைத்துக் கலங்கினான். இந்த சொப்பனம் ராஜாவினுடைய பகைவரிடத்திலும், அதனுடைய அர்த்தம் ராஜாவினுடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கட்டும், ராஜாவுக்கு நடக்கக் கூடாதென்றார். தானியேலைச் சிறைபிடித்துக் கொண்டுபோனவனும், எருசலேம் தேவாலயத்தையும், பட்டணத்தையும் அழித்தவனும் இந்த ராஜா தான். அதனால் தான் ராஜாவுக்கு வந்தது என்று எண்ணாமல், ராஜாவுக்குத் தேவன் கொடுத்த நியாயத்தீர்ப்பைக் குறித்துத் தானியேல் கலங்குகிறான். அதிசயமான குணாதிசயம் தானியேலிடமிருந்ததைப் பார்க்கிறோம். எரேமியா 29 : 7ல் கூறியபடி “சிறைப்பட்டுப்போன பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி கர்த்தரிடம் விண்ணப்பம் பண்ணுங்கள்.” என்று கூறப்பட்ட சத்தியத்தின்படி தானியல் நடப்பதைப் பார்க்கிறோம். மரியாதையாக ராஜாவைப் பார்த்து “என் ஆண்டவனே” என்று அழைக்கிறான். ஏதோ ஒரு காரியத்திற்காகத் தேவன் தன்னை நேபுகாத்நேச்சாரிடம் அனுப்பியிருக்கிறார் என்பதை உணர்ந்திருப்பான். 

தானியேல் 4 : 20 – 22 “நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தம் காணப்பட்டதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.”

“அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின்கீழே வெளியின் மிருகங்கள் தங்கினது, அதின் கொப்புகளில் ஆகாயத்து பட்சிகள் தாபரித்தது.”

“அது பெரியவரும் பலத்துவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தாமே; உமது மகத்துவம் பெருகி வானபரியந்தமும், உமது கர்த்தத்துவம் பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கிறது.”

 தானியேல் அதனுடைய அர்த்தத்தைத் தெரிவிக்க ஆரம்பித்தான். ராஜாவின் சொப்பனத்தில் வானளாவ உயர்ந்து, பூமியனைத்தையும் மூடப்படக்கூடிய அளவு பார்த்த பெரிய மரமானது உம்மையும், உம்முடைய பட்டணத்தையும், ராஜ்ஜியத்தையும் குறிக்கிறது. அதன் நிழலிலே மிருகங்களும் கிளைகளிலே பறவைகளும் தங்கியிருந்ததைப் போல உம்முடைய அரசின் கீழ் அடங்கியிருந்தவர்களும் ஆசீர்வாதத்தை பெற்றவர்களும் உண்டு. ராஜா மகாப்பெரிய ராஜாவாக வளர்ச்சி அடைந்திருந்தான். அந்நாட்களில் உலகம் அனைத்திற்கும் அறியப்பட்ட ஆளுநராயிருந்தான். நேபுகாத்நேச்சாரை மரத்துக்கு ஒப்புமைப்படுத்தி தேவன் பேசுகிறார். ராஜாவையும் ராஜ்ஜியத்தையும் நாம் பிரிக்க முடியாது.

இதன் விளக்கம் வேதத்தில் மரமென்பது தனி மனிதனைக் குறிக்கிறதாக இருக்கிறது. இதை சங்கீதம் 1 : 3லும், எரேமியா 17 : 8லும், ஏசாயா 11 : 1லும் 56 : 3லும் பார்க்கலாம். இரண்டாவதாக மரமானது ஒரு தேசத்தைக் குறிக்கிறதாகவும் இருக்கிறது. இதை எசேக்கியேல் 3 : 3 — 14. மத்தேயு 24 : 32, 33லும், 13 : 31, 32லும் காணலாம். கடுகு மரமானது இன்றைய கிறிஸ்தவ உலகத்தைக் குறிப்பதாகவும், ஒலிவமரமானது இஸ்ரவேல் மக்களைக் குறித்தும், இஸ்ரவேலரல்லாதவர்களைக் குறித்தும் வேதத்தில் கூறப்பட்டிருப்பதை ரோமர் 11 : 16 — 21 ல் காணலாம்.

தானியேல் 4 : 23 – 25 “இந்த விருட்சத்தை வெட்டி, இதை அழித்துப் போடுங்கள்; ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டுமென்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; ஏழு காலங்கள் அவன் மேல் கடந்துபோகுமட்டும் மிருகங்களோடே அவனுடைய பங்கு இருக்கக்கடவதென்றும், வானத்திலிருந்து இறங்கிச் சொன்ன பரிசுத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே.” 

“ராஜாவே, அதின் அர்த்தமும் ராஜாவாகிய என் ஆண்டவன்பேரில் வந்த உன்னதமானவருடைய தீர்மானமும் என்னவென்றால்: மனுஷரினின்று தள்ளப்படுவீர்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பீர்; மாடுகளைப் போல புல்லைமேய்ந்து, ஆகாயத்துப்பனியிலே நனைவீர்.” 

“உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்ஜியத்தில் ஆளுகைசெய்து, தமக்கு சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடைய பேரில் கடந்து போக வேண்டும்.” 

ராஜா பார்த்த காவலாளனாகிய பரிசுத்தவான் என்பது தேவனால் உருவாக்கப்பட்ட ஒரு சிருஷ்டியைக் குறிக்கிறது. இந்த உலகத்தின் காரியங்களை அவர்கள் செயல்படுத்துகிறவர்களாக இருந்தார்கள். இப்படிப்பட்டவர்கள் உலகத்தை ஆளும்படியாகத் தேவன் வைத்திருந்தாரென்பதை அறிகிறோம். இதைப்போலவே சாத்தானும் தன்னுடைய படையை வைத்திருந்தான். இந்தக் காவலாளிகள் எல்லாவற்றையும் பார்க்கக் கூடியவர்களாகவும், கேட்கக் கூடியவர்களாகவும் இருந்தனர். நம்முடைய இரகசிய பாவங்களையும், இந்தக் காவலாளிகள் அறிந்தவர்கள். இதில் காணப்பட்ட மரம் வளர்ந்து உயர்ந்திருந்தது. காவலாளனாகிய அவன் கூறியது ராஜாவாகிய அந்த மரம் வெட்டப்படப்போவதைக் குறிக்கிறது. 

அந்த மரம் வெட்டப்பட்டாலும், அதன் அடிமரம் பூமியில் இருக்குமென்றும், தேவன் ராஜாவை தாழ்த்தப் போகிறார் என்றும் தானியேல் கூறினான். ராஜாவின் இருதயமானது ஒரு மிருகத்தின் இருதயத்தைப் போல் மாற்றப்படுமென்றும், ராஜா ஏழு ஆண்டுகள் மிருகங்களின் உலகத்தில் வாழ வேண்டுமென்றும், தான் யார் என்பதைக் கூட அறியாதவனாக, ராஜா இரும்பும் வெண்கலமுமான விலங்கிடப்பட்டு அரண்மனையை விட்டு வெளியே விரட்டப்பட்டு பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப்பனியிலே நனைவீரென்றும் தானியேல் கூறினான். உன்னதமானவர் மனுஷனுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்வார். தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுப்பார். எல்லாமே தேவனுடைய கரங்களில் தான் உள்ளது என்றும் ஏழு வருடங்கள் கழிந்து, உணர்ந்து கொண்டபின் திரும்பவும் ராஜ்யபாரம் உமக்கு அளிக்கப்படும் என்றும் விளக்கினான்.. 

தானியேல் கூறிய ஆலோசனை 

தானியேல் 4 : 27 “ஆகையால் ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றான்.”

இதுவரை தானியேல் சொப்பனத்தின் அர்த்தத்தை கூறினான். இப்பொழுது ராஜாவுக்கு ஆலோசனை கூறுகிறான். என்ன ஆலோசனை என்றால், ராஜாவினுடைய பாவங்களையும், அகற்றி விட்டு மனந்திரும்ப வேண்டும் என்றும், ஏழைகளுக்கும், சிறுமையானவர்களுக்கும் இரங்க வேண்டுமென்றும், அக்கிரமங்களையெல்லாம் அகற்றிவிட வேண்டும் என்றும் கூறினான். அவ்வாறு ராஜா செய்யும்பொழுது ராஜாவினுடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றும் ஆலோசனை கூறினான். நாமும் ஒவ்வொருவரும் இதைக் கடைபிடிக்க வேண்டும்.

நேபுகாத்நேச்சாரின் பெருமை: 

தானியேல் 4 : 29 – 31 “ 12 மாதம் சென்றபின்பு ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக் கொண்டிருக்கும்போது::

“இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.”

“இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னை விட்டு நீங்கிற்று.”

நேபுகாத்நேச்சார் ராஜாவுக்கு எச்சரிப்பு கொடுத்து, ஒரு வருடம் தேவன் தவணையும் கொடுத்தார். ஆண்டவர் யாருக்கும் எச்சரிப்பு கொடுக்காமல் ஒரு காரியமும் செய்வதில்லை. ஒரு வருடத்திற்குப் பின்பும் ராஜா மனந் திருந்தாமல், தன் இருதயத்தைக் கடினப்படுத்தினார். ராஜா தன்னுடைய அரண்மனையின் மேல் மாடியில் உலாவிக் கொண்டிருக்கும் போது, பாபிலோனைப் பார்த்து பெருமையாக “நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா” என்று கூறினான். அந்த வார்த்தை வாயிலிருக்கும் போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது, “ராஜாவின் ராஜ்யபாரம் நீங்கிற்று” என்று உரைத்தது. அந்த நிமிஷத்திலே தேவன் அவனை அடித்ததால், அரண்மனையில் ஆட்சி செய்த அந்த மன்னன் காட்டில் அலைந்து திரியும் மிருகத்தைப் போல் மாற்றப்பட்டு பைத்தியக்காரனானான். ஆகாயத்துப்பனியில் நனைந்து பயங்கரமான தண்டனையை அனுபவித்தான். 

ராஜாவுக்கு கொடுக்கப்பட்ட அனைத்தும் தேவனுடைய கிருபை என்று அப்பொழுது அவனுக்குத் தெரியவில்லை. நியாயத்தீர்ப்பின் பரம அதிகாரத்தை அறியும் வரை ராஜாவுக்கு இந்த நிலை நீடித்தது. ராஜாவின் பெருமையால் இது நடந்தது. லூசிபரின் பெருமையால் பரலோகத்திலிருந்த அவனை நரகத்தில் தேவன் தள்ளியதைப் போல ராஜாவையும் மிருகமாக மாற்றியது. “தேவன் பெருமை உள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார் தாழ்மை உள்ளவர்களுக்கும் கிருபை அளிக்கிறார்” என்று யாக்கோபு 4 : 6லும், 1பேதுரு 5 : 5 லும் பார்க்கிறோம்.

 ஏழு வருடத்திற்கு பின் நடந்தது: 

தானியேல் 4 : 34, 36, 37 “அந்த நாட்கள் சென்ற பின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.”

“அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பி வந்தது; என் மந்திரிமாரும் என் பிரபுக்களும் என்னைத் தேடி வந்தார்கள்; என் ராஜ்யத்திலே நான் ஸ்திரப்படுத்தப்பட்டேன்; அதிக மகத்துவமும் எனக்குக் கிடைத்தது.”

“ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.”

ராஜாவின் பயங்கரமான ஏழு ஆண்டுகள் நிறைவேறிய பின்பு தன்னுடைய கண்களை பரலோகத்திற்கு நேராக ஏறெடுத்து, மனந்திரும்பிய போது, ராஜாவின் புத்தி திரும்ப வந்தது. கர்த்தரை ஸ்தோத்தரித்தான். தேவனுடைய சமூகத்தில் தன்னை ஒப்புக் கொடுத்தான். தேவனைப் புகழ்ந்தான். மகிமைப் படுத்தினான். தன்னுடைய எல்லா காரியங்களையும் அர்ப்பணித்தான். தேவனுடைய பரம அதிகாரத்தை அறிந்த பின்புதான், ராஜாவின் புத்தி திரும்ப வந்தது. தேவன் மந்திரிமார்களும், பிரபுக்களும் அவனைத் தேடிவரச் செய்தார். ராஜா தன்னுடைய வாயால் தேவனுடைய கிரியைகள் அனைத்தும் சத்தியமாயிருக்கிறது என்றும், அவருடைய வழிகள் அனைத்தும் நியாயமான வழிகள் என்றும் கூறினார். அகந்தையாய் நடக்கிற யாராக இருந்தாலும் தாழ்த்த அவராலே ஆகும் என்று சாட்சியாக எழுதினார்.

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்:

நேபுகாத்ராஜாவின் சொப்பனத்திலிருந்து மூன்று காரியங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 

  1. உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்கிறார். தேவன் இந்த உலகத்தில் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். சில குறிப்பிட்ட காரணங்களினால் இன்று தங்கள் இஷ்டம் போல் விளையாட தேவன் அனுமதித்திருக்கும் ஒவ்வொரு ராஜ்யமும், தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு நேராக கடந்து சென்று கொண்டிருக்கிறது.
  2. தேவன் அவருக்குச் சித்தமானவனுக்கு தன்னுடைய ஆளுகையைக் கொடுக்கிறார். எனவே யாரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தைக் குறித்து பெருமை கொள்ளாமல் தேவனுடைய சித்தத்தினால் கிடைத்திருக்கிறது என்று கூற வேண்டும்.
  3. மனுஷரில் தாழ்ந்தவனையும் தேவன் அதிகாரி ஆக்குகிறார்.
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago