மோசே:
யாக்கோபின் மகனான லேவியின் முதிர் வயதில் பிறந்த மகள் யோகெபேத். லேவியின் குமாரனான கோகாத்தின் குமாரனான அம்ராத்தைத் திருமணம் செய்து கொண்டாள் (யாத்திராகமம் 6 : 20). அம்ராம், யோகெபேத் தம்பதியருக்கு முதலில் ஆரோன், மிரியாம் என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர். எகிப்தில் யோசேப்புக்குப் பின் யோசேப்பை அறியாத ஒரு பார்வோன் வந்து இஸ்ரவேல் ஜனங்களைக் கொடுமைப்படுத்தி அடிமைகளாக நடத்தினான். அவன் தங்கள் தேசத்துக்கு எதிராக இந்த ஜனங்கள் திரும்பி விடுவார்கள் என்றெண்ணினான். எனவே அந்தப் பார்வோன் இஸ்ரவேலருக்கு ஆண்பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளையைக் கொன்று முதலைகள் நிறைந்த நைல் நதியில் போடக் கட்டளையிட்டான் (யாத்திராகமம் 1 : 22). அந்தச் சமயத்தில் இந்தத் தம்பதிகளுக்கு மூன்றாவது பிள்ளையாக மோசே பிறந்தான். பார்வோனின் கட்டளைப்படி பிறக்கிற ஆண் பிள்ளைகளைக் கொன்று நைல்நதியில் போட்டனர். இது தெரிந்தும் மோசேயின் தாய் குழந்தையின் அழகைப் பார்த்து மூன்றுமாதங்கள் ஒழித்து வைத்துக் காப்பாற்றினாள். அப்போஸ்தலர் 7 : 20 ல் மோசே திவ்விய சௌந்தரியமுள்ளவன் என்று கூறியதைப் பார்க்கிறோம்.
அந்தத் தாயின் செயல் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது. அவளது விசுவாசம் அவளுக்கு இதைச் செய்யும்படியான தைரியத்தைக் கொடுத்தது. அது இஸ்ரவேல் ஜனங்களின் விடுதலை பெறக் காரணமான மோசே உயிர்தப்புக் காரணமாயிற்று. . இந்தத் தம்பதியினர் லேவி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆதலால் அவர்களுக்குத் தேவ அறிவு இருந்தது. அதன்பின் குழந்தையை மறைத்து வைக்க முடியாமல் நாணல் பெட்டியை எடுத்துத் தண்ணீர் அதற்குள் வராமலிருக்க பிசினும், கீலும் பூசி அந்தப் பெட்டிக்குள் குழந்தையை வைத்து (யாத்திராகமம் 2 : 3) நைல் நதியின் ஓரத்தில் உள்ள நாணல்களுக் குள்ளே வைத்தாள். நோவா இதேபோல் ஒரு பேழை செய்து அதன் உட்புறமும், வெளிப்புறமும் கீல் பூசினான் என்று ஆதியாகமம் 6 : 4 ல் பார்க்கிறோம். மோசேயின் தாய் அந்தக் குழந்தையைப் பெட்டியினுள் வைக்கும் போது தேவனை நினைத்திருப்பாள். அதனால் கர்த்தர் குழந்தையைக் குறித்து அவர் வைத்திருந்த சித்தத்தை நிறைவேற்ற வழிகளை உண்டு பண்ணினார் (நீதிமொழிகள் 3 : 6). அப்பொழுது மிரியாமுக்கு எட்டு வயது இருந்திருக்கலாம்.
மிரியாம்:
மிரியாமோ தன் தம்பிக்கு என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கத் தூரத்தில் நின்று கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் கர்த்தர் பார்வோனின் குமாரத்தியைக் குளிக்க வரவழைத்தார். அங்கு நாணல்களுக்குள்ளே இருக்கிற பெட்டியை அவர்கள் பார்த்தனர். பார்வோனின் குமாரத்தி அந்தப் பெட்டியை எடுத்து வரக் கூறினாள். தாதிகள் அதை எடுத்துத் திறந்த போது பிள்ளை அழுதது. அந்தச் சத்தத்தைக் கேட்டு இரக்கமுற்றாள். அது அழகான எபிரேயக் குழந்தை என்று தெரிந்தது. எப்படியென்றால் மோசேயின் நியாயப்பிரமாணத் தின்படி அந்தக் குழந்தைக்கு எட்டாவது நாள் விருத்தசேதனம் பண்ணப் பட்டிருந்தது. தான் வளர்க்க நினைத்தாள். அப்பொழுது மிரியாம் தைரியமாகப் பார்வோனின் குமாரத்தியிடம் சென்று பால் கொடுக்கிற ஒரு எபிரேய ஸ்திரீயை அந்தப் பிள்ளையை வளர்க்க அழைத்துக் கொண்டு வரட்டுமா? என்று துணிச்சலுடன் கேட்டாள் (நீதிமொழிகள் 25 : 11). அந்தப் பெண் சம்மதம் தெரிவித்தவுடன் தன்னுடைய அம்மாவையே அந்த இடத்துக்கு அழைத்துக் கொண்டு வந்தாள். 2 பேதுரு 1 : 5 ல் கூறியபடி அவளுடைய விசுவாசமே அவளுக்கு அந்தத் தைரியத்தைக் கொடுத்தது. மிரியாமிடம் நேரத்துக்குத் தக்க செயல்படும் தன்மை, ஞானம், சுறுசுறுப்பு, கரிசனை, சமயோகித புத்தி காணப்பட்டது. தன்னுடைய சகோதரனின் ஜீவன் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணம்தான் அப்பொழுது அவளிடம் இருந்திருக்கிறது. அந்தப் பெண் அந்தத் தாயிடம் பேசி வளர்க்கச் சம்பளம் தருவதாகக் கூறிக் குழந்தையை அவர்களிடமே கொடுத்தனர் (யாத்திராகமம் 2 : 1 – 9).
மிரியாமுக்கு மோசேயைவிட 5 அல்லது 10 வயது அதிகம் இருந்திருக்கலாம். தாவீது தன்னுடைய 27 : 1 ம் சங்கீதத்தில் கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் யாருக்கு அஞ்சுவேன்?” என்று கூறினதைப் போல மிரியாம் செயல்பட்டாள். கர்த்தர் சிறுபிள்ளைகளைக் கூடத் தனது சித்தம் செயல்படப் பயன்படுத்துவார் என்று இதிலிருந்து அறிகிறோம். அங்கே மோசே வளர்ந்து வாலிபனான பின் ஒரு எகிப்தியனைக் கொலை பண்ணி, அதனால் பார்வோனுக்குப் பயந்து தனது 40 வது வயதில் எகிப்திலிருந்து மீதியான் தேசத்துக்குப் போனான் (யாத்திராகமம் 2 : 11 – 15). யோகெபேத் கர்த்தரிடம் வைத்திருந்த அன்பும், விசுவாசமும்தான் அவளுடைய பிள்ளைகள் மூவரையும் பாக்கியசாலிகளாய், வருங்காலத் தலைவர்களாய் மாற்றியது. ஒவ்வொரு தாயும் தங்களுடைய பிள்ளைகளை உருவாக்கும் சிற்பி. மிரியாம் ஒரு சிறந்த பாடகி, தீர்க்கதரிசினி, நன்றியோடு ஆராதனை செய்பவள். பாடகர்களின் தலைவியாக இருந்து பெண்களை வழிநடத்தினவள். ஆரோன் இஸ்ரவேலரின் முதல் பிரதான ஆசாரியன். ஆசாரியர்களை உருவாக்கும் தலைவனாகவும் இருந்தான். மோசேயோ இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்து, கானானுக்கு வழிநடத்திய தலைவன். சீனாய் மலையில் கர்த்தருடைய சமூகத்தில் தேவனுடைய கட்டளைகளாகிய நியாயப் பிரமாணத்தின் பத்து கட்டளைகளைப் பெற்றவன்.
மிரியாமின் ஆராதனை:
இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்தில் வழிநடத்தி கானானுக்கு அழைத்துச் செல்ல மோசேயைத் தேவன் அவனுடைய 80 வது வயதில் பயன்படுத்தினார். அதற்குள் மிரியாமுக்குத் திருமணமாகி பேரன்களையும் எடுத்து விட்டாள். அவளுடைய பேரன் ஆசாரிப்புக் கூடாரத்தின் வேலைகளைச் செய்தான். மோசேயுடன் ஆரோனும், மிரியாமும் கூடவே சென்றனர். இதைத்தான் மீகா 6 : 4 ல் கர்த்தர் எகிப்து தேசத்திலிருந்து ஜனங்களை மீட்க மோசே, ஆரோன், மிரியாம் என்பவர்களை உங்களுக்கு முன்பாக அனுப்பினேன் என்றார். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை ஆராதிப்பதற்காகவே விடுதலை செய்யப்பட்டனர் (யாத்திராகமம் 4 : 22, 23). அடிமைகளாக இருக்கும் போது அவர்களால் தேவனை ஆராதிக்க முடியவில்லை. விடுதலை பெற்று செங்கடலைக் கடந்த பின்னர் மாராவுக்கு வந்து சேருகின்றனர். அங்கு ஜனங்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்தனர்.
அங்கு கர்த்தரின் உதவியால் தண்ணீர் மதுரமாக மாறிய பின், அவர்கள் மிரியாமுடன் சேர்ந்து தேவனைப் புகழ்ந்து பாடி ஆராதித்தனர் (யாத்திராகமம் 15 : 1 – 8). மிரியாம் தம்புராவோடும், அதே போல் சகல ஸ்திரீகளும் தம்புராவோடும், நடனத்தோடும் மிரியாமுக்குப் பின்னே ஆடிப்பாடித் தேவனைப் புகழ்ந்து பாடினர். கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார் என்றும், குதிரையையும், குதிரை வீரரையும் கடலில் தள்ளினார் என்றும் பாடினார்கள் மிரியாம் ஒரு தீர்க்கதரிசினி. இவள் மிகவும் அன்பானவள். மற்ற ஸ்திரீகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தாள். வேதத்தில் மிரியாம் மட்டுமல்ல, தெபொராள், உல்தாள், பிலிப்புவின் குமாரத்திகள் போன்ற பெண்கள் தீர்க்கதரிசினியாக இருந்திருக்கின்றனர். மிரியாம் கர்த்தரைத் தேடுவதில் உற்சாகத்துடன் காணப்பட்டாள். தேவன் நம் எல்லோரையும் படைத்ததற்குக் காரணமே அவரைத் துதிக்க வேண்டுமென்பதற்குத்தான். நாம் தேவனைப் புகழ்ந்து பாடித் துதிக்கும் போது, கர்த்தர் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்.
மிரியாமின் பொறாமை:
மிரியாமுக்கு 90 வயதாக இருக்கும்போது, மோசேக்கு 80 வயதாக இருக்கும் போது மோசே ஒரு எத்தியோப்பிய ஸ்திரீயை மணந்தான். அதனால் மிரியாம் மிகவும் பொறாமையடைந்தாள் (எண்ணாகமம் 12 : 1). 30 வருடங்களுக்கு முன் நடந்த மோசேயின் திருமணக் காரியத்தை மனதில் வைத்து, எண்ணாகமம் 12 : 2 “கர்த்தர் மோசேயைக் கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் பேசினதில்லையோ?” என்றார்கள். இதற்குக் காரணம் மனைவியின் நிறமா, அல்லது கலாச்சார பின்னணியா என்று தெரியவில்லை. அவர்களது பேச்சு மோசேயின் தலைமை ஸ்தானத்திற்கே போட்டியாக இருந்தது. மோசேயை ஜனங்களின் பார்வையில் மட்டுப்படுத்தப் பிரயாசப்பட்டார்கள். ஆனால் இதை மோசே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மிரியாமும், ஆரோனும் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்தனர். அதனால் தேவன் மிகவும் கோபம் கொண்டார். கர்த்தர் மோசேயையும், ஆரோனையும், மிரியாமையும் ஆசாரிப்புக் கூடாரத்துக்கு வரச் சொன்னார். ஜனங்களுக்கு முன்பாக அவர்களை வெட்கப்படுத்தவில்லை. கர்த்தர் மேகத்தூணில் இறங்கி அவர்கள் இருவரையும் நோக்கி மோசேயைப் பற்றிப் பேசி “மோசேக்கு விரோதமாகப் பேச உங்களுக்குப் பயமில்லாமற் போனதென்ன?” என்றவுடன் மிரியாம் குஷ்டரோகியானாள்.
அவள் இஸ்ரவேலின் பாளையத்துக்குப் புறம்பாக்கப்பட்டாள். கர்த்தர் தன்னால் அழைக்கப்பட்ட ஒருவனைப் பற்றி யார் குறை கூறினாலும் தண்டனை நிச்சயம். ஆரோனும், மிரியாமும் மோசேயைப் பற்றிக் குறை கூறினாலும் மிரியாம் மட்டுமே தண்டிக்கப்பட்டாள். சகோதர சிநேகம் சிறப்பு மிக்கது. தேவனால் மெச்சப்பட்டது. அபிஷேகம் பெற்றது. ஆசீர்வாதம் பெற்றது (சங்கீதம் 133). நம்முடைய சகோதரனைக் குறித்து மற்றவர்களுடன் புறங் கூறுவது சரியல்ல. காம் தன் தகப்பனின் குறையைத் தன் சகோதரனிடம் கூறியதால் சபிக்கப்பட்டான் (ஆதியாகமம் 9 : 20 – 27). நாம் சகோதரருக்கு விரோதமாய்ப் பேசினால் தேவன் கடிந்து கொண்டு அவைகளை நமது கண்களுக்கு முன்பாக நிறுத்துவார் (சங்கீதம் 50 : 20, 21). சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டு பண்ணுதல் தேவன் அருவருக்கும் காரியங்களில் ஒன்று என்று நீதிமொழிகள் 6 : 19 ல் கூறப்பட்டுள்ளது. ஆரோன் கதறினான். தன் தம்பியாகிய மோசேயைப் பார்த்து ஆண்டவனே என்றழைத்து தன்னுடைய சகோதரிக்காக மன்னிப்புக் கேட்டான். மிரியாம் மன்னிப்பு கேட்கவில்லை.
மோசே மிரியாமுக்காகத் தேவனிடம் ஜெபித்து ஏழுநாள் மட்டும் குஷ்டரோகியாகப் பாளையத்துக்குப் புறம்பேயிருக்கக் கட்டளையிட்டு அதன் பின் சேர்த்துக் கொள்ளப்பட்டாள் (எண்ணாகமம் 12 : 11 – 15). இதேபோல் உசியா ஊழியக்காரருக்கு விரோதமாகப் பேசினதினால் குஷ்டரோகியாகி மரண பரியந்தம் தனியாக வாழ்ந்ததை 2 நாளாகமம் 26 : 2`11 ல் பார்க்கிறோம். மோசே தேவனோடு முகமுகமாய் பேசிய தேவ மனிதன். அவன் தேவனால் பயன்படுத்தப்பட்ட மாபெரும் தலைவன். எனவே அவனைக் குறைகூற தேவன் அனுமதிக்கவில்லை. இதனால் 30 லட்சம் இஸ்ரவேலரின் பிரயாணம் தடைபட்டது. மிரியாம் என்றால் கசப்பு அல்லது கிளர்ச்சி என்று பொருள். மிரியாமின் பொறாமை, பெருமை, அபிஷேகம் பண்ணப்பட்டவர்களை எதிர்த்தல் இவைகளால் அவளது வாழ்வு கசப்படைந்தது. முடிவில் அவள் கானானுக்குள் நுழைய முடியவில்லை. வனாந்தரத்திலே 38 வருடங்கள் சுற்றினாலும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பூமிக்குப் போகுமுன் மரணமடைந்தாள் (எண்ணாகமம் 20 : 1). ஒரே வருஷத்தில் மிரியாமும், ஆரோனும், மோசேயும் கானானுக்குள் பிரவேசிக்காமலேயே மரணமடைந்தனர். இதிலிருந்து நாம் யாரோடும் எதற்காகவும் பொறாமை கொள்ளக்கூடாது என்றறிகிறோம். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…