இயேசு செய்த அற்புதங்கள்

(லேகியோன்) பிசாசு பிடித்தவனை சுகமாக்கினார்

மத்தேயு 8 : 28 – 34; மாற்கு 5 : 1 – 20; லூக்கா 8 : 26 – 37

பிசாசு பிடித்த மனிதன்:

மாற்கு  5 : 1 – 5 “ பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள சுதரேனருடைய நாட்டில் வந்தார்கள். அவர்கள் படகிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச்  சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும்  சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத்  தகர்த்து போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும்  இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக்  காயப்படுத்திக்கொண்டிருந்தான்.”

இயேசு  கலிலேயாக்  கடலைக்  கடந்து  கடலின்  அந்தப்  பக்கத்தில்  உள்ள  தெக்கப்பொலி  என்ற  நாட்டிற்கு  வந்தார். அதில்  இயேசுவும் சீடர்களும் பிரவேசித்த சுந்தரேனருடையநாடு  காத்  கோத்திரத்தைச் சேர்ந்தது.  இங்கு  வாழ்ந்த  பெருபான்மை  மக்களும்  புறஜாதிகளாவார்.  அவ்விடங்களில் பன்றி  வளர்ப்பைத்  தொழிலாகக்  கொண்டவர்கள்  காணப்பட்டனர்.  பன்றி  அசுத்த  விலங்கானதால்  யூதர்கள்  அதை  வளர்ப்பதில்லை. இந்தப் பகுதிகள் இப்போது இல்லை. இயேசு படகிலிருந்து  இறங்கிவுடன்  ஆயிரக்கணக்கான அசுத்த ஆவிகள் நிறைந்த ஒரு மனிதன் இயேசுவுக்கு  எதிராக வந்தான். இந்த அசுத்த ஆவிகள் மிகவும் ஆபத்தானவை. தான் பிடித்திருக்கும் ஒரு மனிதனை தன்னுடைய விருப்பம் போல் செயல்பட வைக்கும். இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு பலத்தைத்  தான் குடி கொண்டிருக்கும் அந்த மனிதனுக்குக் கொடுத்து,  அவனைச்  சங்கிலிகளினாலும்  கூட கட்ட முடியாதபடி பண்ணி வைத்திருந்தது. இரவும், பகலும் கல்லறைகளிலும், மலைகளிலும் இருந்து கூக்குரலிட்டுக் கொண்டிருந்தான். கல்லுகளினால்  தன்னையே  காயப்படுத்திக் கொண்டிருந்தான். பிரேதங்கள் நிறைந்த கல்லறைத்  தோட்டத்தில் குடியிருந்தான்.  யாராலும்  அவனையடக்க  முடியவில்லை. இருளும்,  பயமும்,  திகிலும்  நிறைந்த  இடத்துக்குள் பிசாசுகள்  அவனைத்  தள்ளி  விட்டிருந்தன.  

மனிதர்கள்  நடுவில்  அவர்களால்  வாழ  முடியவில்லை. அவர்களால்  தங்களைத்  தாங்களே  கட்டுப்படுத்தவும்  முடியவில்லை.  அசுத்தஆவிகள் மனிதனை உந்தித் தள்ளும் படியான வல்லமை உள்ளவைகள். இப்படிப்பட்ட பரிதாபமான நிலமையிலுள்ள ஒரு மனிதன் இயேசுவுக்கு எதிர் கொண்டு வந்தான்.பிசாசுகள்  என்பது  மரித்தவர்களின்  ஆவியல்ல.  ஆதியிலே  சாத்தான்  கடவுளுக்கு  விரோதமாகப்  புரட்சி  செய்து  பரலோகத்திலிருந்து  தள்ளப்பட்டபோது,  அவனோடுகூட  தேவனுக்கு  விரோதமாகக்  கலகம்  பண்ணின  தேவதூதர்களும்  தள்ளப்பட்டார்கள்.  அவர்கள்தான்  பிசாசுகள்  என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த ஆவிகள்  மனிதரை  முழுவதும்  ஆட்கொள்ளவும்  மனித  சரீரத்தைத்  தங்கள்  கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு  வரவும்  முயற்சி  செய்கின்றன.  அந்த  நாளில்  மட்டுமல்ல,  இந்த நாளிலும்  அசுத்த  ஆவிகள்  செயல்படுகின்றன.  

இயேசுவும் லேகியோனும்:

மாற்கு  5 : 6 – 9 “அவன் இயேசுவைத்  தூரத்திலே  கண்டபோது, ஓடி வந்து, அவரைப் பணிந்து கொண்டு: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு தேவன் பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுக் சொன்னான். ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: உன் பெயர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி,” 

இயேசுவைக்  கண்டவுடன் பிசாசு பிடித்த மனிதன்  ஓடிவந்து  இயேசுவைப்  பணிந்து கொண்டான்.  இயேசு  உன்னதமான  தேவனுடைய  குமாரன்  என்று யாவருக்கும்  முன்பாகக்  கூறின.  பின்  “எனக்கும்  உமக்கும்  என்ன”  என்கின்றன. ஆண்டவர்  வருவதையும்,  தேவ  பிரசன்னத்தையும்,  பரிசுத்தத்தையும் பிசாசுகள்  விரும்புவதில்லை.  அசுத்தத்தை  மட்டுமே  அவைகள்  விரும்புகின்றன. இயேசு அந்த அசுத்த ஆவியை அவனை விட்டுப் போகச் சொன்னதால் தன்னை வேதனைப் படுத்த வேண்டாம் என்று தேவன் பேரில் ஆணையிட்டது.  பிசாசுகள்  இயேசு  யாரென்றும்  அவைகளுடைய  முடிவு  என்னவெறும்,  அவைகளின்  முடிவு  காலம்  எப்பொழுது  என்பதையும்  அறிந்திருந்தன.  அவர்களுக்கென்று  நிர்ணயித்து  வைக்கப்பட்ட  காலம்  நியாயத்தீர்ப்பின்  காலம்  அதனால்தான்  “அந்தக்காலம்  வருவதற்கு  முன்பே  ஏன்  எங்களை  உபத்திரவப்  படுத்த  வந்துவிட்டீர்?”  என்று  இயேசுவை  நோக்கி  கூக்கிரலிடுகின்றன.  இயேசு அந்த மனிதனிடம் பெயரைக்  கேட்ட போது, அவனால் பதில் சொல்ல முடியாமல், நாங்கள் அனேகராய்  இருக்கிறபடியால் என் பெயர் லேகியோன் என்றது. தான்  யாரென்றுகூட  அவனுக்குத்  தெரியவில்லை.  

இவ்விதமாக  இன்றும்  தங்கள்  வாழ்க்கையில்  தாங்கள்யார்,  எதற்காக  வந்தோம்,  எங்கே  சொல்லுகிறோம்  என்று  அறியக்கூடாதபடி  பாவப்பிடியில்  சிக்குண்ட  மனிதர்கள்  இருக்கிறார்கள். அவர்களைக்  கட்டுப்படுத்தி  வைத்திருப்பது  அசுத்த  ஆவி. ரோமப்படையில்  மிக  அதிக  எண்ணிக்கையுள்ள  படைப்பிரிவுகளை  லேகியோன்  என்ற  பெயரால்  அழைப்பர். ஒரு  லேகியோனில்  3000 த்துக்கும்  6000  த்துக்கும்  இடைப்பட்ட  எண்ணிக்கையுள்ளோர்  காணப்படுவர்.  இதிலிருந்து  6000  பிசாசுகள் அவனுக்குள் இருக்கின்றன என்று அறிகிறோம்.  விழுந்துபோன  தூதர்  கூட்டம்தான்  பிசாசுகளாக  பூமியில்  உலாவுகின்றன. இதை சாத்தான் என்று சொல்லக்கூடாது. சாத்தான் ஒருவன் தான். பிசாசுகள் சாத்தானின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. இவைகள் தீமையான குணங்களை வெளிப்படுத்தத்  தான் மனிதனுக்குள் வருகிறது.

பிசாசுகளின் ஆசையும், இயேசுவின் கட்டளையும்:

மாற்கு 5 10 – 14  “தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்தி விடாதபடிக்கு இயேசுவை மிகவும் வேண்டிக் கொண்டான். அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப்  பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே  போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக் கொண்டன. இயேசு அவர்களுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டு பன்றிகளுக்குள் போயின;  உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக் கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஒடி, கடலிலே பாய்ந்து; கடலில் அமிழ்ந்து மாண்டது. பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப்  பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப்  பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு;”

பிசாசுகள் தங்களை அந்தத்  திசையிலிருந்து துரத்தி விட வேண்டாமென்றும், அங்கு மேய்ந்து கொண்டிருந்த பன்றி கூட்டத்துக்குள் தங்களை அனுப்ப வேண்டும் என்று  இயேசுவிடம்  வேண்டின. இது ஒரு வினோதமான வேண்டுதல். பாதாளத்தில் தங்களை அனுப்புவதை விட பன்றி கூட்டத்துக்குள் தங்களை அனுப்புவது நல்லது என்றன.  அதற்கு இயேசு அவைகள் சொன்னபடி செய்து, அவைகள் 2000 பன்றிகள் உள்ள கூட்டத்துக்குள் நுழையச் செய்தார். பிசாசுகளின்  வேண்டுதலையும்  இயேசு  கேட்டதைப் பார்க்கிறோம்.  ஏனென்றால்  அவைகளை  அழிக்கும்  காலம்  வராததால்.  பன்றிகள்  கூட அந்தப்  பிசாசோடு வாழ்வதற்குப்  பிடிக்காமல் மாண்டு போவதே நல்லது என்று கடலில் விழுந்து மாண்டன. பிசாசுகள் மனிதனையும்  கெடுத்து,  பன்றிக்கூட்டத்தையும்  கெடுத்தது.  பன்றிகளை  மேய்த்தவர்கள் இந்த சம்பவத்தை கண்ணாலே பார்த்ததால் பட்டணத்திலும், சுற்றுப்புறங்களிலும் சென்று  நடந்த சம்பவத்தை பற்றி அறிவித்தனர்.பிசாசைக்  கண்டு  நாம்  பயப்படக் கூடாது. யாக்கோபு  4 :  7  ல்  “பிசாசுக்கு  எதிர்த்து  நில்லுங்கள்,  அப்பொழுது  அவன்  உங்களை  விட்டு  ஓடிப்போவான்”  என்கிறார். தீங்குநாளில்  அவைகளை  எதிர்த்து  பெலன்  கொள்ளுங்கள்  என்று  பவுல்  எபேசியர்  6 : 13 ல்  கூறுகிறார்.  தேவனுடைய  பிள்ளைகளுக்கு  சாத்தானின்  நுகத்தடிகளை  முறிப்பதற்காக  கர்த்தர்  நமக்கு  அதிகாரமும்,  வல்லமையும்,  சத்துவமும்  தந்திருக்கிறார்(லூக்கா  10 : 19).  

ஜனங்களின் செயல்:

மாற்கு 5: 15 – 18 “இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரம் தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக்  கண்டு, பயந்தார்கள். பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் சம்பாதித்ததைக்  கண்டவர்களும் அவர்களுக்கு விவரமாய் சொன்னார்கள். அப்பொழுது தங்கள் எல்லைகளை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக் கொள்ளத்  தொடங்கினார்கள். அப்படியே அவர் படகில் ஏறுகிற பொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க  இயேசுவை வேண்டிக்கொண்டான்.” 

ஜனங்கள் வஸ்திரம் தரிக்காமல் இருந்தவன், ஒரு  இடத்தில்  இருக்காமல்  அலைந்து  திரிந்த  மனிதன், வஸ்திரம் தரித்திருப்பதையும், புத்தி தெளிந்திருப்பதையும் கண்டு பயத்தில் இயேசுவிடம் தங்கள் எல்லைகளை விட்டு போகும் படி கூறினார்கள். இயேசு  செய்தவற்றைப்  பார்த்திருந்த  சிலரும் அங்கே  இருந்தனர்.இவர்கள்  மற்றவர்களிடம்  அசுத்த  ஆவிகளால்  பிடிக்கப்பட்டவனின்  செயலையும்  இயேசு  அவனைக்  குணப்படுத்தியதையும்  கூறினார். இயேசு  செய்த இத்தனை பெரிய அற்புதமாகிய அநேக பிசாசு படித்தவனை  குணமாக்கியதைப்  பார்த்தும், அதில் அவர்கள் சந்தோஷப்படாமல்  பன்றிகளுக்குச் சம்பவித்ததற்காக வருத்தப்பட்டனர். கர்த்தரை வெறுத்தனர். பன்றிகளைத்  தெரிந்து கொண்டனர். அதற்குக்  காரணம் காத்  கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் பன்றி  வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நியாயப்பிரமாணம் அதை விலக்கியிருந்தாலும், அவர்கள் அதற்குக்  கீழ்படியாமல் அந்தத்  தொழிலைச்  செய்து கொண்டிருந்தனர். அதனால்தான் அவர்கள் பன்றிகள் மாண்டதை விரும்பவில்லை. இதைத்தான்  இயேசு  “ஒரு  ஆத்துமாவின்  மதிப்பு  முழு  உலகத்தின்  மதிப்பைவிட  மேலானது”  என்று  போதித்ததை மாற்கு 8 : 36 ல்  பார்க்கிறோம். இயேசு புறக்கணிக்கப்பட்டவராக அந்த ஊருக்குள் போக முடியாமல் துக்கத்தோடு அந்த இடத்தை விட்டுப்  புறப்பட்டார்.அப்பொழுது குணமானவன்  தானும்  இயேசுவோடு வருவதற்கு உத்தரவு தர வேண்டுமென்று வேண்டினான்.

இயேசுவின் கட்டளை:

மாற்கு 5 :19, 20 “இயேசு அவனுக்கு உத்தரவு போடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய் கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்கு செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச்  செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்  பண்ணத்தொடங்கினான். எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.”

இயேசு  பிசாசின்  வேண்டுதலைக்  கேட்டு  பன்றிக்கூட்டத்துக்குள்  அவைகளை  அனுப்பினார்.  ஜனங்களின்  வேண்டுதலைக்  கேட்டு  அந்த  இடத்தை  விட்டுச்  சென்றார்.  ஆனால்  இயேசுவோடு  வர  விருப்பப்பட்ட அந்த மனிதனைத்  தன்னோடு வர வேண்டாம் என்றார். அதற்கு முதல் காரணம் பலகாலம் அவனை விட்டுப் பிரிந்திருந்த குடும்பத்தாருடன் அவன் சேர வேண்டும் என்பதாலும், அந்தக் குடும்பத்தார் அவனைப்  பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள் என்பதாலும்  அவ்வாறு கூறினார். இன்னுமொரு காரணம் இயேசுவை அந்த இடத்தை விட்டு அந்த ஜனங்கள் போகச்  சொன்னதால் அங்கு ஊழியம் செய்வதற்கு வாசல் திறக்கப் பட வேண்டும் என்பதற்காக.முன்பு அவன் பைத்தியக்காரன், இப்பொழுது அவன் சுவிசேஷகன்.முன்பு அவனுக்குள்ளிருந்தது அசுத்தஆவி.  இப்பொழுது அவனுக்குள்ருந்து  பேசுகிறவர் பரிசுத்த ஆவியானவர். இப்பொழுது அவன் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவன் ஆனான்.  

இந்த  வேதப்பகுதியில்  5  விண்ணப்பங்கள்  உண்டு.  1. மாற்கு 5 : 7 ல்  பிசாசுகள்  தங்களை  வேதனை  படுத்த  வேண்டாம்  என்று  வேண்டின. 2.  மாற்கு 5 : 10 பிசாசுகள்  தங்களை  அந்தத்  திசையிலிருந்து  துரத்தி  விட  வேண்டாம்  என்று  வேண்டின. 3.  மாற்கு 5 : 12ல்  பிசாசுகள்  தங்களை  பன்றிக்கூட்டத்துக்குள்  அனுப்பும்படி  வேண்டின.  4.  மாற்கு  5 : 17 ல்  ஜனங்கள்  இயேசுவைத் தங்கள்  எல்லைகளை  விட்டுப்  போகும்படி  வேண்டினர்.  5.  மாற்கு 5:  18 ல்  விடுதலை  பெற்றவன்  இயேசுவோடு  செல்ல  இயேசுவிடம்  வேண்டினான்.  யூதர்கள்  மூன்று  காரியங்களைத்  தீட்டாகக்  கருதினர்.  1.  புறஜாதி  மனிதரிடம்  போக்கும்  வராததுமாக  இருந்தால்  அது  தீட்டு.  2.  பிசாசு  பிடித்த  மனிதர்களை  யூதர்கள்  தீட்டாகக்  கருதினர்.  3.  கல்லறையையும்  அவர்கள்  தீட்டாகக்  கருதினர்.  இந்த  மூன்று  காரியங்களையும்  இயேசு  இதில் உடைத்ததைத்  பார்க்கிறோம்.  

இந்த அற்புதத்தில் ஆயிரக்கணக்கான அசுத்தஆவிகள்  நிறைந்த மனிதனை இயேசு அவைகளிருந்து விடுதலை கொடுத்ததைப் பார்க்கிறோம். இவன் தன் குடும்பத்தாரிடம்  மட்டுமல்லாமல் தெக்கப்போலி  முழுவதும் இயேசுவைப்  பற்றி சாட்சியாக கூறினான்.  இயேசு  இந்த  மனிதனைத்  தீய  ஆவியிடமிருந்து  மட்டும்  விடுவிக்கவில்லை.  மாறாக இயேசு  தம்மிடமிருந்தும்,  உறவினர்  குடும்பத்தினரிடமிருந்தும்,  ஊர்  சமூகத்தை  விட்டும்  பிரிந்திருந்த  நிலையை  மாற்றி,  மீண்டும்  அவரை  முழு  மனிதனாக,  சமூகத்தில்  முழு  உறுப்பினராக  மாற்றி  அனுப்புகிறார்.  நாமும் தேவன் நமக்கு செய்த நன்மைகளை பிறரிடம் சாட்சியாக கூறவேண்டும் இயேசு யார், எப்படிப்பட்டவர், எத்தன்மை உடையவர், நம்முடைய பாவங்களுக்காக தம்மையே  ஒப்புக்கொடுத்தவர், சிலுவையில் அறையப்பட்டு மரித்த பின்பும்  உயிரோடு எழுந்தவர், இப்பொழுது நமக்குள் வாசம் பண்ணுகிறவர்  என்று பிறருக்கு அறிவிக்க வேண்டும்.  ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago