மத்தேயு 21 : 18 – 22; மாற்கு 11 : 12 – 19
அத்திமரம்:
அத்திமரத்தைப் பற்றிய செய்தி வேதத்தில் ஏறக்குறைய 52 இடங்களில் வருகிறது. ஆதாமும், ஏவாளும் பாவம் செய்த பின்னர் அத்திமரத்தின் பின்னால் ஒளிந்து நின்றனர். அத்தியிலைகளை எடுத்து தங்களை மறைத்துக் கொண்டதைப் பார்க்கிறோம். இயேசு சுமந்து சென்ற சிலுவை அத்திமரத்திலானது. யூதர்கள் அத்திமரத்தை தங்கள் அரசியலாகப் பார்க்கின்றனர்.
இயேசு அத்திமரத்தை சபித்தார்:
மத்தேயு 21 : 18,19 “காலையிலே இயேசு நகரத்துக்குத் திரும்பி வருகையில், அவருக்குப் பசி உண்டாயிற்று. அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப் போயிற்று.”
இயேசு பெத்தானியாவில் தங்கிவிட்டு நகரத்துக்குத் திரும்பி வரும் போது பசி உண்டாயிற்று. அப்பொழுது வழியருகே தூரத்திலே ஒரு அத்திமரத்தைக் கண்டார். அதன் பக்கத்தில் போய்ப் பார்த்தபோது, அந்த மரத்தில் இலைகள் மட்டுமே இருந்தது. கனிகள் இல்லை. அத்திமரத்தின் தன்மை என்னவென்றால். அது பூ பூக்க ஆரம்பித்ததும், அதில் இலைகள் எல்லாம் உதிர்ந்து விடும். அந்த மரம் முழுவதும் பூவாகக் காட்சியளிக்கும்.அந்தப் பூவிலிருந்து பிஞ்சு தோன்றும். அப்போது இலைகள் துளிர்க்க ஆரம்பிக்கும். அத்திமரம் இரண்டு மாதம் தவிர மற்ற மாதங்களில் கனி கொடுக்கும். கனி கொடுக்கும் காலத்தில் கனிகளோடு ஏராளமான இலைகளும் அதில் காணப்படும். இலைகள் இருந்தால் கனி கட்டாயமாக இருக்கும். அதைத் தான் இயேசு எதிர்பார்த்தார். இலைகளால் இயேசுவின் பசியைத் தீர்க்க முடியாது.
இன்றைக்கும் பெரும்பாலான கிறிஸ்தவர்களிடம் இலைகள் தான் காணப்படுகின்றன. கனிகள் இல்லை. மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அத்தி மரத்தில் வேர், இலை, தண்டு, அடிமரம், கிளைகள் அனைத்தும் இருந்ததைப் போல, இக்காலச் சபைகளிலும் பணம், மக்கள் பலம், பாடகர் குழுக்கள் போன்ற வசதிகள் அனைத்தும் அதிகமாக உண்டு. ஆவியின் கனிகளோ (கலாத்தியர் 5: 22, 23) ஸ்தோத்திரப்பலிகளோ, நன்றி அறிவிப்புகளோ இல்லை. (எபிரேயர் 13 :15) புதிய ஆத்மாக்களைக் கிறிஸ்துவிடம் சேர்க்கும் பணியும் மிகவும் குறைவு. ஆவியின் கனி இல்லாத கிறிஸ்தவ வாழ்வு சாபத்திற்குரியது. அத்தி மரத்தில் கனி இல்லாததால்,”இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாமல் இருக்கக்கடவது” என்றவுடன் அத்திமரம் பட்டுப்போயிற்று. கனி தராத மக்கள், சபைகள் சாபத்தை அடைய நேரிடும் என்ற எச்சரிப்பை தருவதற்காகவும், தனது ஆற்றலைக் காண்பிக்கவும், அத்தி மரத்தை இயேசு சபித்தார்.
இயேசுவுக்குப் பசி உண்டானதினால், அவர் மனிதத் தன்மை உடையவராக இருந்தார் என்பதை அறிகிறோம். அத்திமரமானது இஸ்ரவேல் மக்களைக் குறிக்கிறது. இயேசு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தபோது ,இஸ்ரவேல் மக்களிடம் எந்தக் கனியும் காணப்படவில்லை. தேவன் இஸ்ரவேல் மக்களுடைய வாழ்க்கையிலே கொடுத்திருந்த காரியங்களை, ஜீவனற்ற சடங்காச்சாரங்களாகவும், வல்லமையற்ற வாழ்க்கை முறையாகவும் மாற்றி விட்டனர். அதனால் தேவன் இஸ்ரவேல் ஜனங்களைக் கடிந்து கொண்டார். கனியற்ற காலம் என்பது, இஸ்ரவேல் ஜனங்கள் இரட்சிப்படையாததைக் குறிக்கிறது. அத்திமரத்தைச் சிருஷ்டித்தவருக்கு அதைப் பட்டுப் போகச் செய்யவும் அதிகாரம் உண்டு. அத்திப்பழக் காலம் இல்லாமல் இருந்த போதும், வழியோரம் நின்றபடி அடர்ந்த இலைகளால் தனக்குள் கனியுள்ளது போலக் காட்டி மக்களை ஏமாற்றி வந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சபித்தபின் இயேசு எருசலேமை நோக்கிக் கடந்து சென்றார். அங்கு ஆலயத்தை சுத்திகரித்து விட்டு திரும்பி வந்தார்.
இயேசுவின் உபதேசம்:
மத்தேயு 21 : 20, 21 “ சீஷர்கள் அதைக்கண்டு: இந்த அத்தி மரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப் போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாய் இருந்தால், இந்த அத்தி மரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
இயேசு சீஷர்களுடன் அந்த இடத்தை வந்தடைந்த போது, சீஷர்கள் அத்தி மரம் பட்டுப் போனதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். இயேசுவின் வார்த்தை வல்லமையாக இருக்கிறபடியினால் அவர் எதைப் பேசினாலும் அது நடந்தேறும். தேவன் இவ்வாறும் வல்லமையாகச் செயல்பட முடியும் என்பதை அவர்கள் விசுவாசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களைத் தைரியப்படுத்தினார். இன்று அத்திமரத்தைச் சபிக்கவும், மலைகளைப் பெயர்க்கவும் வேண்டியதில்லை. போ என்றாலே போகும் என்கிறார். சங்கீதம் 121: 1,2 ல் கூறியதைப் போல ஒத்தாசை வரும் பர்வதங்களைத் தான் நாம் நோக்கிப் பார்க்க வேண்டும். எல்லாவற்றையும் விடப் பெரிய காரியம் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதுதான். வேத வசனங்களை நாம் மற்றவர்களுக்குக் கூறும்போது, ஆவியானவர் நம்மை ஆவியில் நிரப்புவார். குறைவுள்ள மனிதர்களின் உதடுகளின் மூலமாகப் போகிற கர்த்தருடைய வார்த்தையைக் கூட பரிசுத்த ஆவியானவர் எடுத்து பயன்படுத்துகிறார் என்ற விசுவாசம் நமக்கு அதிகமாகத் தேவை. ஒரு விசை சந்திரரோகியாய் வேதனை போட்டுக்கொண்டிருந்த அவன் மகனை சீஷர்களிடம் கொண்டு வந்து அவர்களால் குணமாக்க முடியவில்லை. அப்பொழுது இயேசு
மத்தேயு 17 : 20 ல் “அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” என்றார்.
ஜெபம் குறித்து இயேசு:
மத்தேயு 21 :22 “மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.”
இயேசு நமது சிருஷ்டிகர் ஆதலால் நம்மை சிருஷ்டிக்கும் போதே ஒரு திட்டத்தோடும், சித்தத்தோடும் சிருஷ்டித்தார். எனவே நாம் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொண்டு, அந்த சித்தத்தின் பிரகாரம் நாம் நம்மை அர்பணித்துக் கொள்ள வேண்டும். இந்த அத்திமரத்துக்கு அவர் செய்ததிலிருந்து அவர் படைத்த அனைத்தும் அவரது வார்த்தைக்கு செவி கொடுக்கிறது. கடல் அலைகளைப் பார்த்துப் பேசியபோது அது அமைதியாயிற்று. இயேசு இங்கு ஜெபத்தைக் குறித்த பாடத்தையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார். எப்பொழுது ஜெபித்தாலும் விசுவாசம் தேவை என்பதை உணர்த்துகிறார். விசுவாசம் உங்களுக்கு இருக்குமானால் ஜெபத்தில் கேட்பதையெல்லாம் பெற்றுக் கொள்வீர்கள் என்கிறார். எனவே நாம்
ஏசாயா 40 :29 ல் “சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார்” என்றும் பிலிப்பியர் 4 :13 ல் “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலன் உண்டு”
மத்தேயு 7 : 7, 8 ல் கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.”
என்ற வார்த்தைகளை விடாமல் விசுவாச அறிக்கையிட்டு, நமக்கு பலத்தையும் சத்துவத்தையும் தேவனிடமிருந்து பெற்றுக் கொள்வோம்.கனியில்லாததால் இயேசு அத்திமரத்தைச் சபித்தார். நம்மையும் இயேசு படைத்ததின் நோக்கம் நாம் இயேசுவுக்குள் கனி கொடுக்கிறவர்களாக மாறவேண்டுமென்பது தான். அத்திமரம் பசுமையாய் இருந்ததைப் போல எருசலேம் மக்களிடமும் எந்த ஒரு கனியும் காணப்படவில்லை. பரிசேயர்களையும், சதுசேயர்களையும் இயேசு வெறுக்கிறார். காரணம் இயேசு எதிர்பார்த்த கனி அவர்களிடம் இல்லை. .எனவே நாம் இயேசுவுக்குள் கனி கொடுக்கிறவர்களாக ஆகப் பிரயாசப்படுவோம். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…
View Comments
Good