முன்னுரை:
1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது.”
ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த வீட்டிற்குச் சந்தோஷமும் ஆசீர்வாத மும் கிடைக்கும். அதே போல் ஒரு தேசத்தில் உள்ள ஒரு ராஜாவுக்குக் குழந்தை பிறந்தால் அந்தத் தேசமே சந்தோஷப்படும். ஆனால் இயேசுவின் பிறப்பும், மரணமும் மட்டுமே அகில உலகமும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறப்பை கிறிஸ்மஸ் என்றும், அவரது மரணத்தை GOOD FRIDAY என்றும், அவர் உயிர்த் தெழுந்ததை ESTER என்றும் கொண்டாடுகிறோம். இயேசு இந்த உலகத்திலிருந்த போது அநேக அற்புதங்களைச் செய்தார். அதைப் பார்த்தவர்கள் அவரைப் புகழ்ந்தனர். ஆனால் சிலுவையில் அவரை ஒப்புக் கொடுத்து இகழ்ந்தனர். மனுக்குலம் இரட்சிக்கப்பட சிலுவை மரணம் அவசியம் என்று அவர்களுக்குத் தெரிய வில்லை. இயேசு ஒருவரே மரிப்பதற்காகவே பிறந்தார். நம்முடைய பாவங்களுக்காகவும், மீறுதல்களுக்காகவும், சாபங்களுக்காகவும், அக்கிரமங்களுக்காக வும், நம்மை இரட்சிக்கவும், இவைகளினின்று விடுவிக்கவும், இயேசுவண்டை நம்மை நிறுத்தவும், அவருடைய பிள்ளையாக நம்மை மாற்றவும் 1கொரிந்தியர் 5 : 7 ல் கூறிய படி நமக்காகப் பலியானார். சிலுவை மரணத்தின் மூலம் இயேசு தன்னுடைய அன்பை விளங்கப்பண்ணினார்.
இயேசு கொடுத்த பலி:
சிலுவை மரணம் இயேசு செய்த மாபெரும் தியாகம். பழைய ஏற்பாட்டில் உள்ள லேவியராகமத்தின் முதல் அதிகாரத்தில் சர்வாங்க தகனபலி, போஜனபலி, சமா தானபலி, பாவ நிவாரண பலி, குற்றநிவாரண பலி என்ற பலிகள் கர்த்தருக்குச் செலுத்தப்பட்டதாக உள்ளது. ஒருவன் தன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியை (யாத்திராகமம் 12 : 5) தேவ சமூகத்தில் கொண்டு வந்து, அதின் மேல் பாவம் செய்தவன் தன் கைகளை வைத்து ஒவ்வொரு பாவங்களாக ஆட்டின் தலையின் மேல் சுமத்திக் கொண்டே இருப்பான். எல்லாப் பாவங்களையும் ஆட்டின் மேல் சுமத்தின பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலே கிடத்திப் பலி செலுத்துவான். அதனுடைய இரத்தத்தைப் பாவம் செய்தவன் மேல் தெளித்து, “இந்த ஆடு உன்னுடைய பாவத்தைச் சுமந்து பாவத்துக்குத் தண்டனையாக தன்னுடைய ஜீவனையே கொடுத்திருக்கிறது. இப்பொழுது இதனுடைய இரத்தத்தால் உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது சமாதா னத்தோடே நீ போகலாம்” என்று சொல்லுவான் (லேவியராகமம் 1 : 3). ஏரோதும் இயேசுவின் கூடவே மூன்றரை வருஷங்கள் இருந்த பேதுருவும் (1பேதுரு 1 : 19), இயேசுவை சிலுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்த பிலாத்துவும் (லூக்கா 23 : 4), ஏரோதும் (லூக்கா 23 : 15) இயேசுவைக் குற்றமற்றவர் என்று கூறியுள் ளதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட குற்றமில்லாத ஆட்டுக்குட்டியான இயேசு பானபலியாக தன்னையே ஒப்புக் கொடுத்தார்.
இயேசு மனுஷனாக ஏன் பிறந்தார்:
லூக்கா 23 : 4 ல் “அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.”
இயேசு ஏன் மனிதனாக வந்தாரென்றால் மனிதனாக வந்தால்தான் மரிக்க முடியும். லூக்கா 23 : 4 ல் பிலாத்து “இந்த மனுஷனிடம்” என்று இயேசு என்ற பெயரைக் கூறாமலே கூறியிருக்கிறான். இயேசு மனிதனாகப் பிறக்கத் தானே ஒரு உடலைத் தெரிந்து கொண்டார். அதற்குப் பெற்றோரைத் தெரிந்து கொண்டார். தான் பிறக்கப்போகும் ஊரையும் தெரிந்து கொண்டார். இயேசுவுக்கு மனிதனைப் போன்ற சரீரமும் (யோவான் 1 : 14), ஆத்துமாவும் (மத்தேயு 26 : 38), ஆவியும் (லூக்கா 23 : 46) இருந்தன. அவருக்குப் பசி இருந்தது ( மத்தேயு 4 : 2), தாகமிருந்தது (யோவான் 19 : 28), அவர் விசனமடைந்தார், இளைப்படைந்தார் (யோவான் 4 : 6), தூங்கினார் (மாற்கு 4 : 38), வேர்வை சிந்தினார் (லூக்கா 22 : 44), கண்ணீர் விட்டார் (லூக்கா 19 : 41), கோபமடைந்தார் (மாற்கு 3 : 5), எனவே இயேசு மனிதனாக வாழ்ந்தார். வார்த்தை என்ற பெயரில் பிதாவோடு தேவனாக இருந்தவர் மாம்சமாகி மனிதனாக வந்தார் (யோவான் 1 : 1, 14). அந்த வார்த்தை தேவனுடைய குமாரன் எனப்பட்டார் (லூக்கா 1 : 34, 35).தேவனுக்கு மரணம் கிடையாது. இதைத் தான் பவுல்,
பிலிப்பியர் 2 : 6, 7 ல் அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.” கூறியுள்ளார்.
இயேசுவின் எதிரியான காய்பா தீர்க்கதரிசனமாக யோவான் 11 : 50 ல் “ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.” (யோவான் 18 : 14)
பிரதான ஆசாரியனான காய்பா ஜனங்களெல்லோரும் கெட்டுப் போகாமல் நாடு முழுவதும் அழிவதைவிட ஒரு மனுஷனான இயேசு கொலை செய்யப் படு வது நல்லது என்கிறான். மேலும் யோவான் 11 : 51, 52 ல் உலகமெங்குமுள்ள புறஜாதிகளான தேவனுடைய பிள்ளைகளுக்காகவும் மரிக்கப் போகிறார் என்பதை தீர்க்கதரிசனமாக உரைக்கிறான். கர்த்தர் இயேசுவின் எதிரியான காய்பாவுக்குத் தீர்க்கதரிசனம் உரைக்க வைத்ததைப் போல இஸ்ரவேலரல்லாத பிலேயாமையும் எண்ணாகமம் 23 : 4 ல் தீர்க்கதரிசனம் உரைக்க வைத்தார். மத்தேயு 27 : 19 ல் பிலாத்துவின் மனைவிக்கு சொப்பனத்தில் இயேசு நீதிமான் என்று கர்த்தர் வெளிப்படுத்தினார். எந்த வாயால் பிலாத்து இயேசுவை “இந்த மனுஷன்” என்று கூறினானோ அதே வாயால் மத்தேயு 27 : 18, 22 ல் கிறிஸ்து எனப்படுகிற இயேசு என்றும், மத்தேயு 27 : 24 ல் இயேசு நீதிமான் என்றும் கர்த்தர் சொல்ல வைத்தார்.
எபிரேயர் 2 : 14, 15 ல் “ ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.” என்கிறார்.
சிலுவை பற்றி:
இயேசு கபாலஸ்தலம் என்ற இடம் வரை அந்தப் பாரச் சிலுவையை சுமந்து சென்றார். அப்பொழுது அதன் சுமை தாங்காமல் 14 இடங்களில் நின்றார். நான்கைந்து இடங்களில் தடுமாறி விழுந்தார். இயேசு சிலுவையைச் சுமந்ததிலிருந்து சிலுவை மரணம் வரை 17 மணி நேரங்கள் தாகத்தால் தவித்தார். அவரது உடம்பில் 5480 காயங்கள் இருந்ததாகவும், 150 வடுக்கள் இருந்ததா கவும், அவரது தலையின் உள்ளே 17 முட்கள் பாய்ந்திருந்ததாகவும், அவரது உடம்பிலிருந்து 6. 5 லிட்டர் இரத்தம் வெளியே வந்ததாகவும் செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன. சிலுவையின் பாரம் சரீரத்தை அழுத்தியதால் தடுமாறுகிறார். சிலுவை மரத்தின் எடை 150 கிலோ, குறுக்குச் சட்டம் 70 கிலோ, அதன் நீளம் 15 அடி, அதன் அகலம் 8 அடி, அதன் உயரம் 5 அடி, அதன் எடை 85 கிலோ, இயேசுவை அறைந்த ஆணியின் நீளம் 8 அங்குலம், ஆணியின் அகலம் முக் கால் அங்குலம், அவருடைய சிரசில் I N R I என்று எழுதிவைத்தனர். இதற்கு நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்பதாகும். இது எபிரேய, லத்தீன், கிரேக்க மொழிகளில் எழுதபட்டிருந்தது.
இயேசு மரணமடைந்த நாள்:
யூதருடைய கால அட்டவணைப்படி 785 நிசான் மாதம் 15ம் தேதி. நாம் பின்பற்றும் கால அட்டவணைப்படி கி. பி 30 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி என்று பல வரலாற்று அறிஞர்கள் இயேசு மரணமடைந்த இந்த நாளை சாத்தியமான நாளாகக் கருதுகின்றனர்.
இயேசு ஒப்புக் கொடுக்கக் காரணம்:
கொலோசெயர் 1 : 14 “குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.” யோவான் 1 : 11 “அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.”
யோவான் 1 : 11 ம் வசனத்தில் வந்தார் என்றுள்ளது. வந்தார் என்பதால் அதற்கு முன் யோவான் 1 : 1 ல் ஆதியிலே வார்த்தை வடிவாய் இருந்தவர், பிதாவின் நேசகுமாரன் அடிமைத்தனத்திலிருக்கிற நம்மை மீட்க பாவிகளின் பரிகாரியாக வந்தார் என்றறிகிறோம். இயேசுவானவர் மனுக்குலத்திற்காகப் பிறந்தார் என்பது உண்மை. பாவம் செய்த ஒவ்வொருக்கும் தண்டனையளிக்கப்பட்டால் அனைவரையும் நரகத்தில் தள்ள வேண்டியிருக்கும். எனவே தேவன் தனது அன்பினால் பாவ மன்னிப்பிற்கு வழியுண்டாக்கினார் எபிரேய ஆக்கியோன் 9 : 22 ல் இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பில்லை என்கிறார். குற்றமற்ற மனிதன் ஒரு வருமில்லாததால் வார்த்தையாகிய தேவன் (யோவான் 1 : 1, 2), மாம்சமாகி (யோவான் 1 : 14), இயேசு என்ற பெயரில் (மத்தேயு 1 : 21), உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியாக உலகத்திற்கு வந்தார் (யோவான் 1 : 29), நம்முடைய பாவங்களுக்காக நாம் அடைய வேண்டிய தண்டனையை இயேசு தமது சரீரத்தின் மீது ஏற்றுக்கொண்டார் (ஏசாயா 53 : 5, 1 கொரிந்தியர் 15 : 3, 1 பேதுரு 2 : 24). நம்முடைய பாவங்களனைத்தையும் இயேசுவிடம் அறிக்கையிட்டால் நம்முடைய எல்லா பாவங்களையும் மன்னித்து நம்மை சுத்திகரிப்பார் (1யோவான் 1 : 9).
யோவான் 12 : 31 “இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.”
கிறிஸ்துவின் சிலுவை மரணம் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் அடையாளம் மட்டுமல்ல, சாத்தானின் வீழ்ச்சியின் சின்னமுமாகும். அவனுடைய முடிவோ பரிதாபத்துக்குரியது. அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினால் அழிப்பாரென்று 2 தெசலோனிக்கேயர் 2 : 8 ல் பார்க்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக வெளிப்பட்டு பிசாசானவனைத் தனது மரணத்தினால் அழித்துப் போடுவார் என்ற வெளிப்பாட்டைக் கர்த்தர் ஏதேன் தோட்டத் தில் இருக்கும்போதே “அவர் உன் தலையை நசுக்குவார். நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என்றார். நம்முடைய பாவமே சாத்தானை மரணத்துக்கு அதிகாரியாக்குகிறது. ஆனால் கிறிஸ்துவின் மரணம் அந்த அதிகாரத்தை அவனிடமிருந்து பிடுங்கிப் போட்டது. மரணத்தின் அதிகாரியைத் தன்னுடைய மரணத்தினால் இயேசுகிறிஸ்து அழிக்கும்படியாகவே மரித்தார். தன்னுடைய மரணத்தினால் உலகத்தின் அதிபதியான சாத்தானை ஜெயித்தார்
லூக்கா 24 : 44 “அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.”
இயேசுவின் பாடுகளைப் பற்றி பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் நிறைவேறியது (சங்கீதம் 22ம் அதிகாரம், ஏசாயா 53 ம் அதிகாரம்).
கொலோசெயர் 2 : 15 “ நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங் களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.”
கர்த்தர் தனது கையினால் எழுதிக் கொடுத்தது பத்து கட்டளைகள் அல்லது பத்து கற்பனைகள். இதுவே நியாயப்பிரமாணம். இது மோசேயினால் இஸ்ரவே லருக்கு அளிக்கப்பட்டது (யாத்திராகமம் 20 : 1 – 17). புறஜாதியார் இந்த நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டவர்களல்ல. இந்தப் பத்து கற்பனைகளும் மரணத்துக்கேதுவானவை என்றும், ஒழிந்து போகக்கூடியவை என்றும் 2கொரிந்தியர் 3 : 7, 8 ல் பவுலடியார் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். நியாயப்பிரமாணத்தின்படி நடக்க எந்த மனிதனாலும் முடியவில்லை (யோவான் 7 : 19, அப்போஸ்தலர் 15 : 10). ஏனெனில் அது மனிதர்களைக் குற்றப்படுத்துகிறது (எபிரேயர் 8 : 8), இரக்கமற்றது (எபிரேயர் 10 : 28), அது மனிதர்களைச் சாபத்துக்குட்படுத்துகிறது (கலாத்தியர் 3 : 10). இயேசு கிறிஸ்து ஒருவரே நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார் (மத்தேயு 5 : 17, 18). ஆகையால் இயேசு நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் (ரோமர் 10 : 4). புது உடன்படிக்கை கிறிஸ்துவின் இரத்தத்தினால் பிரதிஷ்டை பண்ணப்பட்டது (எபிரேயர் 9 : 15 – 26) புது உடன்படிக்கை கிறிஸ்து மரித்த போது செயல்படத் தொடங்கியது .
எபிரேயர் 2 : 15 “ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத் தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்.”
கிறிஸ்துவுக்குள் இருக்கும் ஒருவர் மரணத்தைச் சந்திப்பதில்லை. ஏசாயா 25 : 8 ல் “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்” என்று சொல்லப்பட்டிருக்கி றது. சரீரத்தில் ஒருவர் இருக்கும் போது அவன் உலகத்தில் இருந்த நாட்களில் அனுபவித்துக் கொண்டிருந்த பாடுகள், வருத்தங்கள், வேதனைகள், துன்பங்கள், வியாதிகள், பிரச்சனைகள் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் விடுதலை பெற்ற வனாய் சரீர மரணத்திலிருந்து நித்தியஜீவனுக்குள் பிரவேசிக்கிறான். வெளிப்படுத்தல் 21 : 4 ல் பரலோகத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டால் அங்கு மரண முமில்லை, துக்கமுமில்லை, வருத்தமுமில்லை, ஏனெனில் அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார் என்றுள்ளது. இயேசு தன்னுடைய ஜீவனைத் தானாய் மனமுவந்து கொடுத்து மரணபயத்திலிருந்து நமக்கு விடுதலை கொடுத்தார்.
புதிதும் ஜீவனுமான மார்க்கம்:
மத்தேயு 27 : 51 “அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது.”
இயேசு சிலுவையில் தன்னுடைய ஆவியை விட்டவுடன் தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது. அந்த நேரமே தேவனுடைய சமூகத்துக்குச் செல்லும் பாதை திறந்து விட்டது என்பதைக் காட்டிற்று. பரிசுத்த ஸ்தலத்தையும், மகாபரிசுத்த ஸ்தலத்தையும் பிரிப்பதற்காகப் போடப்பட்டிருந்த திரைச்சீலை, தேவனுடைய சமூகத்துக்குச் செல்லும் பாதையை மறைத்தது. லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பரிசுத்தஸ்தலத் துக்குள் பிரவேசிக்க முடியும். அதிலும் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் வருடத்துக்கு ஒருநாள் மட்டுமே பிரதான ஆசாரியன் பிரவேசிக்க முடியும். கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் நிரந்தரமாய் அந்தத் திரை அப்போதே நீக்கப்பட்டுவிட்டது. தேவனுடைய சமூகம் இருக்கும் மகாபரிசுத்த ஸ்தலத்துக்குச் செல்லும் வாசல் எல்லோருக்குமாகத் திறக்கப்பட்டுவிட்டது (1கொரிந்தியர் 12 : 13, கலாத்தியர் 3 : 28. எபேசியர் 2 : 14, 18, 3 : 6). இதனால் புதிதும் ஜீவனுமான மார்க்கம் வந்ததென்று பவுலடியார் எபிரேயர் 10 : 19 ல் குறிப்பிடுகிறார். காணக் கூடாத தேவனை கிறிஸ்துவின் பெயரில் எந்த நேரமும் ஜெபம் என்னும் ஏணியின் மூலம் ஏறிச் சென்று காணும்படிக்கு வழியை உண்டு பண்ணினார். தேவசமுகத்திற்கு நாம் ஆவியில் சென்று, அவருடன் பேச முடியும். அதற்குத் தடையேதுமில்லாமலாக்கினார். அதனால்தான் “முடிந்தது” என்று கூறியிருப்பார்.
பிதாவின் உறவு துளிர்த்தது:
சிலுவையில் இயேசு தொங்கிக் கொண்டிருக்கும் போது, “பிதாவே இவர்களை மன்னியும்” என்று முதலில் கூறினார் (லூக்கா 23 : 34). கடைசியிலும் இயேசு தன்னுடைய ஆவியை பிதாவே என்று அழைத்து ஒப்புக்கொடுத்தார் (லூக்கா 23 : 46). இடையில் இயேசு நம்முடைய பாவங்களைச் சுமக்க வேண்டிய நேரம் வந்ததால் ஒரு நிமிடம் பிதாவுக்கும் அவருக்கும் இடையே உள்ள உறவு, அந்த பாவத்தின் நிமித்தம் துண்டிக்கப்பட்டது. ஏனெனில் பிதாவானவர் பாவத்தை பார்க்கக்கூடாத சுத்த கண்ணன். பாவங்கள் அவர் மேல் இறங்கின அந்த நிமிடம் தேவனுக்கும் அவருக்கும் இடையே உள்ள உறவு துண்டிக்கப்பட்டது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டதால் அந்த உறவு மீண்டும் துளிர் விட்டது. ஒரு இமைப்பொழுது நேரம் பிதாவானவர் தன்னுடைய முகத்தை மறைத்தார். வேதத்தில் இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று பிதாவைத் தேவன் என்று அழைத்ததைப் பார்க்கிறோம் (மத்தேயு 27 : 46).
முடிவுரை:
பழைய ஏற்பாட்டில் கூறின அத்தனை தீர்க்கதரிசனங்களையும் இயேசு சிலுவை யில் நிறைவேற்றி முடித்தார். அவருடைய சரீரப் பாடுகளும் முடிந்தது. சிலுவை யில் நடந்த எல்லாப் பாடுகளையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். தன் மாம்சத்தைக் கிழிக்கும்படி ஒப்புக்கொடுத்தார் இனி ஆடுகளோ, மாடுகளோ, புறாக்களோ பலியாக வேண்டியது இல்லை. நாம் அக்கிரமக்காரராக இருக்கும் போது நம்மை நீதிமானாக்க இயேசு மரித்தார் (ரோமர் 5 : 6). நாம் பாவிகளாயிருக்கையில் இயேசு நமக்காக மரித்து அவருடைய அன்பை விளங்கப் பண்ணினார் (ரோமர் 5 : 8). நாம் அவரது சத்துருக்களாயிருக்கையில் இயேசு மரித்து அவரோடு நம்மை ஒப்புரவாக்கினார் (ரோமர் 5 : 10). கர்த்தராகிய இயேசு சிலுவையில் தன்னுடைய உயிரைக் கொடுத்ததால் அக்கிரமங்களெல்லாம் மன்னிக்கப் படுகிறது. அவரது தழும்புகளால் நமது நோய்களெல்லாம் குணமாகிறது.
நாம் அவரது கிருபையினாலும், இரக்கங்களினாலும் முடிசூட்டப்படுவதால் நமது பிராணனை அழிவிலிருந்து மீட்கப்படுகிறோம். நன்மையினால் நம்மைத் திருப்தியாக்கி, நமது வயதை வால வயதாக்குகிறார் (சங்கீதம் 103 : 1 5). இயேசு சிலுவையின் இறுதி நேரத்தில் பிதாவிடம் அவர் தன்னிடம் செய்யும்படி நியமித்த எல்லாக் கிரியைகளையும் தாம் நிறைவேற்றி முடித்தாகக் கூறியிருப்பார். இப்பொழுது தேவனின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து நமக்காய்ப் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது அவர் நமக்காகச் செய்து கொண்டிருப்பது என்னவென்றால்,
யோவான் 14 : 1 – 3 “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.”
இந்த இயேசுவின் வார்த்தைகளை எப்பொழுதும் விசுவாசித்து நமக்கு வரப்போகும் மரணத்தை நினைத்து அஞ்சாமல், அவர் நமக்காக ஆயத்தம் பண்ணி வைத்திருக்கும் ஸ்தலத்துக்குள் பிரவேசிக்க, நிலையான வாழ்வுக்குள் சென்று எப்பொழுதும் இயேசுவோடிருக்கப் பிரயாசப்படுவோம். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…