நியாயத்தீர்ப்பு

உசியா ராஜாவுக்கு தேவன் கொடுத்த நியாயத்தீர்ப்பு

உசியா ராஜாவுக்கு இன்னுமொரு பெயரும் உண்டு. அது அசரியா என்பதாகும் (2 இராஜாக்கள் 15 : 1). அவரது தகப்பனின் பெயர் அமத்சியா. அவரும் ராஜாதான். அவருடைய தாயின் பெயர் எக்கோலியாள். அசரியா என்றால் யெகோவா உதவுகிறார் என்றும், உசியா என்றால் யெகோவா பெலனாயிருக்கிறார் என்றும் பொருள்படும். இஸ்ரவேல் தேசத்தின் வடக்கு இராஜ்ஜியத்தில் எந்த நல்ல ராஜாக்களும் இல்லை. ஆனால் தெற்கு இராஜ்ஜியத்தில் ஒரு சிலர் நல்ல ராஜா க்களாக இருந்தனர். அதில் ஐந்து பேர் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தனர். அவர்கள் யாரென்றால் ஆசா, யோசாபாத், எசேக்கியா, யோசியா, உசியா என்பவர்களாகும். இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் குமாரனாகிய அசரியா ராஜாவானான் ( 2 இராஜாக்கள் 15 : 1). 

அமத்சியா:

உசியாவின் தகப்பனாகிய அமத்சியா இருபத்தைந்தாம் வயதிலே ராஜாவாகி இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான். அமத்சியா ராஜா கர்த்த ருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். ஆனால் முழுமனதோடு அதைச் செய்யவில்லை (2 இராஜாக்கள் 14 : 3). விக்கிரகங்களை வணங்கி, அதற் குத் தூபமும் காட்டினான் என்று 2 நாளாகாமம் 25 : 14 ல் பார்க்கிறோம். . அவர் ஏதோமியரை முறியடித்து வெற்றி கண்டான். அந்த பெருமிதத்தில் இஸ்ர வேலின் ராஜாவான யோவாஸ் என்னும் ராஜாவுக்கு ஆளனுப்பி இருவருடைய சாமர்த்தியத்தையும் பார்ப்போம் என்று சொல்லியனுப்பினான் (2 இராஜாக்கள் 14 : 8). யோவாஸ் “நீ ஏதோமியரை அடித்ததால் கர்வம் கொண்டிருக்கிறாய் பொல்லாப்பு வேண்டாம்” என்று சொல்லியனுப்பினான் (2 இராஜாக்கள் 14 :10). அமத்சியா கேளாமல் யுத்தத்திற்குச் சென்று தோல்வியடைந்தான். அங்குள்ள பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர். அமத்சியா கர்த்தரை விட்டு விலகினதினால், அந்த ஊர் ஜனங்களே அவனை விரட்டிக் கொன்று போட்டனர் (2 நாளாகமம் 25 : 27). கர்த்தரை விட்டு விலகுகின்ற இருதயமுள்ளவன் சபிக்கப்பட்டவன் என்று வேதம் கூறுகிறது. 

உசியா:

2 நாளாகமம் 26:1 “அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.”

உசியாவின் தந்தை இறந்து விட்டதால் ஜனங்களே கூடிவந்து உசியாவின் பதினாறாவது வயதிலே அவனை ராஜாவாக்கினர். உசியா எருசலேமில் 52 வருஷம் அரசாண்டான். தாவீதும், சாலமோனும் ராஜாவாக 40 வருஷம்தான் அரசாண்டனர். உசியா தன்னுடைய தந்தை செய்த நல்ல பகுதியை, அதாவது செம்மையானதைச் செய்தது போல் தானும் செம்மையானதைச் செய்தான். உசியா வல்லமையாக, திறமையாக, சமாதானமாக, சுபிட்சமாக, ஆட்சி புரிந்தான். உசியா ஆட்சியை ஆரம்பிக்கும் போது தேவனை உத்தமமாகப் பின்பற்றி, அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, தேவனுக்குப் பிரியமாகத் தன்னுடைய வாழ்க்கையை, அரசாட்சியை மாற்றிக் கொண்டிருந்தான். உசியாவின் ஆட்சி இரண்டு பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. 1. தேவனைத் தேடிய காலம், தேவனை விட்டு விட்டு உண்மையற்றவனாயிருந்த காலம். உசியா தேவனைத் தேடிய காலங்களில் அவனுடைய வழிகளில் நடந்து வந்தான். அப்பொழுது அவனுக்குத் தேவனுடைய கிருபையும், பலமும் உதவியும் கிடைத்தது. கர்த்தர் அவனுடைய காரியங்களை வாய்க்கச் செய்தார். 

உசியா ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினான்:

உசியா தன்னுடைய தந்தை இழந்து போன பட்டணங்களையெல்லாம் திரும் பவும் அவர்களோடு போர்புரிந்து வெற்றி பெற்றுத் திருப்பிக் கொண்டான். அவ்வாறு திருப்பி பெலிஸ்திய நாட்டிலும், அஸ்தோத் நாட்டிலும் பட்டணங் களைக் கட்டினான் தேவன் உசியாவோடு துணை நின்றதால், பெலிஸ்திய ரையும், அரேபியரையும், மெகுனியரையும் வென்றான். தேவனுடைய தரிசனங் களில் புத்திமானாயிருந்த சகரியா தீர்க்கதரிசியின் ஆலோசனையைக் கேட்டு, தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான். அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார். காத் என்பது பெலிஸ்தியரின் அரணான பட்டணம். இப்பொழுதும் அஸ்தோத் ஒரு செழிப்பான வியாபார ஸ்தலமாக இருக்கிறது. இப்பொழுது அங்கே ஒரு துறைமுகம் கட்டப்பட்டி ருக்கிறது. இப்பொழுது எருசலேமிலிருந்து பொருட்கள் வெளியே செல்வதற்கும், உள்ளே கொண்டு வருவதற்கும் அஸ்தோத் ஒரு முக்கிய துறைமுகமாக உள்ளது. இந்தப் பகுதிகள் உசியா ராஜாவின் காலத்தில் கைப்பற்றியது. இவைகள் எல்லாமே பாலஸ்தீனிய தேசமாயிருக்கிறது. அம்மோனியர் உசியாவுக்குக் மிகுதியான காணிக்கைகளைக் கொடுத்தார்கள் அவனுடைய பெலத்தைப் பார்த்து, அவனுடைய கீர்த்தி எகிப்தின் எல்லை மட்டும் எட்டினது. மேலும் உசியா எருசலேமிலே மூலைவாசல்மேலும், பள்ளத்தாக்கு வாசல்மேலும், அலங்கத்துக் கோடிகள்மேலும் கோபுரங்களைக் கட்டி அவைகளைப் பலப் படுத்தினான். 

உசியாவின் வேளாண்மை:

அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேக ஆடுமாடுகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டித் தண்ணீரைச் சேகரித்துப் பள்ளத்தாக்குகளில், வயல்களிலும் விவசாயம் பண்ண வைத்து, ஜனங்களை செல்வச் செழிப்போடு வாழ வைத்தான். ஒரு தேசத்தின் முதுகெலும்பு விவசாயமும், விவசாயியும்தான். எந்த தேசம் விவசாயத்தில் முன்னணியில் இருக்கிறதோ அந்தத் தேசம் ஜனங்களால் போற்றப்படுகின்ற தேசமாக, ஜனங்கள் செழிப்பாக, மகிழ்ச்சியாக வாழுகிற தேசமாக இருக்கும்.. அவர்களுடைய வாழ்வாதாரமெல்லாம் கிடைக்கிற தேசமாக இருக்கும். ஏதேன் தோட்டத்தில் கர்த்தர் அவனுக்குத் தோட்டத்தைப் பண்படுத்தும் வேலையைத்தான் கொடுத்தார். திரளான ஆடுமாடுகளை வளர்த்தான். அவன் வேளான்மைப் பிரியனாயிருந்து, அதற்கு முக்கியத்துவம் கொடுத்தான். 

உசியாவின் படை பலம்:

உசியா யுத்த வீரனாக இருந்தான். எவ்வாறு யுத்தத்திற்கு ஆயத்தப்பட வேண்டு மென்றும், அதற்கு என்னென்ன ஆயுதங்கள் செய்ய வேண்டுமென்கிற ஞானத்தைத் தேவன் அவனுக்குக் கொடுத்திருந்தார். எனவே அவன் நிபுணரான தொழிலாளிகளைக் கொண்டு அவைகளையெல்லாம் தயார் படுத்தினான். உசியாவின் காலத்தில் புதுப்புது ஆயுதங்கள் கண்டுபிடிப்பதற்கான ஞானத்தைத் தேவன் கொடுத்தார். அவனுடைய படைபலம் எளிதாக உத்திகளை வெல்ல முடிவதாக இருந்தது. அந்தக் காலத்தில் பெரிபெரிய கற்களை எறியும் இயந்திரம் இருந்திருக்கிறது. மேலும் பெரிபெரிய அம்புகளை எரியும் இயந்திரமும் இருந்திருக்கிறது. அவன் தயாரித்திருந்த வில்லானது தூரமாக அம்பு எய்வதற்கு மனித பலத்தைக் காட்டிலும் அதிகமான பலத்தோடு செல்லக் கூடியதாக இருந்தது. புதிய வழிகளில் யுத்தத்தைச் செய்ய அறிவு பெற்றவனாயிருந்தான். அவனிடம் பராக்கிரசாலிகளான தலைவர்களே இரண்டாயிரத்து அறுநூறு பேர் இருந்தனர். மூன்று லட்சத்து ஏழாயிரத்து ஐநூறு பராக்கிரமமாக யுத்தம் பண்ணுகிற சேனை அவனிடமிருந்தது. அப்படியே அவன் கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று; அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமு ண்டாயிற்று. தன்னுடைய இத்தனை கீர்த்திக்கும் காரணம் கர்த்தர் என்பதை மறந்தான். 

உசியாவின் மேட்டிமை:

ஆசாரியன் தீர்க்கதரிசியாகலாம், ஆனால் தீர்க்கதரிசி ராஜாவாகக்கூட ஆகலாம் ஆனால் ஆசாரியனாக ஆக முடியாது. உசியாவின் மனம் மேட்டிமையானதால் கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாக செயல்பட ஆரம்பிக்கிறான். அந்தச் செயலை தேவாலயத்தில் தொடங்கினான். கர்த்தர் தூபங்காட்டும் பணியை ஆசாரியர்களுக்குக் கொடுத்தார். அந்தப் பதவி பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோன் குடும்பத்தாருக்கு கொடுக்கப்பட்டது (யாத்திராகமம் 30 : 7, 8). அது ஆரோனின் வம்சத்தாருக்கு மட்டுமே உரியது. தூபம் காட்டும்போது எல்லோருடைய பார்வையும் ஆசாரியன் மேல் தானிருக்கும். அதேபோல் எல்லோருடைய பார்வையும் தன்மேலிருக்க வேண்டுமென்றும் அந்த மகிமை தனக்கு வரவேண்டுமென்று உசியா நினைத்தான். 1இராஜாக்கள் 13 : 1 ல் யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையில் நின்றது போல தானும் போக உசியா நினைத்திருப்பான். கர்த்தர், 

உபாகமம் 8 : 10, 11 “ ஆகையால், நீ புசித்துத் திருப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய். உன் தேவனாகிய கர்த்தரை மறவாத படிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.” என்று கூறியிருப்பதை உசியா மறந்து விட்டான். 

ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான லெவிகோத்திரத்திலுள்ள பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், ஆலயத்துக் குள் பிரவேசித்து, தைரியமாக ராஜாவாகிய உசியாவிடம் “கர்த்தருக்குத் தூபங் காட்டுகிறது ராஜாவுற்கு கொடுக்கப்பட்ட பணியல்ல, தூபங்காட்டுகிறது பரிசுத்த மாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்குரியது,” எனவே பரிசுத்த ஸ்தலத்தை விட்டுவெளியே போகக் கூறினர். உடனே உசியா மிகவும் கோபங் கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத் திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று. (2 நாளாகமம் 26 : 17 – 21). உசியா பரிசுத்த ஸ்தலத்துக்குள் போனது முதல் தவறு, இரண்டாவது தவறு தூபங்காட்டச் சென்றது, மூன்றாவது தவறு ஆசாரியர்கள் எச்சரித்தும் கோபங் கொண்டது. அந்த நேரத்தில் கர்த்தர் அவனுக்கு உடனடி நியாயத்தீர்ப்பைக் கொடுத்தார். ஆசாரியர்களுடன் கோபமாகப் பேசியதால் குஷ்டம் வந்தது. 

கர்த்தர் அபிஷேகம் பண்ணிய ஊழியக்காரருக்கு விரோதமாகக் கோபத்தில் நாம் பேசினால், அதன் விளைவு பயங்கரமாயிருக்கும். பிரதான ஆசாரியனாகிய அசரியாவும், சகல ஆசாரியரும் உசியாவின் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்ததைப் பார்த்து அவனைத் தீவிரமாய் அங்கிருந்து வெளிப்படப் பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததை உசியா உணர்ந்ததால் தானும் வெளியே போகத் தீவிரப்பட்டான். அந்த வியாதியினால் ராஜா என்ற பதவியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டான். லேவியராகமம் 13 : 45, 46 ல் …….. அவன் தீட்டுள்ளவன் ஆதலால் தனியே குடியிருக்க வேண்டுமென்றும், அதுவும் பாளையத்துக்குப் புறம்பே இருக்க வேண்டும் என்றும், குஷ்டரோகி இருக்க வேண்டிய விதத்தைப் பற்றித் தேவன் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். ராஜாவாகிய உசியா தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டபடியினால், ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான்; அவன் குமாரனாகிய யோதாம் ராஜாவின் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம்விசாரித்தான். 

இதேபோல் வேதத்தில் சவுல் ராஜாவும் சாமுவேல் தீர்க்கதரிசி வருமுன் கர்த்தருடைய கட்டளையை மீறி சர்வாங்க தகனபலியிட்டதை 1 சாமுவேல் 13 : 9 – 14 ல் பார்க்கிறோம். அதனால் அவனுடைய ராஜ்ஜியபாரத்தை அவனிடமிருந்து எடுத்து வேறொருவனுக்குக் கொடுத்தார். நேபுகாத்நேச்சார் மனமேட்டிமையால் பாபிலோனில் அவன் கட்டிய அரண்மணையைப் பார்த்து தன்னுடைய வல்லமையினால், பராக்கிரமத்தினாலும் தான் கட்டிய மகாபாபிலோன் என்று கூறிய உடனே கர்த்தர் அவனை ராஜ்ஜியபாரத்திலிருந்து நீக்கி ராஜ்ஜியத் திலிருந்து தள்ளப்பட்டு மிருகங்களோடே சஞ்சரிக்க வைத்தார் (தானியேல் 4 : 29 –32). ஏரோது ராஜா தேவமனிதர்களைத் துன்புறுத்தியதாலும், கொலை செய்ததாலும் அவன் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கும்போது தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதினால் கர்த்தருடைய தூதன் அவனை அடித்ததால் அவன் புழுபுழுத்து இறந்தான். இவைகளெல்லாம் நமக்கு எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்டிருக்கிறது. வேதத்தில் மனாசே ராஜா மிகவும் பொல்லாத ராஜா ஆனால் அவனை இரண்டு வெண்களைச் சங்கிலியால் கட்டி பாபிலோனுக்கு கொண்டு போகும் போது, கர்த்தரை நோக்கிக் தன்னைத் தாழ்த்திக் கெஞ்சினான். அவன் கெஞ்சுதலுக்குத் கர்த்தர் இறங்கி அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்ஜியத்துக்கு வரப்பண்ணினார் (2 நாளாகாமம் 33 : 11 – 13). 

முடிவுரை:

உசியா ராஜா சிறந்த கட்டிடக் கலைஞனாக இருந்தாலும், (2நாளாகாமம் 26 : 2, 10), சிறந்த போர்வீரனாக இருந்தாலும் (2நாளாகாமம் 26 : 6, 7, 11 – 13), சிறந்த வேளான்மைப் பிரியனாக இருந்தாலும் (2நாளாகாமம் 26 : 10), சிறந்த பொறியியல் வல்லுனராக இருந்தாலும் (2நாளாகாமம் 26 : 14, 15), அவனது மேட்டிமையால் அனைத்தையும் இழந்தான், எப்பொழுதும் அகந்தையும், மனமேட்டிமையும் அழிவைக் கொண்டு வரும். 

யாக்கோபு 4 : 6 “ ……தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.”

மத்தேயு 23 : 12 “ தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”

உசியா மரணமாய்ந்தபின் அவனை ராஜாக்களின் கல்லறையில் அடக்கம் பண்ணப்படவில்லை. அந்தக் கனத்தை இறந்தபின்னும் பெற முடியவில்லை. அவ்வாறு ராஜாக்களின் கல்லறையில் அடக்கம் பண்ணப்படாத ராஜாக்கள் கனவீனம் பண்ணப்பட்டவர்களாவார். இவ்வாறு கன்வீனமைடைந்த ஐந்து ராஜாக்களை வேதத்தில் பார்க்கலாம். 1. யோராம் (2நாளாகாமம் 21 : 20), 2. யோவாஸ் (2நாளாகாமம் 24 : 25), 3. ஆகாஸ் (2நாளாகாமம் 28 : 27), 4. மனாசே (2நாளாகாமம் 33 : 20), 5. உசியா ( 2நாளாகாமம் 26 : 23). ஐம்பத்திரெண்டு வருடங்கள் கர்த்தர் அவனோடிருந்தும், அத்தனை உயர்வைப் பெற்றும், கர்த்தருக்கு அடங்கி நடக்காதபடி செயல்பட்டதால், அரசாளவும் முடியவில்லை, குடும்பத்தோடு வாழவும் முடியவில்லை. ஆலயத்துக்குள் கர்வத்தில் தேவனுடைய கட்டளையை மீறினதினால், கர்த்தரின் கோபாக்கினைக்கு உள்ளாகி, கர்த்தர் உடனே அவனுக்கு நியாயாத்தீர்ப்பு வழங்கினார். ஆலயத்திலிருந்து அவன் அப்புறப்படுத்தப் பட்டதால், திரும்ப அவன் ஆலயத்துக்குள் செல்லமுடியாதபடி ஆயிற்று. குஷ்டரோகியாயிருந்து தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டதால் ஜனங்கள் யாரும் அவனைப் பார்க்க முடியாது. அவனும் யாரையும் பார்க்க முடியாது. உசியா கர்த்தரை தேடின நாட்களிலெல்லாம் கர்த்தர் அவனுக்கு உதவி செய்தார். உசியா இறந்த அதே வருடத்தில் கர்த்தர் ஏசாயா தீர்க்கதரிசியை அபிஷேகம் செய்து தமது செய்தியை அறிவிக்க யூதாவுக்கும், இஸ்ரவேலுக்கு அனுப்பினார். தேவனுடைய கட்டளையை மீறினால் தேவனுடைய தண்டனைக்கு உள்ளாவோம் என்று இந்தப் பகுதியிலிருந்து அறிந்து கொள்கிறோம். ஆமென்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago