பைபிள் வசனங்கள்

எபேசியர் 5 : 16 – Ephesians 5 : 16 in Tamil

“நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 5:16)

“பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர் விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்” (எபி. 12:17). நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டவன்தான் ஏசா. கர்த்தருடைய ஆசீர்வாதத்தின் மேன்மை இன்னதென்று அறியாமல் சேஷ்டபுத்திர பாகத்தை அற்பமாக எண்ணி வெறும் கூழுக்காக விற்றுவிட்டு பிற்பாடு கண்ணீரோடு தேடி அலைந்தவன்தான் ஏசா. முற்பிதாக்களின் அட்டவணையிலே அவனுடைய பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவனோ தேவ ஆசீர்வாதங்களை அசட்டை பண்ணினதின் நிமித்தம் மேன்மை எல்லாம் இழந்து போனான். பின் அவன் கவலையோடு தேடியும் மனம் மாறுதலைக் காணவில்லை என்று வேதம் சொல்லுகிறது.

காற்று அடைத்த பலூனை நழுவ விட்டு தவிக்கும் சிறுவனைப்போல வாய்ப்பை நழுவ விட்டவர்கள் தவிக்கிறார்கள். ஆண்டாண்டு காலம் அழுது பார்த்தாலும் மீண்டும் கிடைக்காது அவ்வாய்ப்புகள். ஒவ்வொரு வினாடி நேரமும் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற அருமையான சந்தர்ப்பங்கள். அதை நீங்கள் நித்தியத்திற்காகவும் பயன்படுத்த முடியும். வீணாக அரட்டை அடித்து டெலிவிஷன் பார்த்து வீணாக்கவும் முடியும். கடைசி நியாயத்தீர்ப்பின் நாளிலே தவறவிட்ட சந்தர்ப்பங்களுக்காகவும், வீணாக்கிய நேரங்களுக்காகவும் கணக்கு ஒப்புவிக்க வேண்டியது வரும். ஆகவேதான், “காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று ஆவியானவர் ஆலோசனைக் கூறுகிறார் (எபே. 5:16).

ஏசாவைப் பார்க்கிலும் இழந்துபோன சந்தர்ப்பத்திற்காக மிக அதிகமாய் வேதனைப்பட்ட இன்னொரு நபரையும் வேதம் உங்களுக்கு சுட்டிக் காண்பிக்கிறது. அதுதான் நரகத்தில் தத்தளித்த ஐசுவரியவான். பரிதாபமாய் ஆபிரகாமைப் பார்த்து, “தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்ப வேண்டும்; இந்த அக்கினி ஜுவாலையில் வேதனைப் படுகிறேனே” என்று கதறினான் (லூக். 16:24). அந்தோ அவன் கேட்ட ஒன்றும் அவனுக்குக் கிடைக்கவில்லை. தன் வாழ்நாளில் வீணாக்கிய சந்தர்ப்பங்கள் அனைத்தின் நிமித்தம் நித்திய நித்தியமான வேதனையை அவன் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

சிந்தித்துப் பாருங்கள். ஜெயிலில் வாடுகிற ஒரு கைதிக்காகிலும் என்றாவது ஒருநாள் நான் விடுதலையாவேன் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் நரகக் கடலில் சிக்குண்டவர்களுக்கு என்ன நம்பிக்கை உண்டு? நம்பிக்கையே இல்லாத பாதாளத்தில் அவர்கள் நித்திய நித்தியமாய்த் தவிப்பார்கள். பாவத்தில் விழுவதும், பாவ சிற்றின்பங்களில் மூழ்குவதும் சரி செய்ய முடியாத இழப்புக்களைக் கொண்டு வருகிறது!

வேதம் எச்சரிக்கிறது, “அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்க மாட்டாமல் தள்ளுண்டு போனார்கள்” (சங். 36:12). “சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்” (நீதி. 6:15). தேவ பிள்ளைகளே, வாய்ப்புகளை நழுவ விட்டு விடாதிருங்கள்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago