இஸ்ரவேல் தேசத்தில் பஞ்சம் கொடியதாக இருந்ததால், இஸ்ரவேலின் ராஜா மிருகங்களுக்கு ஆகாரம் தேடுவதற்காகத், தானும் தன்னுடைய அரண்மனை விசாரிப்புக்காரனான ஓபதியாவும் வெவ்வேறு திசைகளில் அலைகின்றனர். விக்கிரக ஆராதனையைப் பெருகியதால் வானம் அடைபட்டது. மக்கள் செத்துப் போய்க்கொண்டிருப்பதைப் பற்றி ராஜா கவலைப்படாமல் கழுதைக்கும், குதிரைக்கும் புல் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். யேசபேலுக்குப் பயந்த 100 தீர்க்கதரிசிகளை ஒபதியா ஒளித்து வைத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்த நேரம். அப்பொழுது ஒபதியா வழியில் எலியாவைப் பார்க்கிறான். எலியாவைப் பார்த்தவுடன் அவன் எலியா என்பதை அறிந்து கொண்டான். எலியா அவனிடம் ஆகாபிடம் போய்த் தான் வந்திருப்பதாகப் போய்ச் சொல்லு என்று கூறுகிறான். ஏனென்றால் ஒபதியா ஆகாப் ராஜாவின் அரண்மனையில் வேலை பார்க்கிறவன். விசுவாசவீரரான எலியாவுக்கு ராஜாவிடம் எந்தப் பயமுமில்லை. பயத்தை மறைக்க வைத்ததுதான் கிறிஸ்தவ பாதை. (1 இராஜாக்கள் 18 : 1 – 8)
கர்த்தரின் கட்டளைப்படி புறப்பட்ட எலியா, ஆகாப் ராஜாவின் முன் நிற்க அஞ்சவில்லை. ஆனால் ஒபதியா ஆகாப் பார்ப்பதற்கு முன்பு எலியாவை ஆவியானவர் வேறு இடத்துக்குக் கொண்டு போய் விட்டால், தன்னை ராஜா கொன்று போடுவாரே என்று தன் ஜீவனைக் குறித்துப் பயப்பட்டான். எலியா கூறியதைச் சொல்வது கடினம் என்கிறார். இது ஓபதியாவின் பயந்தாங்கொள்ளித் தனத்தைக் காட்டுகிறது. எலியாவும் ஓபதியாவும் தேவ மனிதர்கள் தான். ஆனால் இருவருக்குமுள்ள வித்தியாசத்தை இதில் பார்க்கிறோம். வந்திருக்கிறேன் என்ற செய்தியை இங்கு மூன்று முறை எலியா அவனிடம் கூறி விட்டதால், ஒபதியா இந்தச் செய்தியை அரசனிடம் போய்க் கூறினான். என்ன செய்தியைக் கூறினாரென்றால் “ எலியா இங்கு வந்திருக்கிறான்” என்ற செய்தியை. இந்தச் செய்தியைத் தான் உலகம் ஒரு நாள் நமக்குக் கொடுக்கப் போகிறது. ( 1 இராஜாக்கள் 18 : 9 – 16 )
தன்னுடைய நாட்டில் மீண்டும் மழை பெய்ய, எலியாவின் மூலமாகத்தான் முடியுமென்பதால், ஆகாப் ராஜா எலியாவைத் தேடிக்கொண்டிருந்தான். ஏனென்றால் எலியாவின் சொல்லிற்கு எதிராகச் செயல்படுவதற்குத் தானும் தன் மனைவியும் வணங்கி வந்த பாகாலினால் முடியவில்லையென்பதை ராஜா உணர்ந்ததால், அவனைத் தேடினார். அதனால் எலியாவைக் கண்டவுடன் “இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறவன் நீயல்லவா” என்றான். அதற்கு எலியா ராஜாவிடம் தைரியமாக “நானல்ல பாகால்களைப் பின்பற்றியதால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறவர்கள்” என்று கூறினான். அதன் பின்பு மேலும் தைரியமாக ஒரு சவாலை ராஜாவின் முன் வைக்கிறான். அவன் வைத்த போட்டியானது, தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையே வைத்த போட்டி அல்லது ஜீவனுள்ள தேவனைத் தொழுது கொள்ளுகிறவர்களுக்கும், பாகாலைத் தொழுது கொள்ளுகிறவர்களுக்கும் இடையே வைத்த போட்டி. (1 இராஜாக்கள் 18 : 17, 18)
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
அந்தப் போட்டி என்னவெனில் இருவரும் பலிபீடத்தில் காளையைத் துண்டித்து வைக்க வேண்டும். அக்கினியில் உத்தரவு அருளும் தெய்வமே உண்மையான தெய்வம் என்பது தான். கர்த்தரின் பட்சத்தில் எலியா ஒருவன் மட்டுமே, அந்தச் செயலுக்காக நிற்கிறான். எதிரிகளின் சேனையில் பாகால் பூசாரிகள் 450 பேரும், தோப்பு விக்கிரக பூசாரிகள் 400 பேரும் ஆக 850 பேர் கர்மேல் மலையில் கூடினர். எலியாவின் சவாலால் ராஜா இவ்வாறு எல்லாரையும் கர்மேல் மலையில் கூட்டினார். கர்மேல் மலையானது எலியாவின் காலத்தில் அடர்ந்த காடாக இருந்தது. எலியா ஜனங்களைப் பார்த்து “நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்தி குந்தி நடப்பீர்கள்” என்று கேட்டான். ஜனங்கள் அதற்கு மௌனம் சாதித்தனர். அதன் பொருள் தேவனைத் தொழுது கொள்வது போல் பாகாலைத் தொழுது கொண்டிருந்தனர். ஜனங்கள் பதில் சொல்லாதற்குக் காரணம் அவர்கள் பாவமுள்ளவர்களாக இருந்து, இரட்டை வாழ்க்கை வாழ்ந்தனர். (1 இராஜாக்கள் 18 : 19 – 21)
பாகாலின் தீர்க்கதரிசிகளைப் பார்த்து எலியா பேசவேயில்லை. ஏனெனில் அவர்கள் நியாயத்தீர்ப்புக்காக நியமிக்கப்பட்டவர்கள் என்பதால். எலியா ஜனங்களைப் பார்த்து கர்த்தரின் தீர்க்கதரிசிகளின் மீந்திருக்கிறவன் நான் ஒருவன் மட்டுமே என்கிறான். இது எலியா கூறிய தவறான வார்த்தைகள். பாகாலை வணங்காத 7 ஆயிரம் பேர் மீந்திருந்தனர் (19 : 18). ஆனால் இவர்களைக் குறித்து எலியாவுக்குத் தெரியாது. பாகாலின் தீர்க்கதரிசிகள் செய்த செயல்களையும் மத்தியானம் வரை அவர்கள் மாயாஜாலம் காட்டியதையும் உடலைக் கத்தியால் கீறிக்கொண்டதையும் எலியா பார்த்தார். அவர்களது பாகால் தெய்வத்திடமிருந்து பதில் வரவில்லை. எலியா அவர்களைப் பார்த்துக் கேலியாக, உங்கள் கடவுள் தூங்கியிருப்பான் அல்லது பிரயாணம் போயிருப்பான் என்று பரிகாசம் பண்ணியதைப் பார்க்கிறோம். (1 ராஜாக்கள் 18 : 22 – 30)
அவர்கள் முன்னிலையில் எலியா ஜனங்கள் எல்லோரையும் கிட்ட வரச் சொன்னார். நாமும் தேவனண்டை கிட்டி சேரவேண்டும். அவருடைய பிரசன்னத்தில், தேவனுடைய வார்த்தையில், அவரண்டை சேர வேண்டும். மனிதனும் தேவனும் சந்திக்கும் இடம் தான் பலிபீடம். நம்முடைய இருதயமே தேவனுடைய பலிபீடம். அங்குள்ள பலிபீடம் உடைந்து கிடந்ததால் அதைச் செப்பனிட்டார். இது எதைக் காட்டுகிறதென்றால் பிளந்து கிடக்கிற கோத்திரங்களுக்காக எலியா பன்னிரண்டு கற்களை எடுத்து ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு இஸ்ரவேல் என்று பெயர் சூட்டினார். மனிதனோடும் தேவனோடும் போராடி யாக்கோபு என்ற பெயரை இஸ்ரவேலாக மாற்றியவர். தேவன் பழைய எத்தனை தேவபிரபுவாக மாற்றினார். ஒருமனப்பாடு வரவேண்டும் என்பதற்காக, அந்தப் பெயரைச் சூட்டினார். இஸ்ரவேல் என்ற பெயரில் தான் கானான் தேசம், இஸ்ரவேல் நாடாக மாறியது. கர்த்தர் தன்னை இஸ்ரவேலின் தேவனென்று அழைக்க வெட்கப்படவில்லை. (1 இராஜாக்கள் 18 : 30 ,31)
அதன்பின் அதைச் சுற்றிலும் வாய்க்காலை உண்டு பண்ணினார். தண்ணீரினால் அந்த வாய்க்காலை நிரப்பினார். விறகுகளை அடுக்கிக் காளையைச் சந்துசந்தாக வெட்டி விறகுகளின் மேல் வைத்தார். அதன் மேல் 4 குடம் தண்ணீரை மூன்று முறை ஊற்றச் சொன்னார். மொத்தம் 12 குடம் தண்ணீர் ஊற்றப்பட்டது. இந்தத் தண்ணீரை ஊற்றியது, பாவ அறிக்கை செய்ய இருதயத்தை ஊற்றுவது போலாகும். பின் அந்தி பலி செலுத்தும் நேரத்துக்காகக் காத்திருந்தார். (1 இராஜாக்கள் 18 : 32 – 35) இயேசுவை அந்திபலி செலுத்தும் நேரத்தில் தான் சிலுவையில் அறைந்தனர். இனி கர்த்தர் தான் செயல்பட வேண்டுமென்று ஜெபிக்க ஆரம்பித்தார்.
1 ராஜாக்கள் 18 : 36, 37, 38 “ … ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரனென்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படியே செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப் பண்ணும்.”
“கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்.”
“அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும் மண்ணையும், பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.”
முதலில் தேவனுடைய நாமத்தை மகிமைப் படுத்தினான். இரண்டாவதாக எலியா தான் தேவனுடைய ஊழியக்காரர் என்றும் தேவனுடைய வார்த்தையின்படியே தான் இவைகளையெல்லாம் செய்தேன் என்பதை விளங்கப் பண்ணும் என்று ஜெபித்தான். இது தேவ ஊழியக்காரனின் அடையாளத்தைக் காட்டுகிறது. மூன்றாவதாக ஜனங்கள் மனம் திரும்ப ஜெபித்தார். எலியா ஜெபித்த உடனே வானத்திலிருந்து அக்கினி இறங்கி பலியைப் பட்சித்தது. இரண்டாவதாக விறகைப் பட்சித்தது. மூன்றாவதாக தண்ணிரை நக்கியது. இந்த உன்னத அக்கினி கீழிருந்து மேல்நோக்கி வந்ததல்ல. மேலிருந்து கீழ்நோக்கி இறங்கி வந்தது. இதைப் பார்த்த ஜனங்கள் வியப்புடன் முகங்குப்புற விழுந்து கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்று அறிக்கையிட்டனர்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
உடனே எலியா பாகால் தீர்க்கதரிசிகளைப் பிடியுங்கள் என்று கட்டளை யிட்டார். உபாகமம் 13 : 6 – 11 ன்படி அவர்களை கீசோன் ஆற்றங்கரைக்குக் கொண்டுபோய் தேவனின் திட்டத்தின்படியே வெட்டிப்போட்டான் (1இராஜாக்கள் 18: 40). இது ஒரு கொடூரமான செயலாகத் தெரியலாம். ஆனால் கர்த்தருக்கு விரோதமான காரியங்களை, வேதப் புரட்டுகளைப், பொய்யான உபதேசங்களை முற்றிலும் அழிக்க வேண்டியது மிகமிக முக்கியமானது. ஜனங்கள் மனந்திரும்பினர். எலியா ஆகாப் ராஜாவிடம் “ நீர் போய் போஜனம் பண்ணும், பெருமழையின் இரைச்சல் கேட்கிறது” என்று கூறினான். உடனே ஆகாப் போஜனம் பண்ணப் போன பின்பு, எலியா கர்மேல் சிகரத்தின் மேல் ஏறித் தரையிலே பணிந்து தன்முகம் தன் முழங்காலில் படக் குனிந்து தம்மை முழுமையாகப் பூஜ்ஜியமாக்கிக் கொண்டு ஜெபம் பண்ணினான். முழங்கால்படியிட்டு ஜெபித்தல் பயபக்திகுறிய காரியமாகப் பரிசுத்தவான்களால் கருதப்பட்டது. கர்த்தருக்கு முன்பாக முடங்காத முழங்கால்கள் இல்லையென பிலிப்பியர் 2 : 10, ஏசாயா 45 : 23 ல் பார்க்கிறோம். இந்த ஜெபம் ஒரு நீதிமானின் ஜெபம். நம்மைப் போன்ற ஒரு மனிதனின் ஊக்கமான ஜெபம். விசுவாசமுள்ள ஜெபம்.
யாக்கோபு 5 : 17 “எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயி ருந்தும் மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம் பண்ணினான். அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.”
என்று யாக்கோபு கூறியிருப்பதை வேதத்தில் பார்க்கிறோம். எலியா தன் ஊழியக்காரனிடம் மழை வருகிறதா போய்ப் பார் என்றான். அவன் போய்ப் பார்த்து இல்லை என்று கூறினான். எலியா அவனிடம் இன்னும் ஏழு தடவை போய்ப்பார் என்றான். அவன் ஏழாவது தடவை போய்ப் பார்த்த போது, உள்ளங்கை அளவு சிறிய மேகம் எழும்புகிறது என்றான். பின் ஆகாபிடம் ரதத்தைப் பூட்டிப் போகச் சொல் என்றான். உடனே பெருமழை உண்டாயிற்று. ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான். கர்த்தருடைய கை எலியாவின் மேல் இருந்ததால் ஆறு மைல் தூரமுள்ள பந்தயத்தில், எலியா தன் அறையைக் கட்டிக்கொண்டு யெஸ்ரயேலுக்கு வருமட்டும் ஆகாபுக்கு முன்பாக ஓடினான். இஸ்ரவேல் தேசமானது மூன்றரை வருடங்களுக்குப் பின்பு மழையைப் பார்த்தது. இந்தப் போட்டியின் மூலம் ஜனங்கள் உண்மையான தேவன் யார் என்பதையும் அறியச் செய்தார்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…