காலேப் யூதா கோத்திரத்தில் உள்ள எப்புன்னேயின் குமாரன் (எண்ணாகமம் 13 : 6) காலேப் வித்தியாசமான தேவனுடைய மனிதன். காலேப் என்றால் பலமான சக்தியுள்ள திராணி உள்ளவன் என்றும் விசுவாசமுள்ள நாய் என்றும் பொருள். மோசேயோடு கானான் தேசத்துக்குச் செல்லக் காலேப் தன்னையும் இணைத்துக் கொண்டவன். தேவனை உத்தமமாய்ப் பின்பற்றிய ஒரு சிலரில் காலேபும் ஒருவன். அவனுக்குள் ஒரு வித்தியாசமான ஆவி இருந்தது. எல்லோரும் ஒருவிதமாயிருந்த போது இவனுடைய குணமும், பார்வையும் வித்தியாசமாக இருந்தது. எல்லோரும் எதிர்மறையாய், தோல்வியாய்ப் பேசியபோது காலேப் தன் விசுவாசத்தின் ஆவியினாலே ஜெயத்தை, வெற்றியைப் பேசினான். (எண்ணாகமம் 13: 30). எனவே காலேப் கானானைச் சுதந்தரித்தான். காலேபின் ஆவி விடாமுயற்சியின் ஆவி. அந்த ஆவியினால் தனது 85 வது வயதிலும் விசுவாசத்தை விட்டு இறங்கவில்லை. அரக்கர்கள் வாழ்ந்த மலைநாட்டைக் கேட்டு வாங்கி ஜெயம் பெற்றான். “யாவரும் உண்மையற்றவர்களாக இருந்தாலும் நான் உண்மையுள்ளவனாக இருப்பேன். யாவரும் விசுவாசத்தை விட்டு வழுவிப் போனாலும் நான் நிலைத்திருப்பேன். யாவரும் ஆத்தும ஆதாயம் செய்யாவிடினும் நான் ஆத்தும ஆதாயம் செய்வேன். யாவரும் பின்வாங்கினாலும் நான் பின்வாங்க மாட்டேன்” என்று சவாலாக வாழ்ந்து காட்டியவர் காலேப். யோசுவாவும் காலேபும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தனர். 

கானானை சுற்றிப் பார்த்த 10 பேர்களின் செய்தி: எண்ணாகாமம் 13 : 1 – 29, 32, 33 

இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய திட்டத்தின்படி புறப்பட்டு கானான் தேசத்தை நெருங்குவதற்கு பாரான் வனாந்திரத்தில் வந்துவிட்டனர். அப்பொழுது கர்த்தர் மோசேயிடம் ஒவ்வொரு கோத்திரத்திலும் ஒருவர் தெரிந்தெடுக்கப் பட்டு 12 கோத்திரத்திற்கு 12 நபர்களை கானான் தேசத்தை வேவு பார்க்க அனுப்பச் சொல்லிக் கட்டளையிட்டார். கர்த்தருடைய கட்டளையின்படியே ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 பேரை கானான் தேசத்திற்கு மோசே அனுப்பினார். அனுப்பும்போது அந்தத் தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதா கெட்டதா, நிலம் எப்படிப்பட்டது, விருஷங்கள் உண்டா, கனி எப்படிப்பட்டது, அங்குள்ள பட்டணங்கள் எப்படிப்பட்டது, அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறார்களா, கோட்டைகளில் குடியிருக்கிறார்களா என்றெல்லாம் பார்ப்பதற்கு அனுப்பினார். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் காலேபும், யோசுவாவும் இருவர். காலேப் யூதாகோத்திரத்தையும், யோசுவா எப்பிராயீம் கோத்திரத்தையும் சேர்ந்தவர்கள். பன்னிரெண்டு பேரும் 40 நாட்கள் கானான் தேசத்தை சுற்றிப் பார்த்தனர். அங்கிருந்து வரும்போது ஒரு திராட்சைக் கொடியை ஒரு தடியில் இரண்டுபேர் கட்டித் தூக்கிக் கொண்டு வந்தனர். மாதுளம் பழங்களிலும், அத்திப் பழங்களிலும் சிலவற்றைக் கொண்டு வந்தார்கள். 

சுற்றிப் பார்த்தவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து மோசே, ஆரோன் என்பவர்களிடத்திலும், இஸ்ரவேல் சபையார் எல்லாரிடத்திலும் தான் பார்த்து வந்த செய்தியைக் கூறினார்கள். ஆனால் “ஆனாலும்” என எழுந்து காலேபும் ,யோசுவாவும் தவிர மற்றவர்கள் துர்ச்செய்தியைப் பரப்பி மாபெரும் கேட்டை விளைவித்தனர் (எண்ணாகாமம் 13 : 28). அவர்கள் அந்தத் தேசத்தில் குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களென்றும், அங்கே ஏனோக்கின் குமாரர்களாகிய ராட்சதர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்களருகில் அமலேக்கியர், ஏத்தியர், எபூசியர், எமோரியர் குடியிருக்கிறார்கள் என்றும் கூறினர் . எனவே அந்தத் தேசம் குடிகளைப் பட்சிக்கிற தேசம் என்றனர்.. இவர்கள் அவர்களுடைய பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப் போலிருந்ததாகக் கூறினார்கள். அவர்கள் கூறியது அனைத்தும் உண்மைதான். காலேபும் யோசுவாவும் தவிர மற்ற 10 பேரும் மாம்சக் கண்ணோட்டத்தில் பார்த்தனர். அவர்கள் அதை திரித்துக் கூறியதால் தேவனை விட்டுத் துரமாகச் சென்று விட்டதைப் பார்க்கிறோம். அவர்களின் பயம் விசுவாசத்தை அழித்து விட்டது. பயம் வந்தாலே பிரச்சனைகள் பெரிதாகும். 

அவர்களுக்கு எகிப்தில் 400 வருஷம் இருந்த அடிமைத்தனத்தின் ஆவி இருந்தது. அதனால் அவர்களுடைய கண்கள் ஏனோக்கியரையும், அரணிப்பான மதில்களையும், அங்கிருந்த சூழ்நிலைகளையும் பார்த்தது. ஆனால் ஒன்றை மட்டும் அவர்களுடைய கண்கள் பார்க்கத் தவறி விட்டது. எரிகோ பட்டணத்தை ஜெபத்தால் தகர்த்தெறிந்த கர்த்தரை அங்கு வைத்துப் பார்க்கத் தவறி விட்டனர். இந்த இடம் வருகிறவரை கர்த்தர் 31 ராஜாக்களையும் 7 ஜாதிகளையும் முறியடித்துக் கூட்டி வந்ததை மறந்தனர். அதனால் அவர்கள் கூறியது போல அது செழிப்பான நாடு தான், ஆனால் அரணான பட்டணங்களையும், பலத்த எதிரிகளையும், இராட்சதப் பிறவிகளையும் சிறியவர்களான தங்களால் வெல்லமுடியாது என்று நினைத்தனர். கர்த்தர் பாலும், தேனும் ஓடுகிற அந்த நாட்டைத் தங்களுக்குக் கொடுப்பேன் என்று வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்று சொல்லவில்லை. சபையார் எல்லோரும் அன்று இரவு முழுவதும் அழுது புலம்பிக் கொண்டிருந்தனர் . மோசே, ஆரோன், காலேப், யோசுவாவைத் தவிர அத்தனை பேரும் முறுமுறுத்து, இவர்கள் மேல் கல்லெறியப் போனார்கள். கர்த்தர் கோபத்தில் அவர்களை அழிக்கக் கூறினார் ஆனால் மோசேயோ தேவ சமூகத்தில் மன்றாடி தேவகோபத்தைத் தணித்தார். 

காலேப், யோசுவாவின் செய்தி:

எண்ணாகமம் 13 : 30 14 : 6 – 10 “அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.” 

தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்.’ கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள். அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக்கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது. “

காலேபும், யோசுவாவும் கர்த்தர் செய்த அற்புதங்களை அத்தனை வருஷங்களும் மோசேயோடு இருந்து பார்த்தவர்கள். எகிப்தியருக்குப் பத்து வாதைகளைக் கர்த்தர் கொடுத்ததையும், செங்கடலை இரண்டாய் பிளந்ததையும், யோர்தானைப் பின்னிட்டு அனுப்பியதையும், எரிகோ கோட்டையைத் தகர்த்ததையும், கர்த்தர் தன் கைகளால் எழுதி நியாயப்பிரமாணங்களைக் கொடுத்ததையும், பகலில் மேக ஸ்தம்பத்திலும், இரவில் அக்கினி ஸ்தம்பத்திலும் ஜனங்களைக் காத்ததையும் கண்ணால் பார்த்தவர்கள். எனவே இந்த இருவரும் கானானைக் கர்த்தரின் கண்ணோட்டத்தில் பார்த்தனர். பெரிய நாடு, செழிப்பான நாடு, அரணான பட்டணங்கள், பலமான எதிரிகள் ஆனால் தேவனால் அவர்களை வென்று தங்களுக்குச் சொந்தமாக்கிக் தரமுடியும் என்று விசுவாசித்தனர். இருவரும் ஜனங்களின் பேச்சால் மனமுடைந்து தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு கர்த்தருடைய சமூகத்தில் விழுந்து கிடந்தனர். பின் ஒரு தலைவனைப் போல காலேப் பேச ஆரம்பித்தான். 

எனவே காலேபுக்கும் யோசுவாவுக்கும் தேவனுக்கு முன் அங்கிருந்த மக்கள் வெட்டுக்கிளிகளாகத் தோன்றினார். ஆனால் மற்ற பத்து பேரும் அந்த ஜனங்களுக்கு முன்னால் வெட்டுக்கிளிகளாக இருந்தனர். தேவனை விட்டுவிட்டால் அற்பமானவர் கூட பலவானாய்த் தெரிவார்கள். தேவனை முதன்மையான இடத்தில் வைக்கவில்லையென்றால் வேதனைதான் வரும். தேவனுடைய பலத்தினால் அங்குள்ளவர்களை மேற்கொள்ள முடியும் என்று கூறியிருப்பார்களானால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பர். மேலும் காலேபும், யோசுவாவும் தவிர மற்ற 10 பேரும் மனிதருக்குப் பயப்பட்டனர். ஆனால் இவர்கள் இருவரும் கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களாக இருந்தனர். எகிப்திலிருந்து புறப்பட்ட அவர்களில் எண்ணப்பட்ட யுத்த புருஷர் 603550 பேர் ஆவர். பிள்ளைகளையும் பெண்களையும் சேர்த்து சுமார் 20 லட்சம் பேர் இருந்திருப்பார்கள் அவர்களில் யோசுவாவும் காலேபுமாகிய இருவரும் அவர்களது குடும்பங்களும் மட்டுமே கானானை அடைய முடிந்தது.

கர்த்தர் உன் வார்த்தையின்படி மன்னித்தேன் என்று மோசேயிடம் கூறினாலும், தனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள் என்றார் (எண்ணாகமம் 14 : 20, 23). பத்து பேரின் பேச்சை நம்பிய மக்கள் வனாந்தரத்தில் பட்டுப் போனார்கள். ஒருவரின் கூற்றும் செல்லுபடியாகவில்லை. எண்ணாகாமம் 12 : 2 ல் “இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்” என்ற சொற்களைக் கர்த்தர் நிறைவேற்றினார். கர்த்தர் இஸ்ரவேலர் மறந்த சில முக்கிய காரியங்கள்: 1. இஸ்ரவேலர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது (எபிரேயர் 4 : 6). 2. அவர்கள் இரத்தத்தினால் மீட்கப்பட்டிருந்தார்கள் (யாத்திராகமம் 6 : 6, 12 : 13). 3. செங்கடலைக் கடந்து சென்றார்கள் (யாத்திராகமம் 14 : 22). ஆவிக்குரிய போஜனத்தைச் சாப்பிட்டார்கள் (யாத்திராகமம் 16 : 4, 1 கொரிந்தியர் 10 : 3). பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டார்கள் (எண்ணாகமம் 11 : 17, 25). 

இத்தனை அனுபவத்தையும், மீட்பையும் பெற்றுக்கொண்ட போதிலும் ஜனங்கள் தேவனுக்கு எதிராக முறுமுறுத்தார்கள் (எண்ணாகமம் 14 : 2). தேவனுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள் (எண்ணாகமம் 14 : 9). தேவனை வெறுத்து, அவரை விசுவாசிக்க மறுத்தார்கள் ( எண்ணாகமம் 14 : 11). தேவனைப் பரீட்சை பார்த்தார்கள் (எண்ணாகமம் 14 : 22). கர்த்தருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள் (எண்ணாகமம் 14 : 41). கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப் போனார்கள் (எண்ணாகமம் 14 : 43). அவர்களுடைய கீழ்ப்படியாமை அவர்கள் மேல் தேவ கோபம் வரச் செய்தது (1கொரிந்தியர் 10 : 5 – 10, எபிரேயர் 3 : 10, 17). மரணத்தையும் அழியாமையையும் கொண்டு வந்தது (எண்ணாகமம் 14 : 29, 35). கானான் தேசத்தில் நுழையும் வாய்ப்பை இழந்தார்கள் ( எண்ணாகமம் 14 : 22, 23). கர்த்தருடைய இளைப்பாறுதலை இழந்தார்கள் (சங்கீதம் 95 : 7 – 11, எபிரேயர் 3 : 11, 18). ஆனால் காலேபும், யோசுவாவும் தங்கள் அறிக்கையில் சற்றும் பின்னடையாமல் இருந்தனர். ஜனங்களிடம் சமாதானமாகக் கர்த்தர் நம்மோடிருப்பதால் அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை என்று அவர்களை உற்சாகப்படுத்தினர். 

மேலும் அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப் போயிற்று என்றும், அதனால் அவர்கள் நமக்கு இரையாவார்கள் என்றும் உற்சாகப்படுத்தினர். எனவே அவர்கள் கானானை அடைந்தனர். நாம் பேசும் ஆபாச வார்த்தைகளைக் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். அவைகள் நமது ஆன்மீக வாழ்வின் ஆசீர்வாதங்களுக்கு மிகப்பெரிய இடையூறாகும். எனவே விசுவாச வார்த்தைகளோடு செயல்களைத் துவக்க வேண்டும். நமது கண்கள் கர்த்தரையே நோக்கி இருக்க வேண்டும். ஜெயகிறிஸ்து எப்பொழுதும் நம்மோடிருக்கிறார் என்ற எண்ணம் எப்பொழுதும் நமக்கு இருக்க வேண்டும். அதனால் “நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் மதிலைத் தாண்டுவேன்” என்று விசுவாசத்தோடு அறிக்கை செய்ய வேண்டும். காலேபின் மேலும் யோசுவாவின் மேலும் அவர்கள் கல்லெறிய வேண்டுமென்ற போது, கர்த்தருடைய மகிமை ஆசாரிப்புக் கூடாரத்தில் எல்லோருக்கும் முன்பாகக் காணப்பட்டது. காலேபும், யோசுவாவும் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் நிலையிருந்த போதிலும் தேவனுடைய மக்களின் உணர்ச்சிகரமான தீர்மானத்தை, மக்களில் பெரும்பாலானோரின் அபிப்பிராயத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள். 

காலேப் மலைநாட்டைக் கேட்டது:

யோசுவா 14 : 11, 12 “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள் வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது. ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத்தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, ஏனோக்கியரைத் துரத்திவிடுவேன் என்றான்.”

கானானுக்குள் காலேப் பிரவேசித்த பின்னும் விடாமல் மலைநாட்டை கேட்டு வாங்கிக் கொண்டான். காலேபின் வாழ்க்கையில் தேவன் என்ன சொன்னாரோ அது அவனது வாழ்க்கையில் நிறைவேறியது. காலேப் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றியபடியால் அவனது நாற்பதாவது வயதில் அவன் கால் மிதிக்கும் தேசமெல்லாம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று ஏற்கெனவே கர்த்தர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார். இவ்வாறு தேவனுடைய வார்த்தையை காலேப் உறுதியாய்ப் பின்பற்றினான் என்று பார்க்கிறோம். இதுதான் அவனது பெலத்தின் இரகசியம். (யோசுவா 14 : 9). அதனால் யோசுவா தேசத்தைப் பங்கிடும்போது காலேப் யோசுவாவிடம், எண்பத்தைந்தாவது வயதிலும் மலைநாட்டைக் கேட்டு வாங்கி அவர்களை ஜெயித்து வெற்றி பெற்றான். “நீ சோர்ந்து போவாயானால் உன் பெலன் குறுகினது” என்று வேதத்தில் வாசிக்கிறோம். அந்தப் பலன் நமக்கு வேண்டும். அதைக் கேட்ட யோசுவா காலேபுக்கு எபிரோனை சுதந்தரமாகக் கொடுத்தான். அதனால் எபிரோன் காலேபுக்குச் சுதந்தரமாயிற்று. எபிரோனென்றால் ஐக்கியம் இணையுமிடம் என்று பொருள். தேவனோடு இணைகிற வாழ்க்கை வேண்டும். இரவும் பகலும் வேதத்தைத் தியானிக்கிற மனுஷன் பாக்கியவான் அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் என்றும் வேதம் கூறுகிறது. நாம் உலகத்தை, சாத்தானை ஜெயிக்க வேண்டுமென்றால் கர்த்தருடைய வார்த்தையைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். வார்த்தையில்தான் பெலனும் வல்லமையுமிருக்கிறது. 

காலேப் கர்த்தரிமிருந்து பெற்ற வாக்குத்தத்தங்கள்:

உபாகமம் 1 : 36 ல் “எப்புன்னேயின் குமாரனாகிய காலேப்மாத்திரம் அதைக் காண்பான்; அவன் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியால், நான் அவன் மிதித்துவந்த தேசத்தை அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் ஆணையிட்டார்.”

எண்ணாகமம் 14 : 24 “என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.” 

6 லட்சம் கொண்ட அந்தக் கூட்டத்தின் மத்தியில் ஒரு தலைமுறையே அழிந்து போகும்போது காலேப் மாத்திரம் கானானுக்குள் பிரவேசிப்பான் என்று கர்த்தர் வாக்களித்து அதில் பிரவேசித்தான். மற்றவர்கள் வழியில் அழிக்கப்பட்டனர். அதற்குப் பின்பு வனாந்தரத்தில் பிறந்த பிள்ளைகள்தான் கானானுக்குள் நுழைந்தனர். கர்த்தர் காலேபுக்கும், அவனது பிள்ளைகளுக்கும் அவன் போய் வந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று ஆணையிட்டதைப் பார்க்கிறோம். காலேப் பிசாசை எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவன். தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட பாத்திரமாயிருந்தான். அவனுடைய இருதயம் பயமற்ற இருதயமாக இருந்தது. அவன் ஓரு விசுவாச வீரன். எல்லோரும் துர்செய்தியைச் சொல்லும்போது நற்செய்தியைச் சொன்னான். தேவனுடைய வார்த்தையை உத்தமமாய் பின்பற்றினான். ஜெபஜீவியத்தையுடையவன். அரக்கர்கள் வாழ்ந்த மலையைத் தனக்குப் பங்காகக் கேட்டு வயதானபின்பும் அரக்கர்களைத் துரத்துவதற்கு தைரியமும் விசுவாசமும் உடையவனாயிருந்தான். இராட்சதப் பிறவிகளைத் துரத்தினவன். யாவரும் விசுவாசத்தை விட்டு விலகிப் போகும்போது காலேப் விசுவாசத்தில் நிலைத்திருந்தான். 

நீர்பாய்ச்சலான தோட்டத்தையுடையவன். ஜெபித்தவனுக்குத் தன்னுடைய மகளைக் கொடுத்தவன். இத்தனை ஆசீர்களையும் காலேப் பெற்றிருந்தான். நாமும் அவனைப்போல தேவனையும் அவருடைய வார்த்தைகளையும் பின்பற்றி பெலத்தையும், ஜெயத்தையும் பெறுவோம். நமக்கு வரும் எல்லா பிரச்சனைகளைவிட நம் ஆண்டவர் மிகவும் பெரியவர் என்ற எண்ணம் எப்பொழுதும் நம் மனதில் இருக்க வேண்டும். கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்ற விசுவாச வார்த்தைகளையே பேச வேண்டும். பரிசுத்த ஆவியின் பெலன் நம்மைப் பரம கானான் வரை வழிநடத்தட்டும். ஆமென்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago