ஆதாம் ஏவாளின் பிள்ளைகள்:

ஆதியாகமம் 4 : 1, 2 “ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள். பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ….”

ஆதாமும் ஏவாளும் இறைவனால் படைக்கப்பட்டு ஏதேன் தோட்டத்தில் இருந்த பொழுது அவர்கள் பாவம் செய்தனர். அவர்கள் பாவம் செய்த பின்னும் தேவன் அவர்களை வெறுக்கவில்லை. முதன்முதல் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் நல்ல உடை உடுத்துவிக்க ஒரு ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டது. அவர்கள் தேவனுடைய கட்டளையை மீறியதால், ஏதேன் தோட்டத்தை விட்டு கர்த்தரால் வெளியே அனுப்பப்பட்டனர். ஏவாள் அதன் பின் கர்ப்பவதியானாள். அவளுக்குக் கர்ப்பம் என்றால் என்னவென்றே தெரியாது. முதல் முதல் உலகத்தில் கர்ப்பம் தரித்த பெண் ஏவாள். முதல் பிரசவமும் அவள் மூலமாய்த் தான் வந்தது. அவள் முதல் குழந்தையாகக் காயீனைப் பெற்றெடுத்தாள். அதனால் கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்று சந்தோஷம் அடைந்தாள். அதன் பின் ஆபேலைப் பெற்றெடுத்தாள். இருவரும் ஆதாம் ஏவாளின் பிள்ளைகள். இந்த இரண்டு பேரும் சகோதரர்களாக, கர்த்தருடைய விசுவாசிகளாக இருந்தனர். ஆனால் இருவரும் குணங்களில் வேறுபட்டவர்களாக இருந்தனர். இதில் காயீன் துன்மார்க்கனாகவும், ஆபேல் நீதிமானாகவும் இருக்கிறான். காயீன் உலகத்துக்குரியவனாகவும், ஆபேல் ஆவிக்குரியவனாகவும் வேதத்தில் பார்க்கிறோம். ஆபேல் என்றால் சுவாசம் அல்லது மாயை என்று பொருள். ஏதேன் தோட்டத்தை விட்டு தேவன் என்றைக்கு ஆதாமையும், ஏவாளையும் வெளியே அனுப்பினாரோ அதனால் அவர்கள் பிழைப்பதற்கு உழைக்க வேண்டியது அவசியமாக இருந்தது. ஏதேன் தோட்டத்துக்குள் அவர்கள் செழிப்பாக சந்தோஷமாக இருந்தார்கள். என்றைக்கு அவர்கள் தேவனுடைய மகிமையை இழந்தார்களோ அவர்களினிமித்தம் பூமி சபிக்கப்பட்டுப் போயிற்று. நெற்றியின் வியர்வை நிலத்தில் சிந்த வேலை செய்தால் தான் பிழைக்க முடியும். . காயீனும், ஆபேலும் அதனால் வேலை செய்தனர். 

காயீன், ஆபேலின் தொழிலும், காணிக்கையும்:

ஆதியாகமம் 4 : 2 – 5 “ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான். சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையான வைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை….”

ஆபேல் நல்ல வேலையான மந்தை மேய்க்கும் தொழிலைத் தெரிந்து கொண்டான். ஏனெனில் எபிரேயர்களும், ஆபிரகாமும், தாவீதும் இந்தத் தொழிலைத்தான் செய்தனர். இயேசு கூட “ நானே நல்ல மேய்ப்பன்” என்று கூறினார். காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனாக இருந்தான் வாலிபப் பிள்ளைகள் அவரவர்களின் திறமைக்குத்தக்கதாக வேலைக்குப் போக வேண்டும் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம். முதலில் காயீன் நிலத்தின் கனிகளைக் காணிக்கையாகக் கொண்டு வந்தான். ஆபேலும் தன் மந்தையில் உள்ள தலையீற்றில் கொழுமையானவைகளில் சிலவற்றை காணிக்கையாகக் கொண்டு வந்தான். அதனால் இருவரும் தேவனை மதித்தனர் என்றறிகிறோம். காயீன் ஒரு விக்கிரக ஆராதனைக்காரன் அல்ல. அவன் ஒரு விக்கிரகத்துக்குக் காணிக்கையைக் கொண்டு வரவில்லை. மெய்யான தேவனுக்குத்தான் காணிக்கையைக் கொண்டு வந்தான். ஆனால் கர்த்தர் ஒருவனின் காணிக்கையை அங்கீகரித்து ஒருவனின் காணிக்கையை புறக்கணித்தார். தேவன் அவ்வாறு யாரையும் புறக்கணிக்கிறவரல்ல. தேவன் இருவரையும் நேசித்தார். தன்னிடத்தில் வருகிறவர்களை புறம்பே தள்ளாதவர். கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாயிருப்பேன் என்றவர். அவர் யாரையும் புறக்கணிக்க மாட்டார். 

காணிக்கைகளைப் பற்றிய விவரம்:

வேதத்தில் காணிக்கை செலுத்த வரும்போது அர்ப்பணிப்புடனும், சந்தோஷத்துடனும் கொடுக்க வேண்டுமென்று 1 நாளாகாமம் 29 : 3 லும், மனப்பூர்வமாய்க் காணிக்கை செலுத்த வேண்டுமென்று 1 நாளாகாமம் 29 : 5 லும், சந்தோஷத்துடன் கொடுக்க வேண்டுமென்று 1 நாளாகாமம் 29 : 9 லும், நமக்கு வருவது அனைத்தும் தேவனிடமிருந்து வருகிறதென்ற அறிவுடனும், நன்றியுடனும் கொடுக்க வேண்டுமென்று 1 நாளாகாமம் 29 : 14 லும் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். சகோதரனிடம் ஏதாவது கசப்பு இருக்குமானால் பலிபீடத்திற்கு முன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் சகோதரனோடு ஒப்புரவான பின் காணிக்கையைச் செலுத்த வேண்டுமென்று மத்தேயு 5 : 23, 24ல் பார்க்கிறோம். லூக்கா 21 : 1 – 4ல் இயேசு ஏழை விதவை போட்ட இரண்டு காசு காணிக்கையை அங்கீகரித்ததைப் பார்க்கிறோம். மல்கியா 1 : 13, 14 ல் எவ்விதமான காணிக்கையைக் கொண்டு வரக்கூடாதென்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். இங்கே இரண்டு பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம். இருவரும் ஒரே குடும்பத்தின் சூழ்நிலையில் வாழ்ந்தவர்கள்தான். காயீனும் ஆபேலும் சேர்ந்துதான் காணிக்கையைக் கொண்டு வந்து தேவனைத் தொழுது கொள்ளச் சென்றனர். 

காயீன் தனக்குப் பிரியானதைத் தேவனுக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தான். ஆபேல் தேவனுக்குப் பிரியமானதைக் காணிக்கையாகக் கொண்டு வந்தான். இரண்டு பேரின் உள்ளத்தையும் தேவன் பார்க்கிறார். தேவன் காணிக்கை கொண்டு வருவதற்கு முன்னே காயீனை அங்கீகரிக்கவில்லையென்று 1 யோவான் 3 : 12 ல் பார்க்கிறோம். யோவான் காயீன் பொல்லாங்கனால் உண்டானவன் என்று கூறியிருப்பதைக் காணலாம். அதேபோல் நம்மைத் தேவன் அங்கீகரித்தபின்தான் நமது ஊழியத்தை அங்கீகரிக்க வேண்டும். காயீனைத் தேவன் அங்கீகரிக்காததால் அவனுடைய காணிக்கையையும் அங்கீகரிக்கவில்லை. அவன் தன்னுடைய நிலத்தின் கனிகளை விசுவாசத்தினால் கொண்டு வரவில்லை. அவைகள் முதற் தராமானவைகள் அல்ல. தேவன் ஒவ்வொன்றையும் கவனிக்கிறார். காயீனுக்கு ஆபேலுக்குமுள்ள நடத்தையிலுள்ள வித்தியாசம் இங்கு முக்கியமல்ல. அவர்கள் கொண்டு வந்த காணிக்கையில்தான் வித்தியாசமிருந்தது. மனித சுபாவம் தீமையானது என்பதை மறுக்கிறதாக அவனுடைய காணிக்கையிருந்தது. காயீனின் நீதி சுயநீதியாக இருந்தது. ஏனெனில் துன்மார்க்கனான காயீனின் பலி அருவருப்பானது .என்று நீதிமொழிகளில் கூறப்பட்டுள்ளது. 

ஆபேல் அவனுடைய மந்தையிலுள்ள ஒரு மிருகத்தைக் கொன்று, அதன் இரத்தத்துடன் காணிக்கையை செலுத்தினான் என்று பார்க்கிறோம். ஆபேலின் காணிக்கை விசுவாசத்துடன் கொண்டு வரப்பட்ட காணிக்கை. இயேசுவின் பலியை எதிர்பார்த்துக் கொண்டுவரப்பட்ட காணிக்கையாக அது இருந்தது. பழையஏற்பாட்டுக் காலத்தில் ஆபேல் தேவனுக்குப் பிரியமான பலியைச் செலுத்தியது போல புதியஏற்பாட்டுக் காலத்தில் நமக்குப் பிரியமான பலியாக சுகந்த வாசனையாக இயேசு தன்னையே சிலுவையில் ஒப்புக் கொடுத்தார். அவனுடைய இருதயத்தைத் தேவன் பார்த்தார். ஆனால் ஆதாம் ஏவாளுக்குக் கர்த்தர் பலிகளைப் பற்றி எந்த அளவுக்கு சொல்லிக் கொடுத்தார் என்பது வேதத்தில் இல்லை. தகப்பனுக்கு ஆவிக்குரிய சிந்தை இல்லாவிட்டாலும் மகனுக்கு ஆவிக்குரிய சிந்தை இருந்தது. ஏனென்றால் வேதத்தில் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. எனவே காயீன் இரத்தப் பலிகளைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை என்று கூறிவிட முடியாது. நாமோ இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டுமே அவரை நெருங்க முடியும். எபிரேயர் 11 : 4 ல் ஆபேலுனுடைய காணிக்கையைக் குறித்து சாட்சி கொடுத்தார் என்று பார்க்கிறோம். ஆகவே அவன் கொண்டுவந்த காணிக்கையினால் நீதிமான் என்று பெயர் பெற்றான். ஆபேல் தான் பாவம் செய்திருப்பேன், எனவே என்னுடைய பாவத்திற்கு பரிகாரமாக இந்த ஆட்டைப் பலியிடுகிறேன் என்று அவன் தனது ஆவியிலே கேட்டிருக்கலாம். அதைத் தேவன் கேட்டிருக்கலாம். தேவன் எந்த மனிதனையும் நீதிமான் என்று சாட்சி கொடுப்பதற்கு அது ஒன்றே அடிப்படை. அதனால்தான் கர்த்தர் ஆபேலையும் அங்கீகரித்து, அவனுடைய காணிக்கையையும் வானத்திலிருந்து அக்கினி இறக்கி அங்கீகரித்தார். ஆபிரகாமின் விசுவாசம் ஈசாக்கைப் பலியாகச் செலுத்தினதினால் பூரணப்பட்டது என்று பார்க்கிறோம் (யாக்கோபு 2 : 21, 22). ஆனால் கர்த்தர் காயீனையும் அவனுடைய காணிக்கையையும் அங்கீகரிக்கவில்லை. 

இதேபோல்தான் லூக்கா 18 : 10 – 14 ல் இரண்டு பேர் ஜெபம் பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள். அதில் ஒருவன் ஆயக்காரன், மற்றொருவன் பரிச்சேயன். இருவரும் ஒரே ஆலயத்துக்குத்தான் சென்றார்கள். இருவரும் தேவனை நோக்கித்தான் ஜெபித்தனர். அவர்கள் ஜெபித்தவிதம்தான் வேறு. அதனால் ஒருவனே நீதிமானாக்கப்பட்டான். நாம் கர்த்தருக்கு கொடுக்க வேண்டிய பெரிதான பலி என்னவென்றால் நம்முடைய சரீரத்தை இயேசுவுக்கென்று ஒப்புக்கொடுப்பதுதான். அதைவிட மிகப்பெரிய பலி நம்முடைய சுயசித்தத்தை பலியாகக் கொடுப்பதுதான். கர்த்தாவே என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்பதுதான். சுயசித்தத்தை தேவனுடைய கரத்தில் கொடுக்கும்போது அதை அவர் தேவ சித்தமாக மாற்றித் தருகிறார். 

காயீனின் கோபமும், தேவனின் வார்த்தைகளும்: 

ஆதியாகமம் 4 : 5 – 7 “அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது. அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.”

காயீனின் காணிக்கையை அங்கீகரிக்காதது தேவன். எனவே அவன் தேவன் மேல்தான் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவன் ஆபேலின் மேல் எரிச்சல் பட்டான். இதைப்பார்த்த காயீனுக்குப் பொறாமை வந்தது. அவனுடைய முகநாடி வேறுபட்டது. இதேபோல் சவுலுக்குள் பொல்லாத ஆவி பிரவேசித்த போது தாவீதை ஈட்டியால் குத்த முற்பட்டான். பார்வோனுக்குள் இந்த ஆவி பிரவேசித்த போது எரிச்சலுடன் இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பிறந்த ஆண் பிள்ளைகளை எல்லாம் நதியிலே போட உத்தரவிட்டான் (யாத்திராகமம் 1 : 22). அதே போல் இயேசுவைக் காணவந்த சாஸ்திரிகள் வேறுவழியாய்த் திரும்பிப் போனார்கள் என்பதையறிந்து ஏரோது மிகவும் எரிச்சலுடன் இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் பிள்ளைகளையெல்லாம் கொலை செய்தான் (மத்தேயு 2 : 16). ஏதேன் தோட்டத்திற்கு வெளியே செய்யப்பட முதல் பாவம் இது. உங்களைப் பார்க்கிலும் அபிஷேகம் பண்ணப்பட்ட இளைய சகோதரர் இருந்தால் பொறாமைப்படக் கூடாது. தேவனோ அல்லது கிறிஸ்தவர்களோ அவனை ஏற்றுக்கொண்டிருக்கலாம். காயீன் மத சம்பந்தமானவனுக்குத் தலைவனாயிருக்கிறான். ஆபேல் ஆவிக்குரிய மக்களுக்கு தலைவனாயிருக்கிறான். 

காயீன் ஆபேல் மேல் பொறாமைப் பட்டதைப் போல, சவுல் ராஜாவுக்கு தாவீதின்மேல் பொறாமை. பரிசேயர்கள் இயேசுவின் மேல் பொறாமை. பவுலின் மேல் மதத்தலைவர்களுக்கு பொறாமை. வேதத்தில் முதலில் எரிச்சல், கோபம், போன்ற குணங்கள் காயீனிடமிருந்து வந்தது. பரிசேயர்களுக்கும், காயீனுக்கும் தவறான உபதேசம் இருக்கவில்லை. அவர்களின் வாழ்க்கை தான் தவறாக இருந்தது. தேவனுக்கு மனப்பூர்வமாகக் காணிக்கை கொண்டு வந்தால் அதைத் தேவன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறமாட்டார். நீதிமொழிகள் 15 : 8 ல் “துன்மார்க்கனுடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; ……” ‘என்று வேதம் கூறுகிறது. சங்கீதக்காரன் 

சங்கீதம் 40 : 6 – 8 ல் “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை. அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது; என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன். “

என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். 

காயீனுடைய இருதயம் தேவனுக்கு முன்பாக செம்மையானதாக இல்லை ஆபேலைப் போல இரத்தப்பலியைக் கொண்டு வந்திருந்தாலும், கர்த்தர் அவனை அங்கீகரித்திருக்க மாட்டார். காயீனுடைய உள்ளான திறமையை வெளிப்படுத்தவே தேவன் இவ்வாறு செய்தார். காயீனின் காணிக்கையில் அக்கினி வரவில்லை. காயீன் தன் காணிக்கை அங்கீகரிக்கப்படாததன் காரணத்தை ஆராயவில்லை. கர்த்தர் பேரில் எரிச்சல் அடைந்தான் அங்கீகரிக்கப்பட்டவன் மேல் பொறாமை கொண்டான். கர்த்தர் அவனிடம் உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? ஏன் உன் முகம் வேறுபடுகிறது? என்று அறிவுரை அளித்தும் அவன் அதை அசட்டை செய்தான். நாமும் நமக்கு அறிவுரை கூறுபவர்களையும், அறிவுரைகளையும் மதிக்கிறோமா, நம் தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சிக்கிறோமா என்று யோசிக்க வேண்டும்.

காயீனுடைய காணிக்கை சரியாக இருந்தால் அது மேன்மையைக் கொடுத்திருக்கும். அதனால்தான் பாவமானது காயினின் வாசற்படியில் படுத்திருந்தது. காயீன் மீண்டும் தேவனிடம் சென்று நல்ல விலங்கு ஒன்றைப் பலி செலுத்தி, தேவனால் ஏற்கப்படுவதற்கு முயற்சி செய்யவில்லை. காயீனின் பாவம் அவனைப் பின்தொடர்ந்து வந்தது. நீ நன்மை செய்யாவிட்டாலும் நீ வயதில் மூத்தவன் என்ற மரியாதையை ஆபேல் உனக்குத் தருவார் என்ற பொருளில் அவன் ஆசை உன்னைப் பற்றிக் கொண்டிருக்கும் என்று கர்த்தர் கூறினார். நீ மூத்தவன் என்ற நிலையில் அவன் உனக்கு கீழ்படிவான் என்ற பொருள்படக் கூறினார். நீ அவனை ஆண்டு கொள்வாய் என்றெல்லாம் கர்த்தர் காயீனுடைய எரிச்சலை நீக்குவதற்கு முயற்சித்தும் காயீன் ஏற்றுக்கொள்ளவில்லை. பாவத்தை மேற்கொண்டான். பாவம் வாழும் வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் போராட்டமாகத்தான் இருக்கும். விசுவாசத்தோடு ஆவியானவரின் உதவியால் மட்டுமே நாம் அதை மேற்கொள்ள முடியும். காயீன் அப்பொழுதும் மனம் திரும்பவில்லை. அவனுடைய உள்ளத்திலும் மாற்றம் வரவில்லை. அவனுடைய முகநாடியும் மாறவில்லை. வேதனை அடைந்த காயீனிடம் ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கி காணிக்கையாக்க தேவன் அறிவுரை கூறாமல் “நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ” என்றுதான் கேட்கிறார். மூத்தவன் மேன்மையானவனாகக் கருதப்படுவான். காயீன் அதை இழந்து விட்டதாக நினைக்கிறான். அதனால் தேவன் நீ நன்மை செய்தால் அதை இழந்துபோக வாய்ப்பில்லை என்கிறார். பலியிடுபவர் நன்மை செய்பவராக இருக்க வேண்டும் என்று தேவன் தெளிவு படுத்துகிறார். தீமையில் வாழ்வோரின் பலி தனக்கு உகந்ததல்ல என்கிறார். அதுவரை தீமையில் வாழ்ந்த காயீன் தேவனின் அறிவுரையின் படியாவது நன்மை செய்து தேவப்பிரியம் தேட முயலாது இதயத்தைக் கடினப்படுத்தினான். காயீனிடம் கர்த்தர் முகாமுகமாய்ப் பேசி ஆபேலுக்காக வழக்காடியதைப் பார்க்கிறோம். கொலைகாரனானான். இருவரில் ஆபேலிடம் மட்டுமே விசுவாசத்தைக் காணமுடிந்தது. விசுவாசத்தாலன்றி தேவனைப் பிரியப்படுத்த இயலாது. விசுவாசத்தோடு நற்கிரியைகளையும் தேவன் விரும்புகிறார். ஆபேல் விசுவாசத்தோடு நற்கிரியைகளும் செய்து வாழ்ந்தார் என்பது நிரூபணமாகிறது. ஆபேலைப்பற்றி நன்மையை மட்டுமே கூற முடிகிறது. இரத்தமில்லாத பலிகளும் தேவனுக்கு ஏற்புடையவைதான். சான்றுக்கு லேவியராகமம் இரண்டாம் அதிகாரத்தில் .போஜனபலியைப் பற்றிப் பார்க்கிறோம். ஆனால் அவிசுவாசத்திலும் தீமையிலும் உழன்றவன் என்ற நிலையில்தான் காயீனின் காணிக்கையை தேவன் ஏற்கவில்லை. 

காயீனின் கொலையும், தேவனின் கேள்வியும்:

ஆதியாகமம் 4 : 8 – 10 “காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல் வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான். கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான். அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.”

ஆபேலை காயீன் ஏமாற்றி வயல்வெளிக்குக் கூப்பிடுகிறான். ஆபேலுக்கு அவன் கூப்பிட்டபோது பகுத்தறிவு இல்லாததால், கூப்பிட்டவுடன் போனான். காயீன் ஆபேலோடு பேசினான். சர்ப்பம் ஏவாளோடு பேசும் போது சர்ப்பம் ஏன் பேசுகிறது என்று புரிந்து கொள்ளும் மனப்பான்மை இல்லாததைப் போல, ஆபேலுக்கும் நேற்றிலிருந்து காயீனின் முகநாடி சரியில்லையே, கர்த்தர் அவனுடைய காணிக்கையை அங்கீகரிக்காததால் கோபத்தில் இருக்கிறானே, என்று எண்ணாமல் அவனோடு அவனுடைய வயல்வெளிக்குப் போனான். காயீனுக்கு தன் சொந்த சகோதரனையே கொலை செய்யும் அளவுக்கு கோபமுற்றிருந்தான். அவனது கோபமும், ஆபேல் மேலிருந்த பொறாமையும் அவனைக் கொலை செய்ய வழிநடத்தியது. அந்த இடத்தில் காயீன் ஆபேலைக் கொலை செய்தான். 

இரத்த சாட்சியாக மரித்த முதல் மனிதன் ஆபேல். விசுவாச வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் மனிதன் ஆபேல். இதேபோல்தான் யூதர்களும் இயேசுவின்மேல் பொறாமை கொண்டு பிசாசின் சத்தத்துக்குச் செவி கொடுத்து இயேசுவை சிலுவையில் அறைந்தனர். நிலத்துக்குள் கொலை செய்தால் சரீரத்தை எளிதில் மறைத்து விடலாமென்று நினைத்து ஆபேலின் சரீரத்தை அவனுடைய நிலத்தில் புதைத்து மறைத்தான். யோவான் அப்போஸ்தலன் காயீன் எதனால் ஆபேலைக் கொலை பண்ணினான் என்பதை, 

1யோவான் 3 : 12 “பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.”

என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். சரீரத்தை மறைத்து வைத்த அவனால் இரத்தத்தை மறைத்து வைக்க முடியவில்லை. ஆபேலின் இரத்தம் பூமியில் வழிந்தோடியது. இயேசுவின் சரீரத்தை கல்லறையில் கொண்டு வைத்து மூன்று நாட்கள் மட்டுமே பிசாசினால் அதை மறைத்து வைக்க முடிந்தது. இயேசுவின் இரத்தம் கல்வாரி சிலுவையில் பூமியில் வழிந்தோடியது. அதைப் பிசாசினால் தடை செய்ய முடியவில்லை. ஆபேலின் இரத்தம் பூமியிலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிட்டது. முதல் இரத்தசாட்சியாக மரித்தவன். இயேசுவின் இரத்தமும் பூமியிலிருந்து பிதாவை நோக்கிக் கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆபேலின் இரத்தம் தன் சகோதரனை நியாயம் விசாரிக்கக் கூப்பிடுகிறது. ஆனால் இயேசுவின் இரத்தம் பூமியில் தன்னைக் கொலை செய்தவர்களை நியாயம் விசாரிக்கக் கூப்பிடவில்லை. மாறாகத் தன்னைக் குத்தினவர்களை மன்னிக்கும்படியாகக் கூப்பிட்டது. அது மீட்பைக் குறித்தும், இரட்சிப்பைக் குறித்தும் பேசுகிறது. இயேசுவின் இரத்தம் தவறு செய்தவனை, கொலை செய்தவனை, வேசித்தனம் பண்ணினவனை, தவறான பாதையில் நடந்தவனை, தவறான கிரியைகள் செய்தவனை, சாபங்களும், பிசாசுக்கு அடிமையாயிருக்கிறவனை, வியாதியின் பிடியில் அகப்பட்டவனை விடுவிக்கும்படியாக என்றும் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இனியும் கூப்பிடும். 

இயேசுவின் இரத்தம் ஆபேலின் இரத்தத்தை விட நன்மையானவைகளைப் பேசுகிறது என்று எபிரேயர் 12 : 24 ல் உள்ளது. கர்த்தர் ஆதாமை நோக்கி “நீ எங்கேயிருக்கிறாய்” என்று கேட்டதைப் போல காயீனிடம் ஆபேல் எங்கே என்று கேட்டதற்கு கர்த்தரிடம் துணிந்து ஆணவமாக தனக்குத் தெரியாது என்று பொய் கூறினதைப் பார்க்கிறோம். அதுவுமல்லாமல் தன் சகோதரனுக்குத் தான் காவலாளியல்ல என்கிறான். காயீனுடன் வாழ்பவர்கள் அவனுக்கு எலும்பின் எலும்பும் மாம்சத்தின் மாம்சமானவர்கள். அவர்களில் ஒருவருக்கொருவர் காவலாளிகளாக இருக்க வேண்டுமே தவிர கொலையாளிகளாகக் கூடாது. தேவனுக்கு வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை. அறியப்படாத இரகசியமும் இல்லை என்று மத்தேயு 10 : 26 ல் பார்க்கிறோம். 

 காயீன் பெற்ற சாபமும் தண்டனையும்:

ஆதியாகமம் 4 : 11 – 15 “இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனா யிருப்பாய் என்றார். அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது. இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி, காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.”

கர்த்தர் முதல் சாபமாக காயீனை இந்தப் பூமியில் சபிக்கப்பட்டிருப்பாய் என்றார். அதாவது ஆதாம் செய்த பாவத்தினால் பூமி சபிக்கப்பட்டது. சபிக்கப்பட்ட இந்த பூமியில் காயீன் சபிக்கப்பட்டவனாயிருப்பான் என்கிறார். இரண்டாவது சாபமாக சபிக்கப்பட்ட இந்த பூமியில் காயீன் பயிரிடும்போது அது பலனைத் தராது என்கிறார். மூன்றாவதாக நிலத்தைப் பயிரிடும்போது அது பலனைக் கொடுக்காததால் இந்த பூமியில் நிலையற்று அலைவாயென்றார். காயீன் காய்கறிகளைக் கொண்டு வந்த போதும், கோபமும், எரிச்சலும் அடைந்த போதும் கர்த்தர் அவனை சபிக்கவில்லை. தன்னுடைய சகோதரனைக் கொலை செய்து அவனது இரத்தம் பூமியில் சிந்தப்பட்ட போது கர்த்தர் காயீனுக்கு சாபம் கொடுத்தார். பயப்படாத காயீன் கர்த்தர் கொடுத்த சாபத்தைக் கேட்டவுடன் பயம் அவனை ஆட்கொண்டது. 

காயீன் கர்த்தரிடம் தனக்குக் கொடுத்த தண்டனையைத் தன்னால் சகிக்க முடியாது என்றான். இன்னும் இந்த சாபம் பூமியிலிருக்கிறது. காயீனுக்கு கர்த்தர் கூறியது சகிக்க முடியாத தண்டனையாக இருக்குமானால் தேவனிடம் இரக்கத்துக்காக மன்றாடி மன்னிப்பு கேட்டிருக்கலாம். அவன் தான்செய்த தவறை உணர்ந்து மனந்திரும்பியிருந்தால் போதுமானது. தான் தேவனுடைய முகத்தைவிட்டு மறைக்கப்பட வேண்டுமென்று காயீன் விரும்புகிறான். தன்னைக் கண்டுபிடிக்கிறவன் தன்னைக் கொன்றுபோடுவானே என்று தன்னுடைய பாதுகாப்புக்கு மட்டுமே வேண்டினான். கர்த்தர் அவனுக்கு ஒரு அடையாளத்தைப் போட்டார். அவனை யாரும் கொலை செய்துவிடக் கூடாது என்று அவனைப் பாதுகாப்பதற்காகவும், அவனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்றும் அடையாளத்தைப் போட்டார். 

காயீன் இன்னமும் கர்த்தருக்கு ஏழு மடங்கு விலையேறப்பெற்றவன் என்பதை அந்த வாக்கின் மூலம் கர்த்தர் தெரிவித்தார். ஆனால் காயீன் கர்த்தரின் அன்பின் ஆழத்தைப் புரியவில்லை. கர்த்தர் நோவாவிடம் ஜலப்பிரளயத்தினால் பூமியை அழிக்க மாட்டேன் என்று வாக்குப் பண்ணி அதற்கு அடையாளமாக வானவில்லைத் தோன்றப் பண்ணினார் (ஆதியாகாமம் 9 : 12 – 17). காயீன் தன்னைத்தாழ்த்தித் தூக்கப்பட்டு மனம் திரும்பி தேவனிடம் வரவில்லை. அவன் தன்னைத் தேவனிடனிருந்து பிரித்துக் கொண்டு தேவனுடைய உதவியில்லாமல் தன்னுடைய வாழ்க்கையை வாழ முயற்சித்தான். இவ்வளவு செய்தும் தேவன் காயீனை ஏன் தண்டிக்கவில்லையென்றால் தேவன் காயீனை அதிகமாக நேசித்தார். ஒரு கொலைகாரனுக்குக் கூட கர்த்தர் அடைக்கலமும், பாதுகாப்பும் தந்ததை இதிலிருந்து அறிகிறோம். 

முதன் முதலானது:

முதல் கர்ப்பம் தரித்தவள் ஏவாள் – ஆதியாகமம் 4 : 1

முதல் பிரசவம் ஆனது ஏவாளுக்கு – ஆதியாகமம் 4 : 1 

முதல் மேய்ப்பன் ஆபேல் – ஆதியாகமம் 4 : 2

முதல் விவசாயி காயீன் – ஆதியாகமம் 4 : 2

 முதல் காணிக்கை ஆபேலும், காயீனும் படைத்தது – ஆதியாகமம் 4 : 3, 4 

முதல் அங்கீகரிப்பு ஆபேலின் காணிக்கை – ஆதியாகமம் 4 : 5

முதல் புறக்கணிப்பு காயீனின் காணிக்கை – ஆதியாகமம் 4 : 5

முதல் கொலைகாரன் காயீன் – ஆதியாகமம் 4 : 8

முதல் இரத்த சாட்சி ஆபேல் – ஆதியாகமம் 4 : 8

முதல் அடையாளம் காயீனுக்குக் கர்த்தர் போட்டார் – ஆதியாகமம் 4 : 15

கருத்து:

ஆதாம் ஏவாளுக்குப் பிறந்த காயீனின், ஆபேலின் துவக்கம் நன்றாக இருந்தது. முடிவு சோகமாக ஆயிற்று. காயீன் திரும்பவும் சாபத்தைப் பெற்றான். ஆபேல் கொலை செய்யப்பட்டான். காயீன் ஆதாமின் வம்சத்திலிருந்தே எடுக்கப்பட்டான். காயீன் ஆதாமின் சந்ததிக்கு நிழலாகவும், ஆபேல் இயேசுவின் சந்ததிக்கு நிழலாகவும் இருக்கிறார். இருவரையும் தன் சொந்த சகோதரர்களே கொலை செய்தனர். தேவன் நமது கிரியைகளைப் பார்த்து காணிக்கையை அங்கீகரிக்கிறவரல்ல. மூத்தவன், இளையவன் என்று அங்கீகரிக்கிறவருமல்ல. பிறப்பின் அடிப்படையிலும் தேவன் ஆசீர்வதிக்க மாட்டார். ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்ததினாலும் தேவன் ஆசீர்வதிக்கவில்லை. காயீனின் இருதயம் சரியாக இல்லாததால் தேவன் அவன் காணிக்கையை அங்கீகரிக்கவில்லை. ஆபேல் தேவனிடம் நீதிமான் என்று சாட்சி பெற்றான். நாமும் தேவனுக்குப் பிரியமான காணிக்கைகளைச் செலுத்தி தேவனிடம் கிட்டிசேரப் பிரியப்படுவோம். நாம் எங்கு வந்து சேர்ந்திருக்கிறோமென்று எபிரேயர் 12 : 22 – 24 ல் கூறப்பட்டுள்ளது (5விதமான ஆசிகள்). நாமும், நம்முடைய குடும்பமும் இயேசுவின் இரத்தத்தில் கிட்டிசேர வேண்டும். நாம் இயேசுவின் இரத்தத்தினால் சூழப்பட்டவர்களாய், அந்த இரத்தத்தினால் மறைக்கப் பட்டவர்களாய், சுத்திகரிக்கப்பட்டவர்களாய், வேறு பிரிக்கப்பட்டவர்களாய், புதிய மனிதனாக்கப்பட்டு, புதிய கிருபைகளும், புதிய வல்லமைகளும், புதிய வரங்களும், புதிய அபிஷேகமும் பெற்று வாழ பிரயாசப்படுவோம். இயேசுவின் இரத்தத்தை நம் வீட்டு நிலைக்கால்களில் பூசுவோம். நம்மிடமிருந்து இயேசுவின் இரத்தம் வழிந்தோடி நாம் செல்லும் இடங்களிலும், நாம் செய்யும் செயல்களிலும் ஆசீவாதத்தைக் அளிக்கட்டும். சந்துருவின் சகல கோட்டைகளையும் தகர்த்தெறிய இயேசுவின் இரத்தம் நமக்குள் கிரியை செய்யட்டும். ஆமென்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago