ரூத் புத்தகம் பற்றிய கண்ணோட்டம்:
ரூத் புத்தகத்தில் இயேசுவின் வம்சவரலாற்றைப் பார்க்கலாம். இந்த புத்தகம் இல்லாவிட்டால் தாவீது யூதாவின் வம்சத்தில் வந்தார் என்று அறிந்திருக்க முடியாது. ஆதியாகமம் முதல் தொடர்ந்து பெத்லகேம் பின்னர் சிலுவை மற்றும் கிரீடம் வரை செல்லும் காரியங்களுக்கு ரூத் புத்தகம் முக்கியமானதாக இருக்கிறது. மீட்பைக் குறித்த சத்தியத்தை இதில் காணலாம். இதில் மீட்டெடுக்கும் நபராக போவாஸ் காணப்படுகிறார். இதில் ஒருவரையொருவர் நேசிக்கும் ஒரு சாதாரணக் குடும்பத்தின் சரித்திரத்தைக் காணலாம். ரூத்தின் சரித்திரம் நடந்த காலம் நியாயாதிபதிகளின் காலம்.
வேதத்தில் ஒரு பெண்ணின் பெயரால் அழைக்கப்பட்டிருக்கும் 2 நூல்களில் இது முதலாவது நூல். இந்தப் புத்தகத்தை எழுதியவர் சாமுவேல் என்று அனேகர் கூறுகின்றனர். இந்நூலில் முதல் 18 வசனங்கள் மோவாப் நாட்டைப் பற்றியது. மீதிப் பகுதிகள் யூதாவின் பெத்லகேமைப் பற்றியது. இந்நூலில் வரும் செய்திகள் புனைக்கதைகள் அல்ல, வாழ்க்கையின் நிகழ்வுகள். எபிரேய வேதத்தில் ரூத் நூல் 5வது இடத்திலும், நமது வேதத்தில் 8வது இடத்திலுமுள்ளது. இதில் ரூத் திருச்சபைக்கு நிழலுருவமானவர். புற ஜாதியிலிருந்த ஒரு பெண் இஸ்ரவேல் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்ததை விளக்கும் அதிசய நூல்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
எலிமெலேக்கின் குடும்பம்: (ரூத் 1 : 2, 4 : 3)
பெத்லகேம் ஊரில் எலிமெலேக் என்பவன் வாழ்ந்து வந்தான். இவர்களை எப்பிராத்தியர் என்று அழைப்பர். இவரது மனைவியின் பெயர் நகோமி. நகோமி என்றால் பிரியமானவள் என்று பொருள். எலிமெலேக் என்பதற்கு “என் தேவன் ராஜா” என்று பொருள். இவரது மூத்த மகனின் பெயர் மக்லோன். அதற்கு “நோயுற்றவர்” என்று பொருள். இரண்டாவது மகனின் பெயர் கிலியோன். அதற்கு “சிறுமையானவன் அல்லது பலவீனமானவன்” என்று பொருள். எலிமெலேக்குக்குக் காணிகள் இருந்ததால் செல்வந்தனாகத் தான் இருந்திருப்பான்.
எலிமெலேக் எடுத்த தீர்மானம்: (ரூத் 1 : 1)
இஸ்ரவேலில் நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்து வரும் காலத்தில், வேதத்தில் கூறப்பட்டுள்ள 20 பஞ்சங்களில் ஒரு பஞ்சம் இவர்களது காலத்தில் ஏற்பட்டது. அந்த நாட்கள் இஸ்ரவேலர்களுக்கு இருண்ட நாட்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பஞ்சம் எருசலேமுக்கும் வந்தது. இஸ்ரவேலர் தனது தேவனை ராஜாவாக இராதபடிக்குத் தள்ளி விட்ட காலம். அவரவர் மனம் போன போக்கில் வாழ்ந்த காலம். பெத்லகேமில் உள்ளவர்கள் அடிமைத்தனத்திலும், பஞ்சத்திலும், கஷ்டத்திலும் வாழ்ந்தனர்.
எலிமெலேக்கின் குடும்பம் இதனால் துதி நிறைந்த அப்பத்தின் வீடான பெத்லகேமை விட்டு அந்நிய நாட்டிற்குப் போகத் தீர்மானித்தனர். தேவசெழிப்பை விட்டு உலகப் பாதுகாப்பை நோக்கி ஓடினார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் கர்த்தரை விட்டுத் தூரம் போகும் போது அவர்களுக்கு அடி கிடைக்கிறது. அவர்கள் மனம் திரும்பி இயேசுவண்டை வரும்போது, தேவன் மன்னித்து ஆசி அளிப்பார். கொஞ்ச நாள் தங்கச் சென்றவர்கள் நிரந்தரமாகக் கூடாரமடித்தனர். மோசே, தாவீது, யோசேப்பு கூட அவ்வாறு போனவர்கள் தான். ஆனால் அவர்கள் அனைவரும் பிரச்சனைகளின் மத்தியில் சென்றனர். எலிமெலேக்கு நன்றாக இருந்த போது வேறு இடத்திற்குச் சென்றான்.
மோவாப் தேசம், ரூத், ஓர்பாள்:
லோத் போதையில் இருக்கும் போது அவனுடைய பிள்ளைகள் அவரோடு சேர்ந்ததால் வந்த வம்சம் மோவாபின் வம்சம். மோவாப் தேசம் ஒரு சபிக்கப்பட்ட தேசம் என்று உபா 23:3 ல் பார்க்கிறோம். பத்தாவது தலைமுறை வரை அவர்கள் சபைக்குள் வரக்கூடாது என்று சாபத்தைப் பெற்ற தேசம். இது எருசலேமின் அருகாமையில் உள்ளது. இஸ்ரவேலர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ததால் கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபிய ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாகப் பலக்கப் பண்ணினார். இஸ்ரவேலர் எக்லோன் ராஜாவை 18 வருடம் சேவித்தனர். (நியா 3 :12-15)
இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் பென்யமீன் கோத்திரத்தில் உள்ள ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பப் பண்ணினார். அவன் எக்லோனை கத்தியால் குத்திக் கொன்றான். அதன்பின் அங்கு மீதமிருந்தவர்கள் வயதானவர்களும், பெண்களும், சிறுவர்களும் தான். இஸ்ரவேலர் 80 வருடம் அமைதியாக இருந்தனர். எக்லோனின் தகப்பன் பாலாக்ராஜா. இந்த பாலாக்ராஜா பிலேயாமை இஸ்ரவேலை சபிப்பதற்கு அழைத்தது. மேலும் பிலேயாமின் சொற்படி தன்னுடைய ஜனங்களை இஸ்ரவேலரோடு விபச்சாரம் பண்ண அனுப்பியதும் இவர்தான். ரூத்தும் ஓர்பாளும் எக்லோன்ராஜாவின் குமாரத்திகள். எலிமெலேக்கின் குடும்பம் வசதியாக இருந்ததால் ராஜ குடும்பத்தில் உள்ள பெண்களை நகோமியின் மகன்களுக்குக் கொடுத்தனர். ரூத் என்றால் அழகு என்றும் ஓர்பாள் என்றால் மான் என்றும் பொருள்.
மோவாப்தேசத்தில் எலிமெலேக்கின் குடும்பம்: (ரூத் 1 : 3 – 5)
தேவன் மோவாப்தேசத்தில் இருக்கும் போதும் எலிமெலேக்கின் குடும்பத்தை ஆசீர்வதித்துத் தான் வைத்திருந்தார். எலிமெலேக்கு இறந்து விட்டதால் நகோமி, மக்லோன், கிலியோன் மட்டும் அங்கிருந்தனர். அதன்பின் நகோமி தன் இரண்டு மகன்களுக்கும் மோவாபிய ஜாதியில் எக்லோன் ராஜாவின் குமாரத்திகளான ஒர்பாளையும், ரூத்தையும் திருமணம் செய்து வைத்தாள். மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி இது தவறான செயல். மக்லோன் இளைய குமாரத்தியான ரூத்தையும், கிலியோன் மூத்த குமாரத்தியான ஓர்பாளையும் திருமணம் செய்திருந்தனர். பத்து வருடங்கள் அங்கு வாழ்ந்தனர். ஆனால் இருவருக்கும் குழந்தைகள் இல்லை. மக்லோனும், கிலியோனும் திடீரென்று இறந்து விட்டதால், மூன்று பெண்களும் விதவைகளாகத் தனித்து விடப்பட்டனர்.
நகோமி எடுத்த தீர்மானம்: (ரூத் 1 : 6 – 9)
கர்த்தர்மேல் நம்பிக்கையில்லாமல் தூரம் போனவர்க ளுக்குக் கஷ்டங்களும், பாடுகளும் வரும். பெத்லகேமில் கர்த்தர் தம் ஜனங்களுக்கு ஆகாரம் அருளுகிறார் என்று மோவாப் தேசத்தில் இருக்கும் போது நகோமி கேள்விப்பட்டாள். இதைக் கேட்ட நகோமி மோவாப் தேசத்தை விட்டு, யூதா தேசத்திற்குத் திரும்பிப் போகத் தீர்மானித்தாள். நகோமி தன் இரண்டு மருமகளையும் பார்த்து நீங்கள் இருவரும் உங்கள் தாய் வீட்டுக்குப் போங்கள். கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி முத்தமிட்டாள்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
ரூத், ஓர்பாளின் தீர்மானங்கள்: (ரூத் 1 : 9 – 17)
நகோமியின் சொற்களைக் கேட்ட இருவரும் சத்தமிட்டு அழுதனர். உம்மோடு கூட வருவோம் என்றனர். நகோமி அதைக்கேட்டு ஏதேதோ சொல்லி புலம்புவதைப் பார்க்கிறோம். “இன்று நான் ஒரு புருஷனுக்கு வாழ்க்கைப் பட்டாலும், அந்தப் பிள்ளைகள் பெரியவர்கள் ஆகும்வரை நீங்கள் பொறுத்திருப்பீர்களா என்றும், கர்த்தருடைய கை எனக்கு விரோதமாக இருக்கிறது” என்றும் கூறினவுடன், இருவரும் திரும்பவும் சத்தமிட்டு அழுதனர். ஓர்பாள் திரும்பிச் செல்வதாகத் தீர்மானம் எடுத்துச் சென்றாள். அவள் என்றைக்குமாக ஆசீர்வாதத்தின் வாசலை விட்டு, இருளின் தேசத்துக்குத் திரும்பிப் போய்விட்டாள். இயேசுவின் பக்கத்திலிருந்தும் பரதீசை இழந்து விட்ட கள்ளனைப் போல, ஓர்பாளும் அந்த பொக்கிஷ வாழ்வை அசட்டை பண்ணினாள். மாம்சம் அவளைக் கவர்ந்த போது அந்தக் கவர்ச்சியிலிருந்து விடுபட அவளால் முடியவில்லை.
ரூத் சரியான தீர்மானம் எடுத்தாள். அவள் நகோமியிடம் உம்மை விட்டுத் திரும்பிப் போவதைக் குறித்துப் பேச வேண்டாம் என்றும், நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன் என்றும், நீர் தங்கும் இடத்தில் நானும் தங்குவேன் என்றும், உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம் என்றும், உம்முடைய தேவன் என்னுடைய தேவன் என்றும், நீர் மரணமடையும் இடத்திலே நானும் மரணமடைவேன் என்றும், மரணத்தைத் தவிர உம்மையும் என்னையும் வேறு எதுவும் பிரித்தால் கர்த்தர் என்னைத் தண்டிக்கட்டும் என்றாள்.
ஏழு வகையானத் தீர்மானங்களை ரூத் தன்னுடைய மாமியிடம் கூறியதைக் காண்கிறோம். இவ்வாறு அவள் தீர்மானம் எடுத்ததற்குக் காரணம், பிரச்சனைகளை கீழே வைத்து தேவனை மேலே வைத்தாள். தேவன் எல்லாவற்றையும் மாற்ற வல்லவர் என்று அறிந்திருந்தாள். மோவாபியப் பெண்ணான ரூத் கர்த்தரைச் சார்ந்து கொண்ட உறுதி வியக்கத்தக்கது. இஸ்ரவேலின் தேவனை தன் வாழ்நாட்கள் முழுவதும் பின்பற்றுவதற்காகத், தன் சொந்த நாட்டையும் இனத்தையும் விட்டுவிட்டு தேவ மக்களின் இடத்திற்கு வந்ததைப் பார்கிறோம். எந்த ஜாதியாயிருந்தாலும், எந்த மொழி பேசுகிறவராயிருந்தாலும் ரூத்தைப் போலக் கர்த்தரை முற்றிலும் சார்ந்து கொள்ளும் போது, அவர்களைக் கர்த்தர் ஏற்றுக்கொள்கிறார், பாதுகாக்கிறார், ஆசீர்வதிக்கிறார்.
பெத்தலகேமில் நகோமியும், ரூத்தும், போவாசும்: (ரூத் 1 : 19 – 2 : 14)
பெத்லகேம் மட்டும் நகோமியும், ரூத்தும் நடந்து போனார்கள் என்று கூறப்பட்டதிலிருந்து, நடக்கிற தூரத்தில் தான் பெத்லகேம் இருக்கிறதை அறிகிறோம். ஊரார் அவர்களைப் பார்த்து நகோமியா என்று ஆச்சரியப்பட்டனர். ஆனால் நகோமி தன்னை மாராள் என்றே சொல்லுங்கள் என்றாள். மாராள் என்றால் கசப்பு என்று பொருள். நகோமி கர்த்தரைப் பற்றி ஊராரிடம் வெறுப்பாகப் பேசுகிறாள். தான் நிறைவுள்ளவளாய் போனதாகவும் கர்த்தர் அவளை வெறுமையாகத் திரும்பி வரப் பண்ணினார் என்றும் கூறுகிறாள். நிறைவுள்ளவர்களாயிருந்தால் ஏன் அவர்கள் பெத்லகேமில் இருந்து மோவாப் தேசத்தை நோக்கிப் போக வேண்டும். கர்த்தர் அவர்களைப் போகச் சொல்லவில்லை. கர்த்தர் என்னை சிறுமைப்படுத்தினார் என்றும் கர்த்தர் என்னை கிலேசப்படுத்தினார் என்றும் குறை கூறியதைக் காண்கிறோம். இவ்வாறு நகோமி குறை கூறியது சரியல்ல. ஒவ்வொருவரின் துன்பங்களுக்கும் அவரவரின் செயல்களே காரணம்.
பெத்லகேமுக்குள் அவர்கள் நுழைந்த நேரம் வாற்கோதுமை அறுப்பின் நேரம். பெத்லகேமை அடைந்த ரூத் நகோமியின் அனுமதியுடன் கதிர்களைப் பொறுக்கிக் கொண்டு வருகிறேன் என்று புறப்பட்டாள். அறுவடைக்குப் பின் வயல்களில் சிதறிக் கிடக்கும் கதிர்களைப் பொறுக்கிக் கொள்ள ஏழை எளியவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தேவன் நியாயப்பிரமாணத்தில் கட்டளையிட்டிருந்தார். (லேவி 19 : 9, 23 : 22, உபா 24 :19) குடும்பத்தின் நலனுக்காக எளிய வேலை செய்யவும் ரூத் தயங்க வில்லை. கர்த்தர் அவளை போவாசின் வயலுக்குச் செல்லும்படி வழிநடத்தினார். இந்தப் போவாஸ் எலிமெலேக்கின் சொந்தக்காரன். போவாஸ் அறுக்கிறவர்களிடம் வந்து “கர்த்தர் உங்களோடு இருப்பாராக” என்றான். அதற்கு அவர்கள் “கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக” என்றார்கள். போவாஸ் எவ்வாறு தன்னுடைய வேலைக்காரர்களை வாழ்த்துகிறார் என்று பார்க்கிறோம்.
போவாஸ் கண்காணியானவனிடம் ரூத்தைப் பற்றிக் கேட்டு, அவன் அவளிடம் விசாரித்த காரியங்களைப் போவாஸிடம் கூறினான். போவாஸ் முதன்முறை அவளைப் பார்த்தபோதே, அவளிடம் அவருக்கு அன்பு வந்ததைப் பார்க்கிறோம். போவாஸ் ரூத்திடம் அடுத்த வயலுக்குச் செல்ல வேண்டாமென்றும், ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு வேலைக்காரர்களுக்குக் கட்டளையிட்டிருக் கிறேன் என்றும், தாகம் எடுத்தால் அங்குள்ள நீரையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியதிலிருந்து, போவாஸ் அவளிடம் காட்டிய அன்பைப் பார்க்கிறோம். உடனே ரூத் முழங்கால்படியிட்டு போவாசை வணங்கி “எனக்கு எதனால் உம்முடைய கண்களில் தயவு கிடைத்தது என்றும் நீர் எனக்கு ஆறுதல் சொல்லி பட்சமாய் பேசினீரே” என்றாள். அதற்கு போவாஸ் ரூத்திடம் அவளுடைய தகப்பனையும், தாயையும், அவளுடைய தேசத்தையும் விட்டு, மாமியாருடன் வந்ததை அறிந்து கொண்டேன் என்று கூறி “உன் செய்கைகுத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக” என்று வாழ்த்தினார். இந்த வசனம் ரூத்தின் புத்தகத்தில் மையமான வசனம். அதோடு நிறுத்தாமல் அவர்களோடு சாப்பிட ரூத்தை அழைத்தார். அவளுக்காக அரிகளில் சிலதை சிந்த விடுங்கள் என்றும் கூறினார். அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தனர். ரூத் தானும் திருப்தியாகச் சாப்பிட்டுத் தன் மாமிக்கும் எடுத்துக்கொண்டாள்.
நகோமியின் அறிவுரை, களத்தில் ரூத், போவாஸ்: ரூத் 2 : 20, 3 :3 – 18)
ரூத் சென்று வந்த காரியங்களை நகோமி கேட்டு “அந்த போவாஸ் நம்முடைய சொந்தக்காரன் என்றும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவன்” என்றும் கூறினாள். மேலும் நகோமி ரூத்திடம் நீ குளித்து, எண்ணெய்பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக் கொண்டு, அவனுடைய காலடியில் அவனுடைய போர்வையால் போர்த்திக் கொண்டு, படுத்துக்கொள். நீ செய்ய வேண்டியதை அவன் சொல்வான் என்றாள். இதில் குளித்து என்பதற்குப் பாவங்களறத் தூய்மையாக்கு என்று பொருள். (யோ 13: 8,எபே 5: 26 தீத் 3:5) எண்ணைபூசி என்பதற்கு ஆவியில் நிறைந்து என்று பொருள். (எபே 5:18, 1பேது 2:20) வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு என்பதற்கு நற்கிரியைகள் பூண்டு என்று பொருள். (எபே 2: 10) விதவையின் வஸ்திரங்களை ரூத் களைந்து போட்டு களத்திற்குச் சென்று “நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று நகோமி போவாஸிடம் கூறச் சொல்கிறாள். போவாசின் நற்குணத்தை நகோமி நன்கு அறிந்திருந்ததால் ரூத்தை அனுப்பினாள். தவறான நோக்கத்தோடு அவள் அனுப்பவில்லை. வேலைக்காரியாகப் போவாசின் களத்தில் வேலை செய்து கொண்டிருந்த ரூத் தன்னைத் திருமணம் செய்து கொள்ளத் துணிச்சலுடன் கேட்கப் போகிறதற்குக் காரணம் அவள் வேதவசனத்தை விசுவாசித்தாள். (லேவி 25ம் அதி, எண் 35ம்அதி உபா 25ம் அதி) மாமியார் கூறிய காரியங்களை வேதவசனத்தின் அடிப்படையில் அவள் புரிந்து கொண்ட போது அவளுக்கு அந்தத் துணிச்சல் வந்து தன் மாமியார் கூறினபடியே செய்தாள்.
அந்தக் களத்தில் அறுப்புக்காரர்கள் அனைவரும் தங்குவர். அது ஒரு பொதுவான இடம். பாதி ராத்திரியில் போவாஸ் அவளைப் பார்த்து, “ நீ யார்” என்று கேட்டான். “நான் உம்முடைய அடியாளாகிய ரூத் என்றும் நீர் தான் சுதந்தரவாளி” என்றும் கூறினாள். ”நீர் என்னைத் திருமணம் பண்ண வேண்டுமென்று” பொருள். (எசே 16 : 8) கர்த்தரின் கட்டளை என்னவென்றால் திருமணமான ஒரு ஆண் சந்ததியில்லாமல் இறந்து விட்டால், அவனது நிலம் அவளுக்குச் சொந்தமாகாமல் இறந்தவனின் சகோதரர்களுக்குச் சொந்தமாகும். அனாதையாக இருக்கும் அந்த விதவை பராமரிக்கப்படுவதற்காகவும், இறந்தவரின் குடும்பப் பெயர் வழங்கப்படுவதற்காகவும், இறந்தவரின் சகோதரன் அவளை மணம் புரிய வேண்டும்.( உபா 25: 5 -10 ) இறந்தவனுக்குச் சகோதரர் இல்லாவிட்டால் நெருங்கிய உறவினர் அவளைத் திருமணம் செய்வதோடு இறந்தவனின் நிலத்தையும் மீட்க வேண்டும். (லேவி 25 : 26) இவ்வாறு வாழ்வளிப்பவரே சுதந்திரவாளி.
ரூத் தன் கண்களின் இச்சைக்கு இடம் கொடுக்காமல், ஒரு வாலிபனைத் தேடி அலைந்து திரிகிறவளாக இல்லாமல், நடுத்தர வயதுடைய தன்னை நாடி வந்திருப்பதைப் போவாஸ் அறிந்தான். போவாஸ் எந்த உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகத் தெளிவாகக் கடமை உணர்ச்சியுடன் நடந்து கொண்டதைப் பார்க்கிறோம். ஆதரவற்ற ரூத்திற்கும் அவள் மூலம் நகோமிக்கும் உதவி செய்யத் தீர்மானித்துச் செயல்பட்டான். போவாஸ் ரூத்திடம் நீ குணசாலி என்பதை என் ஜனங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். நான் சுதந்திரவாளி தான் என்னிலும் நெருங்கிய சுதந்திரவாளி ஒருவன் இருக்கிறான். அவன் சுதந்தரமுறையாய் விவாகம் பண்ண சம்மதித்தால் அவன் விவாகம் பண்ணட்டும், அவனுக்கு மனமில்லை என்றால் நான் உன்னை சுதந்திரமுறையாக விவாகம் பண்ணுவேன் என்று கூறி, கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான். போவாஸ் களத்தில் உள்ளவர்களிடம் அவள் வந்ததாக ஓருவருக்கும் கூறக்கூடாது என்று கட்டளையிட்டார். அதிகாலையில் அவள் போர்த்துக் கொண்டிருந்த போர்வையை விரித்துப் பிடிக்கச் சொல்லி அதில் 6 படி வாற்கோதுமையைக் கொடுத்து அனுப்பினார்.
போவாஸின் நற்குணம் உடனே சரி என்று அவளுடைய அழகில் மயங்கிக் கூறவில்லை. ரூத்தும் அந்த சுதந்திரவாளி சம்மதித்தால் அவன் உன்னை விவாகம பண்ணட்டும் என்று போவாஸ் கூறிய போது எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இரவில் துணிந்து தம்மண்டை களத்தில் படுத்திருந்த அபயம் தேடி வந்த அபலையை போவாஸ் கைவிடவில்லை. ஆனாலும் காரியங்கள் ஒழுங்காக நடைபெறவேண்டும் என்பதில் கருத்தாக இருந்தார். அதற்கான வாக்குறுதியையும் வழங்கினார். போவாஸ் இயேசுவுக்கு நிழலானவர். இயேசுவும் தம்மை நாடி வந்தவர்களை ஒருபோதும் கைவிட்டதில்லை. அதேபோல் ஒழுங்கில்லாமல் ஆண்டவர் எதையும் செய்ததில்லை. அங்கு நடைபெற்ற அனைத்தையும் கேட்ட நகோமி, ரூத்திடம் திருப்தியாக “என் மகளே, இது என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்த காரியத்தை முடிக்குமுன் இளைப்பாற மாட்டான்” என்றாள்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
போவாஸ் ரூத்தை திருமணம் செய்தல்: (ரூத் 4 :1 – 12)
போவாஸ் பட்டணத்து வாசலில் உட்கார்ந்து அங்கு வந்த அந்த சுதந்திரவாளியை உட்காரச் சொல்லி பட்டணத்து மூப்பர்களில் 10 பேரையும் அழைத்து நம்முடைய சகோதரனான எலிமெலேக்குக்கு இருந்த வயல் நிலத்தை நகோமி விற்கப் போகிறாள். அதை நீர் வாங்கிக் கொள்வதானால் வாங்கிக்கொள்ளும். மனதில்லாவிட்டால் சொல்லிவிடும். நம் இருவரையும் தவிர அதை மீட்கத்தக்கவர் யாருமில்லை என்றான். உடனே அந்த சுதந்தரவாளி நான் அதை மீட்டுக்கொள்கிறேன் என்றான். இது போவாஸுக்கு அதிர்ச்சி அளித்திருக்க வேண்டும். பின்னும் போவாஸ் நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவன் மனைவியையும் விவாகம் பண்ண வேண்டும் என்றும் கூறினான். அவன் அதற்கு பத்து மூப்பர்கள் முன்னிலையில் தனது செருப்பைக் கழட்டி தனக்குச் சம்மதம் இல்லாததை தெரிவித்தான். உடனே போவாஸ் சகல ஜனங்களுக்கும் முன்னால் எலிமெலேக்குக்கும், மக்லோனுக்கும், கிலியோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் வாங்கி அவர்களுடைய பேர் அற்றுப்போகாமலிருக்க ரூத்தை தன்னுடைய மனைவியாக்கினான். அதற்கு அவர்கள் அனைவரும் சாட்சி என்றனர்.
பாதரட்சையானது அதிகாரத்துக்கும் உடைமைக்கும் குறியீடு என்பர். (யோ 1: 27 சங் 60 : 8) சகல ஜனங்களும், மூப்பர்களும் தம்பதிகளை நாங்கள் சாட்சி என்று கூறி “இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த ராகேலைப்போலவும், லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக போவாஸ் எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லகேமில் புகழ் பெற்றிருக்கக்கடவாய்” என்றும் வாழ்த்தினர். மேலும் “உனக்குப் பிறக்கப்போகும் சந்ததி தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப் போல இருக்கும்” என்றனர்.
இயேசுவும் போவாஸைப் போல தமது சொந்த ரத்தத்தையே விலைகிரயமாய்க் கொடுத்து நம்மை விலைக்கு வாங்கி இருக்கிறார். ஆதலால் நாம் பாவங்களில் அழிந்து போகாதபடிக்கு காக்கப்படுகிறோம். (யோ 3:16 1 பே 1 :18,19) புதிய வானத்திலும் புதிய பூமியிலும் நம்மை மீட்கப்பட்டவர்களின் கூட்டத்தில் சேர்த்து நித்திய சுதந்திரவாளியாகத் தேவன் நம்மை ஆக்குகிறார்.( மத் 5 : 5 வெளி 21: 1-7)
தாவீதின் வம்சமான ஓபேத்: ரூத் (4 : 13 – 22)
போவாசுக்கும் ரூத்துக்கும் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அயல் வீட்டுக்காரர்கள் ஒபேத் என்று பெயரிட்டனர். ஒபேத் தாவீதின் தகப்பனான ஈசாயின் தகப்பன். ஓபேத் என்றால் ஊழியக்காரன் என்று பொருள். நகோமி அந்தப் பிள்ளையை எடுத்துத் தன் மடியிலே வைத்து அதை வளர்க்கிற தாயானாள். நகோமி அந்த பிள்ளைக்கு வேதவசனங்களை ஊட்டி வளர்த்தாள். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் தேவனாகிய கர்த்தரை பற்றி கூறி வளர்த்தாள். இஸ்ரவேலரின் மடியில்தான் வாக்குத்தத்தங்களும், உடன்படிக்கைகளும், உபதேசங்களும், பிரமாணங்களும் இருக்கின்றன. நகோமியின் வாழ்க்கைக்குப் பின்னரும் அவர்களுக்கு ஆசீர்வாதங்கள் காத்திருந்தன. இஸ்ரவேலில் மாபெரும் அரச பரம்பரையான தாவீதின் பரம்பரையும், தேவனுடைய குமாரனாகிய இயேசுவும் அவர்கள் சந்ததியில்தோன்றினர்.
போவாசைப் போல் இயேசு
பிதாவுக்கு நெருக்கமான உறவினர் போவாஸ். ஜனங்களை மீட்க மனதுடையவராயிருந்தார். மீட்கத் தன்னையே விலைக்கிரயமாகக் கொடுக்கத் தயாராக இருந்தார். மீட்கத்தக்கவராயிருந்தார். மீட்பதற்கான காரியங்களைச் செய்யத்தக்கவராயிருந்தார். இயேசுவும் இவ்வாறு இந்த உலகத்தை மீட்டுக்கொள்ள எல்லா தகுதிகளையும் பெற்றவராக இருந்தார். (எபி 2 :14- 16 ).
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…
View Comments
ஐயா ரூத் இரண்டாவது மரு மகள் என்றும். மக்லோன் முதல் மகன் என்றும் பதிவு உள்ளது அதற்கான ஆதாரங்கள் குறிப்புகள் உள்ளனவா
அருமையான பதிவுகள்
ரூத் 1 அதிகாரம் 2 & 4
அவனுடைய இரண்டு குமாரரில்
1.ஒருவன் பேர் மக்லோன்,
2.மற்றொருவன் பேர் கிலியோன்
இவர்கள் மோவாபியரில் பெண் கொண்டார்கள்;
1.அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள்,
2.மற்றவள் பேர் ரூத்;