யோனா நூல் பற்றிய கண்ணோட்டம்:
வேதத்திலிலுள்ள பிற அனைத்து நூல்களும் தீர்க்கதரிசனங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. யோனா நூல் மட்டும் ஒரு தீர்க்கதரிசியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. ஒரு தீர்க்கதரிசியின் அனுபவங்களை இந்நூலில் உயிரோவியமாகக் காணலாம். எனவேதான் இயேசு யோனாவின் அனுபவத்துடன் தன் அனுபவத்தை ஒப்பிட்டுப் பேசினார். வேறு எந்த தீர்க்கதரிசியையும் இயேசு தன்னோடு ஒப்பிட்டுப் பேசினதே இல்லை. (மத்தேயு 12: 38 – 41) இந்நூலில் இயேசுவின் முதல் வருகையில் நிகழும் மரணம், அடக்கம், உயிர்ப்பை நிழல் உருவமான ஓவியமாகக் காணலாம். (யோனா 2, மத்தேயு 12 : 38 – 41) யோனா இஸ்ரவேல் தேசத்தையும், கடலானது புறஜாதி தேசங்களையும், பெரிய மீனானது பாபிலோன் தேசத்தையும், மீன் யோனாவை விழுங்கியது பாபிலோன் இஸ்ரவேலரை சிறை பிடித்ததையும் குறிக்கும்.
இந்நூல் அழகான உரைநடை வடிவில் எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் அதிகாரத்தின் இறுதி வசனம் தவிர மீதி வசனங்கள் ஜெபசங்கீதமாக கவிதை வடிவில் உள்ளது. இது ஒரு கற்பனை கதை அல்ல. இஸ்ரவேலில் வாழ்ந்த யோனா என்ற தீர்க்கதரிசியின் வாழ்க்கையின் ஒரு பகுதி இந்நூலாக அமைந்துள்ளது. (2ராஜாக்கள் 14 : 25, மத்தேயு 12 : 38 – 41) தேவன் இந்த உலகத்திலிலுள்ள எல்லா நாடுகளின் மீதும் அன்பு செலுத்துகிறார் என்பதை இந்நூல் நமக்குக் காட்டுகிறது. அசீரியா போன்ற துன்மார்க்கமான புறதேசத்துக்குக் கூட தேவன் இரக்கம் பாராட்டுகிறார் என்பதை இந்நூலில் பார்க்கிறோம். யூதர்களின் குறுகிய மனப்பான்மையையும், தேவனின் பரந்த மனப்பான்மையையும் இந்நூலில் காணலாம்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
யோனா:
யோனாவின் தகப்பன் பெயர் அமித்தாய். யோனா எபிரேயன். கர்த்தரிடம் பயபக்தியுள்ளவன். (யோனா 1:9) யோனா காத்தேப்பேர் என்ற ஊரைச் சார்ந்தவர். (2 இராஜாக்கள் 14 : 25) இந்த ஊர் கலிலேயாப் பகுதியில், நாசரேத்திலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில், செபுலோன் கோத்திரத்தின் எல்லையில் உள்ளது. இப்பொழுது இந்த ஊருக்கு எல்மேசத் என்று பெயர். யோனாவின் கோத்திரம் செபுலோன் கோத்திரம். யோனா இரண்டாம் யெரோபெயாம் காலத்தில் வாழ்ந்தவர். யூதரல்லாத புறதேசத்துக்கு முதன் முதல் அனுப்பப்பட்ட மிஷினரி. யோனாவை விலகி ஓடிய தீர்க்கதரிசி என்றும், பேதை புறா என்றும் அழைப்பர். இராப்பகல் 3 நாள் மீனின் வயிற்றில் உயிரோடிருந்தவர். (யோனா 1 :7) மீனின் வயிற்றிலிருந்து ஜெபம் பண்ணியவர். (யோனா 2 : 19) வேதத்தில் உள்ள 16 சின்னத் தீர்க்கதரிசிகளில் இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் ஒரு தீர்க்கதரிசனம் கூட சொல்லாத ஒரே தீர்க்கதரிசி யோனா.
நினிவே பட்டணம்:
நினிவே அசீரியப் பட்டணத்தின் தலைநகரம். இந்தப் பட்டணத்துக்கு முதன் முதல் அடிக்கல் நாட்டியவர் நிம்ரோத். (ஆதியாகமம் 10 :8, 10) இந்நகரம் அரணான பட்டணமாக இருந்தாலும் அக்கிரமம் நிறைந்ததாகக் காணப்பட்டது. (யோனா 1,2) இந்நகரம் அழகானது. இதன் அழகு பாபிலோன் நகரின் அழகுக்குச் சவாலாக விளங்கியது. இதனை ஆண்ட சனகெரிப் இந்நகரை மேலும் சிறப்புறச் செய்தார். இந்நகரின் அழிவைப்பற்றி செப்பனியாவும், நாகூமும் (செப்பனியா 2 :13 – 15, நாகூம் 1 :1,3 :11) ல் எச்சரித்துள்ளனர். இந்நகரை கிமு 612 ல் பாபிலோனியரும் பின்பு சைத்தியரும், மேதியரும் அழித்தனர். இங்கு பெரிய நூலகமும், அதில் 26000 களிமண் ஏடுகளும் இருந்ததாம். இந்நகரம் விக்கிரகம் நிறைந்ததாகவும் ( நாகூம் 1 :4), அகந்தை நிறைந்த மக்களிருந்த பட்டணமாகவும் இருந்தது. (செப்பனியா 2 :15)
யோனாவுக்கு கர்த்தர் கொடுத்த கட்டளை, யோனாவின் செயல்: ( யோனா 1 : 1 – 3 )
யோனாவிடம் கர்த்தர் நினிவேயின் அக்கிரமம் தன்னுடைய சமூகத்தில் வந்து எட்டியதாகவும் எனவே நீ போய் அதற்கு விரோதமாகப் பிரசங்கம் பண்ணு என்று கூறினார். யோனா கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் கர்த்தருடைய சமூகத்தினின்று விலகி யோப்பாவுக்குப் போய் அங்கு தர்ஷிசுக்கு போகிற கப்பலைக் கண்டவுடன் கூலி கொடுத்து அதில் ஏறிப் பயணம் பண்ணினான்.
யோனா விலகி ஓடக் காரணம்:
யோனா தேவனிடம் நேரிடையாக யோவான் 4 : 2ல் “நீர் இரக்கமும் மனதுருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்பப்படுகிறவருமான தேவனென்று அறிவேன். ” என்று குற்றம் சாட்டினார். வேறு ஒன்றும் தன் வாயால் கூறவில்லை. யோனாவின் காலத்தில் ஓசியா, ஆமோஸ் ஆகியோர் இஸ்ரவேலர்கள் மனம் திரும்பாததால் மாபெரும் அழிவை அசீரியர் கையில் அடைவார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைத்துள்ளதை யோனா அறிந்திருந்ததால் அங்கு போக மறுத்திருக்கலாம். இஸ்ரவேலராகப் பிறந்த யோனா புறஜாதியரான நினிவே பட்டணத்தார் பாவத்திலும், விக்கிரக ஆராதனையிலும் மூழ்கிக் கிடப்பதால் அவர்கள் தேவநியாயத்தீர்ப்பின் அழிவிலிருந்து தப்பி விடக்கூடாது என்று விரும்பியிருப்பார்.
கர்த்தரின் செயல், கப்பல் மாலுமிகள் செயல்: ( யோனா 1 : 4 – 15 )
கர்த்தர் யோனாவைத் தமது சித்தத்துக்கு நேராகத் திருப்ப பெருங்காற்று என்ற சுக்கானை பயன்படுத்தினார். அந்தக் காற்று கப்பலைத் தாக்க வந்த காற்று அல்ல. கப்பலில் தூங்கிக் கொண்டிருந்த யோனாவை தட்டி எழுப்ப வந்த காற்று. அந்தக் காற்றினால் கடலில் பெருங்கொந்தளிப்பு உண்டாயிற்று. அந்தக் கொந்தளிப்பு கடலை உடைக்க வந்த கொந்தளிப்பு அல்ல. யோனாவின் மனதை உடைக்க வந்த கொந்தளிப்பு. அது யோனாவை அழிக்க வந்த கொந்தளிப்பு அல்ல. அது யோனாவைத் தேவனுடைய சித்தத்திற்கு நேராகத் திருப்ப வந்த கொந்தளிப்பு. கப்பற்காரர் பயத்தினால் அவரவரின் தேவனை நோக்கி வேண்டுதல் செய்தனர். கொந்தளிப்பு அமரவில்லை. கப்பலிலுள்ள சரக்குகளை எல்லாம் கடலில் எரிந்தனர். அப்பொழுதும் கடல் அமரவில்லை. இவ்வாறு நடந்து கொண்டிருந்த போதும் அடித்தட்டில் யோனா தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த மாலுமி “அவனிடம் நீ உன் தேவனை வேண்டிக்கொள். நாம் அழிந்து போகாதபடிக்கு சுவாமி ஒரு வேளை நம்மை நினைத்தருளுவார். ” என்றான்.
மாலுமி இது கடவுளின் நிமித்தம் வந்திருக்கிறது என்றறிந்து சீட்டு போட்டு பார்த்தார். சீட்டு யோனாவின் பெயருக்கு விழுந்தது. யோனாவுக்கு தன்னால்தான் இந்தக் கொந்தளிப்பு என்று அறிந்திருந்தும் அதைக் காண்பிக்காமல் தனது பெயரையும் சீட்டில் எழுதிக் கொடுத்தார். மாலுமி சீட்டைப் பார்த்து யோனாவிடம் யார் நிமித்தம் இந்த ஆபத்து வந்திருக்கிறது என்று சொல்லச் சொன்னான். அவனுடைய தொழில், தேசம், ஜாதி எல்லாவற்றையும் பற்றி விசாரித்தான். யோனா மாலுமியிடம் தான் ஒரு எபிரேயன் என்றும், கர்த்தரிடம் பயபக்தி உள்ளவன் என்றும், கர்த்தருடைய சமூகத்தினின்று விலகி ஓடிப் போகிறேன் என்றும் கூறினான். கர்த்தருடைய கையில் சிக்கும் வரை யோனா தன் தவறை ஒத்துக் கொள்ளவேயில்லை.
மாலுமி “நீ ஏன் இதைச் செய்தாய், சமுத்திரம் அமர நாங்கள் என்ன செய்ய வேண்டும். ” என்று கேட்டார். யோனா அதற்குப் பதிலாக “நீங்கள் என்னை சமுத்திரத்தில் போட்டுவிட்டால் சமுத்திரம் அமர்ந்து விடும். ” என்றான். யோனா சொன்ன ஆலோசனையை மாலுமி செயல்படுத்தாமல் வேகவேகமாய் தண்டு வலித்து கரைசேர முயற்சித்தார். அவர்களால் கரை சேர்க்க முடியவில்லை. அவர்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டனர். “இந்த மனுஷனுடைய ஜீவனுக்காக எங்களை அழித்துப் போடாதேயும், குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள் மேல் சுமத்தத்தாதேயும்; தேவரீர் கர்த்தர் உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி” யோனாவை சமுத்திரத்தில் போட்டனர். உடனே கொந்தளிப்பு அமர்ந்தது. மனுஷரின் கைகளில் சிக்கினால் அழிவு வந்திருக்கும், யோனா கர்த்தரின் கரத்தில் சிக்கியதால் கர்த்தர் அவனுக்கு மறுவாழ்வு கொடுத்தார். சத்துருவின் குறி எல்லாம் நம்மை தாக்குவதற்குத்தான் கர்த்தரின் குறியோ நம்மை தூக்கி எடுக்கும்.
கடலுக்குள் யோனா:
ஆதாமைத் தேடிய தேவன், எலியாவைக் கண்டித்த தேவன், யோனாவைக் கண்டுபிடித்தார். தேவனது கண்களுக்கு மறைவாக எதுவும், யாரும் இருக்க முடியாது. (ஆமோஸ் 9 : 2,நீதிமொழிகள் 15 : 3, எபிரேயர் 4 : 13 )
யோனாவை சரியான திசைக்குத் திருப்ப புயலை அனுமதித்த கர்த்தர், அவரைத் தம்முடைய வழிக்கு வரவழைக்க ஒரு மீனை ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார். சமுத்திரத்தில் போட்ட யோனாவைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தி வைத்திருந்த மீன் விழுங்கியது. (யோனா 1 : 17) யோனா மீனின் வயிற்றில் ராப்பகல் 3 நாள் இருந்தார். அப்போது யோனா தான் பாதாளத்தின் வயிற்றில் இருப்பதாக நினைத்திருப்பார். யோனாவுக்கு இரண்டும் ஒன்று தான். இங்கு யோனாவின் உயிர் மட்டும் உடலை விட்டுப் பிரியவில்லை. எலியா சூரைச் செடியின் கீழ் படுத்திருந்ததைப் போல, சிம்சோன் தெலீலாளின் மடியில் படுத்திருந்ததைப் போல, பேதுரு சிறைச்சாலையில் துயின்றதைப் போல, யோனா கப்பலின் அடித்தட்டில் தூங்கினார். எலியா மனசலிப்பின்னால் துயின்றார். சிம்சோன் காமமயக்கத்தில் துயின்றார். பேதுரு கர்த்தருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து துயின்றார். யோனாவோ கீழ்ப்படியாமையினால் துயின்றார். இப்போது கடலின் ஆழத்தில் மீனின் அடிவயிற்றில் ஜெபித்துக் கொண்டிருந்தார். மீனின் வயிறு கப்பலின் அடித்தட்டு போல் தூங்குவதற்கான இடம் அல்ல. தேவனை நோக்கி கதறுவதற்கான இடம்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
யோனாவின் ஜெபம்: ( யோனா 2 : 1 – 9 )
யோனா நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார். பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டார். யோனா “நீரோட்டம் என்னை சூழ்ந்து கொண்டது என்றும், வெள்ளங்களும் அலைகளும் என் மேல் புரண்டது என்றும், தண்ணீர்கள் பிராணபரியந்தம் என்னை நெருக்கினது என்றும், ஆழி என்னை சூழ்ந்தது என்றும், கடற்பாசி என் தலையைச் சுற்றிக் கொண்டது” என்றும் புலம்பினார். “யோனா பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன் என்றும், பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது. ” என்றும் கதறினார். யோனா கர்த்தர் தனக்கு உத்தரவு அருளியதாகவும், கர்த்தர் தன்னுடைய சத்தத்தைக் கேட்டதாகவும், தன் பிராணனை அழிவுக்குத் தப்புவித்ததாகவும், தேவனுடைய பரிசுத்த ஆலயத்தையே நோக்குவதாகவும், அறிக்கையிட்டதைப் பார்க்கிறோம்.
யோனா தன்னுடைய ஆத்துமா தொய்ந்து போகையில் கர்த்தரை நினைத்தாகவும், தன்னுடைய விண்ணப்பம் தேவனது பரிசுத்த ஆலயத்தில் போய்ச் சேர்ந்ததாகவும், பொய்யான மாயையை பற்றிக் கொள்கிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள் என்றும், தான் துதியின் சத்தத்தோடு கர்த்தருக்குப் பலியிடுவேன் என்றும், தான் பண்ணிய பொருத்தனைகளைச் செலுத்துவேன் என்றும் ஜெபம் பண்ணினார். இரட்சிப்பு கர்த்தருடையது என்று முடித்தார். யோனா மனம் திரும்பி கர்த்தருடைய கரத்தில் விழுந்ததால் தேவன் யோனாவுக்கு அற்புதம் செய்தார்.
கர்த்தர் மீனுக்குக் கொடுத்த கட்டளை:
கர்த்தர் மீனிடம் யோனாவை விழுங்கத்தான் கட்டளையிட்டாரே தவிர அதை ஜீரணிக்கக் கட்டளையிடவில்லை. எனவே மீன் இந்த மூன்று நாட்களும் உபவாசம் இருந்திருக்கும். யோனா சுவாசிப்பதற்குத் தேவையான காற்றை மீனின் வயிற்றில் தேவன் கொடுத்திருந்தார். மீனிடம் கர்த்தர் யோனாவை கரையில் கக்கக் கட்டளையிட்டார். அதன்படி மீன் கரையிலே யோனாவை கக்கியது. (யோனா 2 :10) மீனானது தேவன் யோனாவை விழுங்கக் கட்டளையிட்டவுடன் விழுங்கியது. தரையில் கக்கக் கட்டளையிட்டவுடன் தரையில் கக்கியது. மீன்கள் கூட தேவனுடைய கட்டளையை நிறைவேற்றியதை இந்நூலில் காண்கிறோம். யோனாவை மீன் தரையில் கக்கின உடன் விடுதலை அடைந்தது போல, மீனும் தனக்குள் பெரிய விடுதலையை உணர்ந்திருக்கும்.
கர்த்தர் யோனாவிடம் கூறியது, யோனாவின் செயல், நினைவே மக்களின் செயல்: (யோனா 3 : 1 – 10 )
கர்த்தர் யோனாவிடம் கூறியது:
யோனாவின் செயல்:
நினிவே மக்கள் செயல்பட்டது:
யோனாவின் கோபம், தேவனின் அறிவுரை: ( யோனா 3 :10 – 4 :11 )
கர்த்தர் நினிவே மக்கள் தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பியதைப் பார்த்து அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைச் செய்யாதிருந்தார். தேவனுடைய இரக்கம் யோனாவுக்கு மிகவும் விசனமாக இருந்ததால் கர்த்தரிடம் நான் உயிரோடு இருப்பதைப் பார்க்கிலும் சாகிறது நலம் என்றார். யோனா நகரத்தில் இருந்து புறப்பட்டு அங்கு சம்பவிக்கப் போவதைப் பார்க்க நகரத்துக்குக் கிழக்கே தனக்கு ஒரு குடிசையைப் போட்டு அதன் நிழலில் உட்கார்ந்தார். கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை யோனாவை விட உயரமாக ஓங்கி வளரப் பண்ணினார். அந்த நிழலைப் பார்த்து யோனா மிகவும் சந்தோஷப்பட்டார். மறுநாள் தேவன் ஒரு பூச்சிக்குக் கட்டளையிட்டு அதை அரித்துப் போடச்செய்து, செடியை காய்ந்து போகப் பண்ணினார்.
தேவன் உஷ்ணமான கீழ்காற்றைக் கட்டளையிட்டார். அதனால் யோனா மிகவும் சோர்ந்து போய் தனக்குள்ளே சாவை விரும்பினார். அதுமட்டுமல்லாமல் “நான் மரணபரியந்தம் எரிச்சலாய் இருக்கிறது நல்லது” என்றார். தேவன் யோனாவிடம் “நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு ராத்திரியிலே முளைத்ததும், ஒரு ராத்திரியிலே அழிந்து போனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே வலதுகைக்கும், இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத 120000 பேருக்கு அதிகமான மனுஷரும் மிருகஜீவன்களும் இருக்கிற மகாநகரமாகிய நினிவேக்காகப் பரிதபியாமலிருப்பேனோ” என்றார்.
யோனாவின் தவறுகள்:
கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்படியாமல் நினிவேக்குப் போகாமல் தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறியது தவறு. தனது ஊழியத்தினால் 120000 பேர் மனம் திரும்பியதைக் கண்டு மகிழ்ச்சி அடைய வேண்டிய யோனா மனவருத்தமும், கடுங்கோபமும் அடைந்தது தவறு. தனது புகழா, ஜனங்களின் இரட்சிப்பா எது முக்கியம் என யோனா சரிவர புரியாதது தவறு. நினிவேமக்கள் மனம் திரும்பியதால் இனி தேவன் நினிவேயை அழிக்கமாட்டார் என்று அறிந்திருந்தும், அதைக் காணக் காத்திருந்தது முரண்பாடான செயல். அற்ப ஆமணக்குக்காகப் பரிதபித்த யோனா, மனித உயிர்களுக்காகப் பரிதாபம் காட்டாதது பரிதாபமானது.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
முடிவுரை:
மக்கள் யாவரும் மனம் திரும்ப வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார் என்பதையும், மக்களுக்காகப் பரிதாபப்படுகிறார் என்பதையும் யோனா நூல் நமக்கு விளக்குகிறது. கப்பற் பயணிகளுக்குத் தம்மை வெளிப்படுத்தினார். நினிவே மக்களைப் பாவத்தினின்றும் அழிவினின்றும் இரட்சித்தார். யோனாவுக்குக் கற்றுக் கொடுத்தார். நமக்கும் கற்றுத் தருகிறார். தேவன் பொல்லாத மக்கள் மீதும் அக்கறை கொள்வதை இதில் காண்கிறோம். நினிவே மக்களின் மனமாற்றத்திற்குக் காரணம் அவரது பிரசங்கசாதுரியம் அல்ல. தேவனே களத்தை ஆயத்தப் படுத்தினார். ஒரு பிரசங்கக் கருவியாக மட்டும் யோனா அனுப்பப் பட்டார். நாமும் தேவனுடைய கருவியாகப் பயன்பட நம்மை ஒப்புக் கொடுப்போம்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…
View Comments
this website was so much useful it made me so happy and it was very detailed i loved it !! absoluetly!!!!
good job..
keep it up!!
Your website was useful to learn Bible, thanks a lot God bless your minister
Thank God
Thank God